Breaking News

„பனிவிழும் மலர் வனம்“??? அத்தியாயம்-48??

மதுமதியால் இதற்கு மேல் மௌனமாக இருக்க முடியவில்லை.. “ சங்கர் பீளீஸ் சாலையோரம் காரை நிற்பாட்டிறியா? நான் உன்னோடு பேச வேணும்… “ என்றதும், சங்கர் தீடீரென வேகத்தை குறைத்து சடுதியாக பிரேக்கை போட கார் ஒரு குலுக்கலோடு நின்றது. பெருங்குடலும் சிறுகுடலும் ஒன்றோடு ஒன்று பிணைந்து மேலெழுவதாக மதுமதி உணர்ந்தாள்.. வயிற்றை பிடித்தபடி சற்று சுவாசத்தை சீராக்கின பின்புதான் „“ இப்படியா சடுதி பிரேக் பிடிப்பாங்க? “ என செல்லமாக சங்கரை கடிந்து கொண்டாள். சங்கர் அதற்கு ஏதும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. “ என்ன சொல்லப்போகிறாய்“ என கண்களாலேயே அவளை வினாவுவதுபோல் பார்த்தான். „“ சங்கர் very sorry.டா… எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைடா… என்னாலை அனசனை மறக்க முடியலைடா.. “ என்றபடி அவனின் கரங்கள் இரண்டையும் பற்றி கெஞ்சினாள். சங்கர் இதை எதிர்பார்த்து இருந்தபோதும் கூட அவனால் அந்தக்கணம் இதை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.. விடுக்கென அவள் கையை உதறியபடி““ நீ என்ன சொல்கிறாய்?. இதென்ன விளையாட்டா?? நீ சம்மதித்தபடியால்தானே கல்யாணநாளே குறித்தேன்.. இதனால் எத்தனைப்பேரின் நிம்மதி தொலையும் என்று உனக்குத்தெரியுமா? படித்தும் முட்டாள்ப்பெண்ணாக இருக்கிறியே. எப்படி இதை பெரியவங்களுக்கு நாம் சொல்ல முடியும் ?? „என்றபடி கார் கண்ணாடியில் ஓங்கி அறைந்தான். மதுமதி தாரைதாரையாக கண்ணீர் சிந்தினாள். அதை பார்க்க சங்கருக்கு பரிதாபத்திற்கு பதிலாக ஆத்திரம்தான் வந்தது..“ கண்ணீரால் காரியத்தை பெண்கள் இலகுவில் சாதித்து விடுவார்கள்.“ மனதிற்குள் பேசிக்கொண்டான். “ மது வா ஏறு காரில்.. வீட்டைபோய் ஒரு முடிவு எடுப்போம் “ என நிதானத்துடன் சொல்லியபடி காரைச்செலுத்தினான்.

சங்கரின் மனம் அழுதுகொண்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தான். விருப்பமில்லாதவளுடன் வாழவும் அவளை வற்புறுத்தவும் விரும்பவில்லை. எத்தனை ஆசைகளுடன் அவன் கட்டிவைத்த அந்த அழகான மனக்கோட்டை அந்த கணத்திலேயே எரிந்து சாம்பலாகியது. வீடு வந்து சேரும்வரை இருவரும் ஒருவரோடு ஒருவர் எதுவுமே பேசவில்லை.

