Breaking News

*என்னுயிர்க்காதலிக்கு *கவிதை காதல்நேசன்

 

தொட்டுப்பேசிப்பழகும் துரிதகாதல் அல்ல அது
…..தீண்டவிடாத தூய தனிக்காவியக் காதலது.
பட்டும் படாமல் கண்களால் கட்டியனைத்து,
…..கனி-இதயங்கள் முத்தமிடும் முழுக்காதலது.
மொட்டு மனங்களை மெல்லவிரித்து பூங்காதலை
…….மலரவிட்ட புனித இதயங்கள் அவை .
பட்டுவண்ண ரோசாவின் பால்முகம் காண.
……பாதையிலே நான் பார்த்து நிற்க.
கிட்டவந்த அவளோ. கீற்றாய்ஒரு பார்வை தர
…..கிறங்கி நானும் கிறுக்கனாய் பாதை மாறிட
தட்டாம் பூச்சிகள் போல் எம் மனங்கள்
……..தரனியெல்லாம் தாராளமாய் பறக்க .
கட்டாக்காலியாக கண்ட படி திரிந்த நான்
…கல்லூரி, காரியாலயம், என கடையேறிவிட,
பொட்டுவைத்த பூங்கொடியுன் நினைவோடு-என்
….பொன்னான நினைவுகளைப் புலரவிட்டேன்-என் .
சட்டைப்பையில், சாதிக்கிளியே!! உன்காதல்மடலை
…….சலவையின் போது-என் சகோதரி கண்டெடுத்து
வட்டவட்ட எழுத்தாய் உள்ளது பெட்டையும் நல்ல
……. வடிவோ? என, கிண்டல் செய்ய , சத்தியமாய்,
திட்டவட்டமாக நினைத்துக் கொண்டேன்,- எம்
…….. திருமணம் நிச்சயம் நடக்கும் என்று.
பட்டுப் போகும்எம் காதல் பாதியிலே என,
………பகல்க்கனவு கூட நான் கண்டதில்லை.
மட்டமான அந்த சாதிப்பேயால் எத்தனையோ
…..மணங்கள் இங்கு மறுக்கப்பட்டு மரணமாகின.
கட்டம் கட்டமாக எம் காதல் கதையும்
……களைத்துக் கலைந்து காணாமல் போனதே!!
கெட்டிமேளம் கேட்கிறது எங்கோ ஒருகோவிலில்,
……கட்டுகிறான் தாலியை யாரோ,என்னுயிர்க்காதலிக்கு.
ஆக்கம் —காதல்நேசன்

leave a reply