Breaking News

காக்கைக்கும் தன் குஞ்சு….. -இந்துமகேஷ்

„ நாங்கள் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறோம்? நாம் நினைத்ததை நம்மால் சாதிக்கமுடியவில்லையே ஏன்? எத்தனையோ திறமைகள் இருந்தும் எமது வாழ்வு ஏன் இன்னும் இருண்டுகிடக்கிறது? நம்மையே துரத்தித்துரத்தி வரும் துன்பங்கள் இன்னும் இன்னும் அதிகரித்துக்கொண்டே போகிறதே ஏன்?“
அடுக்கடுக்காய் நம்மிடையே பிறக்கும் கேள்விகளுக்குப் பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் ஒரே பதில்:

„நம்மிடையே ஒற்றுமை கிடையாது. நாம் ஒன்றுபடும்வரை நமது பிரச்சனைகள் தீரப்போவதில்லை! நாம் உருப்படப்போவதும் இல்லை.!“
-பெரும்பாலானவர்கள் தரும் இந்தப் பதில் ஒற்றுமையைமட்டுமே வலியுறுத்துகிறது. ஆனால் எல்லாமனிதர்களும் ஒன்றுபடுவதென்பதும் எப்போதும் ஒற்றுமையாய் வாழ்வதென்பதும் அத்தனை இலகுவில் நிகழக்கூடியதா? இதே பதிலை எத்தனை காலமாகக் கேட்டுவருகிறோம். ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் என்ன முயற்சி செய்திருக்கிறோம்?ஒருபோதும் ஒற்றுமையென்பது சாத்தியப்படாமலேயே போகிறதே. ஏன்? எதனால்?

ஒற்றுமை என்பது என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை எல்லோரும் ஒன்றுபடவேண்டும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிறோமே தவிர அந்த ஒற்றுமை என்ன என்பதைப் புரியவைக்க ஒருவராலும் முடியவில்லை.

ஒருவரோடொருவர் ஒத்துப் போக முடியாமைக்கு முதற்காரணம் கருத்து முரண்பாடு. இந்த முரண்பாடுகள் எல்லாம் முற்றாகத் தீர்க்கப்பட்டு விட்டால் மட்டுமே ஒற்றுமை ஏற்படுமெனில் அது ஒருபோதும் சாத்தியமாகாத ஒன்று.
கருத்துக்களில் முரண்பாடு என்பது சிந்திக்கத் தெரிந்த நாள்முதலாக மனிதனிடத்தே உருவான ஒன்று. தன்னளவில் தான் சொல்வதும் செய்வதுமே சரி என்ற எண்ணம் உள்ளவரை ஒவ்வொருவரும் மற்றவரிலிருந்து கருத்துக்களால் வித்தியாசப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் ஒரு சமூகத்துக்கோ அல்லது இனத்துக்கோ பயன் தரக்கூடியதான காரியங்களில் -ஒரேவிதமான குறிக்கோளில்- அதில் எவ்வளவுதான் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்-ஒன்றுபட்டுக் காரியமாற்ற ஒவ்வொருவராலும் முடியும். இத்தகைய ஒன்றுபடல்தான் உண்மையான ஒற்றுமையாக இருக்கமுடியுமே தவிர ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒன்றாய் இணைதல் என்பது எக்காலத்திலும் சாத்தியப்படப் போவதில்லை.

ஒற்றுமைபற்றிப் பேசப்படும்போதெல்லாம் உதாரணத்துக்கு வரும் உயிரினம் காகம். காகத்திடமிருந்து ஒற்றுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்ட சிறுவயதில் நான் காகங்களை ஒருவித ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன்.
சிறியவர் பெரியவர் என்று எவரையும் பேதம்பாராமல் அவர் கையிலிருக்கும் உணவுப்பண்டத்தைத் தட்டிப் பறிக்கும் கெட்ட குணம் அதற்குண்டு. ஆனால் விரதகாலங்களில் அதை வருந்தி வருந்தி அழைத்து முதற் சாதம் அதற்கு விருந்தளிக்கப்படும்போது அது தான்மட்டும் தனியாக உண்ணாமல், தானும் தன் உறவுகளை வரவழைத்துக்கொள்ளும் நல்ல குணமும் அதற்கு இருக்கிறது.எங்காவது ஒரு காகம் செத்துக் கிடந்தால் ஊரை அழைத்து தன் இனத்தோடு ஒப்பாரிவைத்து அதற்கு இறுதி மரியாதை செய்யும் இயல்பும் காகத்திற்குரியது.

எவ்வளவுதான் காகத்தின் ஒற்றுமையைப்பற்றி மனிதன் பீற்றிக்கொண்டாலும், உனக்குப் பிடித்த பறவையொன்றின் பெயர் சொல்! என்றால், கிளி என்றும் மயில் என்றும் புறா என்றும் சிட்டுக்குருவி என்றும் அழகழகான பறவைகளின் பெயர்களைச் சொல்வார்களே தவிர காகம் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் „காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு!“ என்று சொல்வதன்மூலம் அதைப் புகழ்வதைப்போல அவமானப்படுத்துகிறோம்.
காகத்தை உதாரணம் காட்டிச் சொல்லப்படும் ஒற்றுமையைப் போலவே காகமும் மனிதனின் விருப்பத்திலிருந்து விலகியே நிற்கிறது. ஆனால் மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காகம் மனிதர்களோடும் தனது வாழ்வைப் பிணைத்திருக்கிறது.

சாடிக்குள் இருந்த தண்ணீர் தனக்கு எட்டவில்லை என்பதற்காக சாடிக்குள் கல்லைப்போட்டு தண்ணீர் மேலே வர அதனைக் குடித்து தன்தாகம் தீர்த்துக்கொண்ட விஞ்ஞானக் காகம் முதல்,
பாட்டி சுட்ட வடையிலிருந்து தான் சுட்டுக்கொண்டு வந்த வடையை தந்திரமாக அபகரிக்கத் துணிந்த நரியின் வஞ்சப் புகழ்ச்சியில் தன்னை மறந்து பாடி வடையை இழந்த அப்பாவிக் காகம் வரை எத்தனையோ காகங்கள் நமக்குப் புத்திசொல்ல முயன்றிருக்கின்றன. காகத்தைப் போலவே அந்தக் கதைகளையும் நாம் அசட்டை செய்திருக்கிறோம். அதனால்தான் காகம் காட்டும் வழியில் ஒற்றுமையைக்கூடக் கட்டிக்காக்க நமக்கு மனதில்லை.

„காகத்தை நமக்குப் பிடிப்பதில்லையே தவிர, காக்கா பிடிப்பதில் நாங்கள் யாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைத்தவர்களல்ல“ என்று வியந்தார் ஒரு நண்பர்.

„அந்தக் காக்காவுக்கும் இந்தக் காகத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஒருவருடைய கால்கையைப் பிடித்துக் காரியமாற்றுபவரைப் பார்த்து இவன் கால்கை பிடிப்பவன் என்று சொல்லத் தொடங்கி, கால்கை பின்னர் காக்கையாகி, அதுவே காக்காவாக மாறி காகத்தின் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது!“ என்றேன்.

„ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. காக்கா என்பது காகம்தான். காக்கா பிடிக்கிறது லேசான காரியமில்லை. ஒருத்தரிடம் இல்லாததை இருக்கிற மாதிரிப் புளுகவேண்டும். அவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டும். வளைந்து நெளியவேண்டும். இப்படிக் காக்கா பிடிக்கிறதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன!“ என்றார் அவர்.

அனுபவசாலி சொல்கிறார்! மறுப்பானேன்?

leave a reply