அங்கு சங்கரும் தாயும் தந்தையும் தொலைக்காட்சியில் மூழ்கிப்போயிருந்தனர். அமைதியாக சங்கரும் மதுவும்உள்ளே சென்று உடை மாற்றி கூடத்தில் வந்து அவர்களோடு சோபாவில் அமர்ந்தனர்.. மதுமதி பார்வையாலே சங்கரை கெஞ்சினாள்.. சங்கர் கல்யாணநிறுத்தத்தை எப்படி தம் பெற்றோருக்கு சொல்வதென திண்டாடியப்படி முழித்துக்கொண்டுஇருந்தான்.. அப்போதுதான் இருவரையும் பார்த்த சங்கரின் தாயார்““ எப்ப வந்தனியள்? எங்கு போனியள்?? காப்பி போட்டு தரட்டா? என „“ வேணாம் அம்மா.. நான் வந்து வந்து… ஒன்றைப்பற்றி உங்களோடை ….இப்பவே பேசணும்… “ என கூறினான்.
அதற்கு சங்கரின் தாயார் „“ என்ன அப்படி அவசர பேச்சுவார்த்தை கண்ணா?? சொல்லு“ என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தினார். சில நிமிடங்கள் அங்கு ஒரு மயான அமைதி நிலவியது. மெல்ல வந்து தன் தாயின் அருகே அமர்ந்தவன் „“ அம்மா .. எனக்கு இந்த கல்யாணத்தில் எள்ளளவும் இஷ்டமில்லை..மதுவை எனக்கு இப்ப பிடிக்கவில்லை.. . நான் இன்னொருத்தியை பார்த்தேன் பேசினேன்..பழகினேன்..இவளைவிட அவள் அழகில் தேவதை… நான் அவளை உசிராக விரும்புகிறேன் அம்மா. “ என்றான். அதைக்கேட்ட சங்கரின் தாய் பயங்கர கோபமடைந்தார்..“ சங்கர்.. என்ன நியாயம் இது?? ஐயோ மது பாவமடா… கல்யாணம் வரை வந்து அவளை வேண்டாம் என சொல்லுறியே.. பொம்பிளைப்பாவம் பொல்லாதது .. உனை ஒருபோதும் வாழ விடாது.. நிற்பாட்டு உன் பேச்சை இப்ப… இறைவனை பாடித்துதிக்கும் வாயாலே உனை ஏச வைக்காதே.., அவள்தான் என்றும் என் வீட்டு மருமகள்.. சொல்லிற்றன்““ என தன் ஆத்திரம் தீரும் மட்டும் கத்தினார்.புலம்பினார். சங்கர் மதுமதியைப் பார்த்தான்.. விழிகளாலே பேசினான்“ அடியே அழகான இராட்சசியே! உனக்காக எல்லாப்பழியையும் நானே சுமக்கிறேன்., பார்த்தியா? எவருமே உனை எந்த சந்தர்ப்பத்திலும் அவதூறாக நிந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான்… என் காதல் இசைக்காத புல்லாங்குழலாய் போனாலும் பரவாயில்லை ..என்னவளே… நீ வாழவேண்டும் எல்லையில்லாத மகிழ்ச்சியோடு..““ சங்கரை பார்த்த மதுமதியின் விழிகள் இமைக்க மறந்தன. . “ சங்கர்!! எப்படியடா உன்னால் மட்டும் இப்படி முடிகிறது?? எனக்காக எல்லோர் முன்னும் குற்றவாளியாக நீ..நீ மனிதன் இல்லையடா.. எனை வாழவைக்க வந்த தெய்வமடா நீ ..“ வாய்வரை வந்த வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பார்வையாலே சங்கருக்கு நன்றி சொன்னாள்.

சங்கரின் தாயாரின் குரல் கூடமெல்லாம் ஓங்கி ஒலித்தது. பத்ரகாளிபோல கூடத்திலே நின்றார்.. சங்கரின் தந்தை எதுவும் பேசாது மௌனமாக இருப்பதைப்பார்த்து இன்னும் பல மடங்கு அவரின் கோபம் அதிகமாகியது “ நீங்களும் இருக்கிறியள்… எனக்கென்று வந்து வாய்ச்சியள்… கோத்திரம் சாஸ்திரம் கொண்ட நம்ம குடும்பத்திலை இந்த பிள்ளையாண்டான் இப்படி வந்து பிறந்திட்டானே…கல்லுப்பிள்ளையார் மாதிரி நீங்க இருக்கிறியளே..நாலு வார்த்தை அவனைக்கேளுங்கோவன்.. எந்த ஆத்திலை இப்படி சமாச்சாரம் நடக்குது.. நாளைக்கு நாங்க வெளியிலை தலைகாட்ட முடியுமே? அபச்சாரம்.. கடவுளே!““ அழுதார்.

சங்கரின் தந்தைக்கு தன்மகனைப்பற்றி தெரியாதா என்ன? இதில் ஏதோ ஒன்று சூட்சுமம்இருக்கிறது என்பது மட்டும் அவருக்குப்புரிந்திருந்தது. “ இப்ப என்ன குடியா முழிகிப்போச்சு… அவனுக்கு பிடிக்கலையென்றால் என்ன செய்யிறது?? பேசாமல் இரு.. நான் சங்கரோடு பேசுறேன்“என்று சங்கரின் தந்தை சொன்னதுதான் சங்கர் தந்தையை பார்க்க கூச்சத்தோடு அங்கிருந்து மாடிக்கு ஏறி தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.
சங்கரின் தாய் மதுமதியை தோளோடு சாய்த்து அரவணைத்து“ மதும்மா கவலைப்படாதே.. நான் இருக்கேன்.. உனை விட மாட்டேன்.. நீதான் என்றும் என் வீட்டு மருமகள்… நான் பெற்றபிள்ளை நான் போட்ட கோட்டைத்தாண்ட மாட்டான்… நீ போய் கொஞ்சம் ஓய்வெடும்மா.. படத்திற்கு விளக்கு வைச்சிட்டு வாறன்.“என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் எதுவுமே அறிந்திராத அந்தத்தாய்.

சுவாமி அறையினுள் விளக்கேற்றி தன் கவலைகளையெல்லாம் கந்தனின் காலடியில் கொட்டினார்.. உரத்த குறளில் கந்தசஷ்டிகவசத்தை அழுகையினூடு பாடியது எல்லோர் காதுகளிலும் விழ பூசை அறையை நோக்கி எல்லோரும் படையெடுத்தனர்.கவலைகள் வரும் சமயங்களில் சங்கரின் தாயார் கவசம் படிப்பதை அவரின் குடும்பமே அறிந்து இருந்தது உண்மைதான். ஆனாலும் இந்தளவு வேதனையோடு அவரின் குரல் வெளிப்பட்டதை இதுவரை அவர்கள் பார்த்திருக்கவில்லை..““
(தொடரும்)
ஆக்கம் ரதிமோகன்

leave a reply