Breaking News

„பனிவிழும் மலர்வனம் அத்தியாயம்-51

சங்கரின் மனமும் உடலும் சோர்வுற்றிருந்தது உண்மைதான். ஒரு கிழமைக்கு மேலாக அவன் வைத்தியசாலைக்கு போகாமல் வீட்டில் நின்றமைக்கும் காரணமே குறித்த திகதியில் அவனின் கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்ற மனத்தாக்கமே, இல்லாவிட்டால் அவனின் நண்பர்கள் மத்தியில் கேலிக்குரிய பேசுபொருளாக்கப்படுவான் என்ற வேதனையும் அவனிடம் மிகுந்து இருந்தது. அவனின் தொழிலும், அசத்தலான அழகும் டெனிஷ் , தமிழ் யுவதிகளின் காதல்வலை விரிப்புக்குள் சிக்காமல் இருந்தமைக்கும் காரணமாகிப்போனவள் இந்த முறைப்பொண்ணு மதுமதி என்றால் தப்பே இல்லை. அவள் மேல் கொண்ட கண்மூடித்தனமான ஒருதலைக்காதல் இன்னொரு பெண்ணை ஏறெடுத்துப்பார்க்க முடியாத அளவு தடுத்து இருந்தது என்பது மறுக்க முடியாத நிஜமே.

எப்போதும் அவனோடு ஒன்றாக வேலைசெய்யும் தாதி சந்தியா என்ற பொண்ணு இவன்மேல் அளவுகடந்த நேசம் கொண்டவள். ஒருநாள் அவளே அவனிடம் நேரடியாகவே தன்காதலை தெரிவித்திருந்தாள். அதற்கு பதிலாய் ஒரு மென்புன்னகையுடன் நழுவியிருந்தான் சங்கர். ஆனால் இன்று அவளைத்தேடிப்போய் தன் சங்கடநிலைமையை எடுத்து விளக்கி கூறியபோது எதுவித ஆட்சேபமும் இன்றி அவள் சம்மதித்தது அவனுக்கு எல்லையற்ற சந்தோசத்தை அள்ளித்தெளித்தது. இந்த சிக்கலான பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்ற சந்தோசத்தில் நண்பர்களுடன் கூடி ஒரு கேளிக்கை விருந்தொன்றில்தான் அதிகப்படியாக குடித்திருந்தான் சங்கர். சந்தியா மதுமதியைவிட நிறத்திலும் அழகிலும் சற்று கம்மியாக இருந்தபோதும் உள்ளத்தினால் உயர்ந்தவள், அழகானவள்.. கண்களில் தெரியும் கருணையும் ,அன்பும் , மென்சிரிப்பும் அவளிடம் பேசுவோரை திரும்பபேச தூண்டும். சங்கரின் வலதுகையைப்போல வைத்தியசாலையில் உலா வருபவள். இறுதிப்போரில் தனது பெற்றோரை இழந்து சொல்லெணாத்துன்பங்களைத்தாண்டி டென்மார்க் வந்து இன்று ஏதோ ஒரு மனதிற்கு பிடித்தமான வேலையோடு தானுண்டு தன்வேலையுண்டு என்று சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருப்பவள்.மழை விட்டாலும் தூறல் போகாதமாதிரி போர்விட்டுச்சென்ற ரணங்கள் இன்றும் அவள் நெஞ்சோரம் மாறாமலே ஆழப்பதிந்து போனதொன்று. இதற்கு நிவாரணம் பெற்றுத்தர எவராலும் முடியாது. இந்த வைகாசி மாதம் என்றாலே அவளின் வாழ்க்கை இரத்தக்கண்ணீரில் எழுதப்பட்ட காலமது. இந்த மாதத்தில் தன் கல்யாணம் என்றதும் அவளுக்கு துளிகூட விருப்பம் இல்லாதுஇருந்தபோதும் அவள் நேசிக்கும் சங்கருக்காக தலையசைத்தாள் சந்தியா.

சங்கருக்கு தன் தாய்க்கு அவளை என்ன மதம் ,ஜாதி என சொல்லி அறிமுகப்படுத்துவதென்பதில் பெரியதொரு உறுத்தல் இருந்தது. அவளைப்பற்றி எந்த விபரமும் அவன் அறிந்திருக்கவில்லை..ஆசாரமான குடும்பத்திற்குள் வரும் புதியஉறவு இது. குலம் கோத்திரம் பார்ப்பதில் தப்பேதும் இல்லை என்பதும் அவன் பக்க நியாயமாகவும் இருந்தது. எது எப்படி இருந்தாலும் அவசரத்தில் சங்கர் கூறிய ஒரு பொய்யை உண்மையாக்கும் சமயத்தில், தன் மனதிற்கு பிடித்தவள் சந்தோசமாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கம் ஒன்றே டாக்டர் சங்கர் மனதில் இருந்தது.

எப்போதும் அதிகாலையில் கண்விழிக்கும் சங்கர் எழுந்து வராததை பார்த்த சங்கரின் தாயார் அறைக்கதவை மெல்லமாக தட்டினார்.. தாயின் குரல் கேட்டதும் அவசரஅவசரமாக உடையை கலைந்து லுங்கிக்குள் தன்னை நுழைத்தவன் ஓடிப்போய் கதவைத்திறந்தான். „“ குட் மோனிங் மை மம்மி“ என சிரித்தபடியே கதவைத்திறந்தான். “ சரி சரி மோனிங் .. என்ன ஐயா ஹாஸ்பிட்டல் போகலை“ என்றபடி குளித்திட்டு வா கண்ணா.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். என்றபடி அங்கிருந்து சமையற்கட்டிற்குள் நுழைந்தார்.

