Breaking News

„பனி விழும் மலர் வனம்“??? அத்தியாயம்-50

அந்த நேரம் பூஜை அறையினுள் தீடீரென சிவபூஜைக்குள் கரடி நுழைந்ததுபோல பிரவேசித்த சங்கர் இதைப்பார்த்து கோபமடைந்தான். அவளின் கைகளில் இருந்த சீட்டை பறித்து தாறுமாறாக கிழித்து வீசினான். “ மது உனக்கென்ன பைத்தியமா? முற்போக்குச்சிந்தனை கொண்ட பெண்ணென நினைத்தேனே.. சீ நீயா இப்படி? “ என்றவன் மாடிப்படிகளில் இறங்கி வேகமாக நடந்து போவது தெளிவாகக்கேட்டது.. அவனின் நடையில் கோபம் துல்லியமாக தெரிந்தது.. அப்போதுதான் மதுமதி தன்செயலை நினைத்து நினைத்து வருந்தி தலைகுனிந்தாள்.மதுமதிக்கு சங்கர்மேல் பரிதாபம் வந்தது. தனது முட்டாள்த்தனத்தால் கல்யாணம் வரை சங்கரை கொண்டு வந்து நிறுத்தி அவன் மனதில் ஆசைகளை வளர்த்த பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் அவளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அதைவிட சங்கரை குற்றவாளியாக்கி குடும்பத்தவரிடம் அனுதாபம் பெற்றது அதைவிட மகா பாவம்.. உண்மையில் ஆண் என்பவன் ஒரு பெண்ணின்மேல் மெய்க்காதல் கொண்டால் அவளுக்காக எந்த அவமானத்தையும் ஏன் தன்னுயிரைக்கூட கொடுக்க தயங்க மாட்டான் என்பதற்கு உதாரணமாக சங்கர் தெரிந்தான்.

சங்கீதா எதுவும் சொல்லாது மதுமதியின் தோளை ஆதரவோடு தட்டியபடியே அங்கிருந்து அகன்று போய் அழுது கொண்டிருந்த தன் குழந்தையை தூக்கியபடி “ மதுமச்சி ..ஒரே மழை இருட்டாக இருக்கிறது.. நாங்க போகப்போறம்..ஏதோ இனி முடிவு உன் கையில்.. “ என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள். அந்தக்கணங்களில் மதுமதி தான் ஒருத்தி மட்டுமே இவ்வுலகிலே தனித்துவிடப்பட்டவளாய் உணர்ந்தாள். அப்போதுதான் அவளுக்குள் உறங்கிங்கொண்டிருந்த புதுமைப்பெண்ணிற்குரிய ஒரு எழுச்சி விழித்துக்கொண்டது.. அவள் இனியும் மௌனமாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் கண்ணீருக்கு தான் தத்துப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதை புரிந்தாள் ..தெளிந்தாள்.

இனி ஒருபோதும் அவள் அழக்கூடாது.. அழுவது கோழைத்தனம் என்பது அவள் மனதின் முடிந்த முடிவானது.. பல மாதங்களாக அனசனுடன் தொடர்பறுந்துபோயிருந்த தொலைபேசியை எடுத்து அவன் பெயரை தேடி அழுத்திய நொடியில் கம்பீரமாக அனசனின் குரல் கேட்டது.. அவளால் உடனே பதிலளிக்க முடியவில்லை..எப்படி ஆரம்பிப்பது? எதை பேசுவது என்று தெரியாமல் தடுமாறினாள். எதிர் முனையில் அனசன் „“ மது பேசு.. ஏனிந்த மௌனம்.. „ஆனந்த பரவசத்தில் அவனின் குரல். திக்கி திக்கி அவள் “ அனஸ் நீ நலமா“ என தொடங்கி டெனிஸ் மொழியில் அவர்களின் சம்பாசணை தொடர்ந்தது. தன் நிலையை தெளிவாக மதுமதி எடுத்துரைத்தாள். அனசனுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. தன்னைக்கிள்ளி பார்த்துக்கொண்டான். இது கனவு என்பதுபோல் ஒரு எண்ணம் அவனிடம் இருந்தது.இந்திரலோகமே தரையிறங்கி வந்ததான ஒரு உணர்விலே அனசன் மிதந்தான். அவள் நல்லாக வாழ வேண்டும் என்பதற்காக தன் காதலை துறக்க நினைத்தவனுக்கு அவளே திரும்ப வந்து காதலோடு இனிமையாக பேசியது வானத்திலே பறப்பதுபோல் இருந்தது. காற்றினிலே கலந்து அவர்களின் காதல் கீதமிசைத்தது. நிமிடங்கள் பல மணிகளாயின.. தொலைபேசி வைக்கப்படவே இல்லை.. பிரிந்தவர் கூடினால் சொல்லவும் வேண்டுமா…

இவற்றை எல்லாம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்த சங்கரின் மாமாவும் மாமியும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.. “ பாவம் மது … அவள் மகிழ்ச்சியாக இருக்க வேணும் .. சங்கர் இப்படி திடீரென மாறுவான் என நான் நினைக்கலைப்பா.“ என மாமி மாமாவின் காதுகளில் கிசுகிசுக்க அனுதாப அடிப்படையில் அவளின் காதலுக்கு அங்கு பச்சைக்கொடி காட்டப்பட்டாயிற்று..

சங்கர் வீடு வந்தபோது சாமம் 12 ஐ தாண்டி இருந்தது. நீண்ட காலத்தின் பின் குடித்து இருந்தான். எல்லோரும் நித்திரையில் இருந்தார்கள்.. தட்டித்தடுமாறி படிகளில் ஏறினவன் . தன் அறையினுள் நுழைந்தான். அவனுக்கு வீடு சுற்றுவது போல் இருந்தது. உடுப்பை மாற்றாமலேயே கட்டிலில் சாய்ந்தான்.  (தொடரும்)

ஆக்கம் ரதிமோகன்

leave a reply