தாயகத்தில் முற்பகலைத்தாண்டி இருந்தது.. மதுவின் அம்மா மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்., அந்த நேரம்தான் மதுவின் அக்கா தோளில் பிள்ளையை சுமந்துகொண்டு வேகாத வெயிலில் பொடிநடையாக வேர்த்து விறுவிறுக்க வந்திருந்த கோலத்தைப் பார்த்து தங்கை கொல்லென சிரித்தாள்.. “ உனக்கு எனைப்பார்க்க சிரிப்பாக கிடக்கு.. என்ன? “ செல்லமாக தன் தங்கையை கோபித்து்கொண்டு தாயிடம் சென்று குழந்தையை கொடுத்தாள்.. „“ ஏண்டா இந்த வெயிலுக்கை நடந்து வந்தாய்.. ஒரு ஓட்டோவை பிடித்துக்கொண்டு வாறதை விட்டிட்டு… சாயந்தரமாக அவர் வேலையாலை வந்தாப்பிறகு வந்திருக்கலாமே““ என மகளை அன்பாக கடிந்தபடி தன் பேரப்பிள்ளையை தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டார்.

மதுமதியின் அக்காள் தாயிடம் சொல்லவந்த விடயத்தை எப்படி அதை ஆரம்பிப்பது என குழம்பி தவிப்பது முகத்திலே தெட்டத்தெளிவாகத் தெரிந்தது.. அக்காளை உன்னிப்பாக அவதானித்த தங்கை “ என்ன ஆச்சு அக்கா? உன் முகமே சரியில்லையே., அத்தாரோடை சண்டையோ““ காதோரம் கிட்ட வந்து கிசுகிசுத்தாள். “ ஏய் பேசாமல் இருடி.. எனக்கொன்றும் இல்லைடி.. மதுவை கட்ட சங்கர் மாட்டன் என்றிட்டானாம்.. அனசனை கட்டி வைப்பம் என மாமி சொன்னா.. அதை அம்மாக்கு விபரமாக எடுத்துச்சொல்லத்தான் ஓடி வந்தனான்…““ என்றதும் தமக்கையை கட்டியணைத்த தங்காள்““ நான் சொன்னேனே உண்மைக்காதல் ஒருபோதும் அழிவதில்லை.. கடவுளே உனக்கு நன்றி… „“ என அக்காளை பிடித்து ஒரு சுற்று சுற்றினாள்.. “ அடச்சீ விடு கையை.. இப்ப அம்மா அழப்போறா என்ற டென்சனிலை நான் கிடக்கேன்.. இப்ப இது வேறை.. எப்படியடி.. நம்ம குலத்திற்கை வேதக்காரனை அதுவும் வெள்ளைக்காரனை சேர்ப்பதோ??சங்கர் செய்த வேலையை பார்த்தியா? மது பாவம்“““ என்றபடி சாப்பாட்டு மேசையில் பரிமாறுவதற்கு தயாராக சப்பாட்டை எடுத்து வைத்தாள்.

எல்லோரும் ஒன்றுகூடி உணவு அருந்தும் சமயம் பார்த்து மெல்ல மதுமதி பற்றிய தகவலை தாயின் காதில் போட்டாள் மதுவின் அக்காள். தாயின் முகத்தில் கோபமும், கவலையும் ஒரே நேரத்தில் பிரதிபலித்தபோதும் பொறுமையோடு கூறினார்“ எல்லாம் விதிப்படியே நடக்கும். படைத்தவன் எழுதிவைத்ததை மாற்றவா முடியும்? எல்லாம் நன்மைக்குத்தான்.., இரு மனங்கள் ஒத்துப்போனால்தானே இல்லறம் சிறக்கும்..நல்லது கல்யாணத்திற்கு முன் சங்கரின் குணம் தெரிந்தது நல்லதாகப் போச்சு..“ இதைக்கேட்ட அக்காளும் தங்கையும் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதன்பிறகு டென்மார்க்கில் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒன்றும் விடாமல் மதுவின் அக்காள் கூறிமுடித்ததும் தாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அதேசமயம் மதுவிற்கும் அனசனுக்கும் கல்யாணம் இந்து முறைப்படி நடக்கும் என்பதில் மனதில் ஒரு திருப்தி அந்த தாய்க்கு இருந்தது. “ எப்படித்தான் இந்த என்ன காதலும் கத்தரிக்காயும் என்றாலும் வெள்ளைக்கார குடும்ப மருமகளாக எப்படித்தான் சமாளிப்பாளோ?? “ என்ற ஏக்கத்தோடு கூறியதும் , அதற்கு மதுமதியின் சுட்டித்தங்கை “ அம்மோய்…, உங்களுக்கு ஒன்னுமே தெரியாது.. அங்கையெல்லாம் உந்த மாமி மருமகள் சண்டை இல்லைம்மா.. அவங்க அவங்க தங்க வாழ்க்கையை பார்த்துப்பாங்க.. அவங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க.. எந்தப்பொறுப்பும் இல்லைமா.. உங்க மகள் ராணியாட்டம் இருப்பாக.. நம்புங்க.. அம்மா..““ என நையாண்டிப் பேச்சும் சிரிப்புமாய் தங்கை சொல்லி முடித்தாள்.
எட்டி தலையில் ஒரு குட்டு போட்டு “ ஏய் வாலு ஏதோ டென்மார்க் போய் பார்த்த மாதிரி கதை அளக்கிறாய்“ என அக்காள் சொல்ல, அக்காளின் கைகளை பிடித்தபடி““ ஐயோ அம்மா வலிக்குது“ என மதுவின் தங்கை அலறினாள்…
(தொடரும் )

 

ஆக்கம் ரதிமோகன்

leave a reply