Breaking News

பொய்க்கால் குதிரைகள் – இந்துமகேஷ்

„எல்லோரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்!“

காலகாலமாக வழக்கிலிருந்துவரும் பழமொழி இது.

நாம் ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது அனுபவங்களில் முதிர்ந்த பெரியவர்கள் முன்னெச்சரிக்கையாக நமக்கு சில உண்மைகளை உணர்த்துவதற்காக உதிர்க்கின்ற பொன்மொழி இது.

சிலநேரங்களில் அவர்களது வார்த்தைகளில் அனுபவ முத்திரை பதிந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள்மீது நமக்குக் கோபம்தான் மிஞ்சும்.

„கவனமெடுத்து உன் காரியத்தைச் செய்!“ என்று அவர்கள் விடுக்கின்ற எச்சரிக்கையாக அதை எடுத்துக் கொள்ளாமல், „நாம போற காரியம் உருப்படாது எண்டு இந்தக் கிழடு சாடை காட்டுகிறது!“ என்ற கோபம்தான் நமக்கு முதலில் உண்டாகிறது.

„உருப்படியாக ஒரு காரியத்தைச் செய்வதற்கு இவர்கள் ஒத்துழைப்புத் தராவிட்டாலும் பரவாயில்லை. இப்படி ஏதாவது பழமொழிகளைச் சொல்லி நமது காரியங்களுக்குக் குறுக்கே விழுந்து அதைக் கெடுக்காமல் இருந்தாலே போதும்!“ என்று தோன்றுகிறது நமக்கு

நல்லபடியாக நிறைவெய்தவேண்டிய காரியங்கள் என்ன காரணத்துக்காக தோல்வியில் முடிந்தாலும் இந்தப் பழமொழி சொல்லும் பழசுகளின்மீதே நமது கோபம் திரும்பி விடுகிறது.

“கண்டறியாத பழமொழியும் இவையளும்!“

“மண்குதிரையை நம்பி ஆத்திலை இறங்கின கதையாய்… என்று இன்னொரு பழமொழி… (அது குதிரையல்ல குதிர் என்று புதிய விளக்கம் சொன்னாலும் மண்குதிரையோடும் இந்தப் பழமொழி பொருந்திப்போகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை நீரில் கரைந்து விடுவதுபோல் என்றும் பொருள் கொள்ளலாம் என்பதால்!)

வேகத்துக்கும் வலுவுக்கும் பெயர்பெற்ற குதிரை இப்படி உருப்படாத காரியங்களுக்காகவா உதாரணம் கொள்ளப்படவேண்டும்? ஆனால் இயற்கையின் நியதியில் விழுந்தாலும் எழுந்தாலும் வீரர்கள்தான் உதாரணம் காட்டப்படுகிறார்கள். குதிரைகள் பற்றி பழமொழி சொல்லப்படும் இடங்களில் கழுதைகளை வைத்துப் பார்ப்பதற்கில்லைத்தான். பாரவண்டிகளையும் இழுத்துக்கொண்டு சில மணி நேரங்களில் பலநாறு மைல்களைத் தாண்டி விடும் குதிரைகள்.

அழுக்குமூட்டைகளைச் சுமந்துகொண்டு அடுத்த தெருவுக்கு வருவதற்குள் சலித்துப் போய்விடும் கழுதை. அது எடுத்துவைக்கும் அடிகளை விட அது தன் எஜமானனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அடிகளே அதிகம்.

ஆக “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!” என்று ஒளவை சொன்னது போல்- பழமொழி கொண்டு குதிரையை மறைமுகமாகத் தாக்கினாலும் அதன் வீரமும் வேகமும் உலகறிந்ததே.

என் ஊரில் நான் பார்த்த முதல் குதிரை எனது உறவினர் ஒருவருடையது. அவரது பெயருக்கு முன்னால் அவரது அழகிய குதிரையைச் சேர்த்து “குதிரைக்கார” என்று அடைமொழியிட்டே அவரை அழைப்பார்கள். அது அவரது சொந்தக் குதிரை. அந்தக் குதிரையில் அமர்ந்து ஒரு கம்பீரத்தோடு அதை அவர் ஓட்டிவரும் அழகை சிறுவயதில் நான் வியந்து இரசித்திருக்கிறேன். சிறுவயதில் நான் படித்த சித்திரைக் கதைகளில் வருகின்ற குதிரை வீரனாகத்தான் அப்போது அவர் எனக்குக் காட்சி தந்தார்.

என் பக்கத்து ஊரான நெடுந்தீவில் நிறையக் குதிரைகள் இருப்பதாகச் சொல்வார்கள்.

வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும் பாட்டுக்கள் பலவற்றில் குதிரைகளின் குளம்புச் சத்தம் தாளங்களாய் ஒலிக்கும்.

“சத்தியமே இலட்சியமாய்க் கொள்ளடா! தலைநிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!”என்று சௌந்தரராஜன் வானொலியில் முழங்கும்போதெல்லாம் எங்கள் ஊர் குதிரைக்காரரும் அவரது குதிரையும்தான் என் மனக்கண்ணில் ஓடித் திரிவார்கள்.

நமக்கு முந்தைய மன்னர்களின் காலங்களில் குதிரைப்படையும் இருந்ததாம். போர்க்களங்கள் பல கண்டவை அவை. அந்தக் காலத்தில் படைகளில் பணியாற்றிய குதிரைகள் நமது காலத்தில் பந்தயக் குதிரைகளாக மாறி பலரது அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்துக் கொண்டிருப்பது உலகநாடுகள் பலவற்றில் இப்போதும் நடக்கிறது. படைகளில் இணைந்து வீரம் காட்டிய குதிரைகள் பல வெறும் பந்தயக் குதிரைகளாய் ஒன்றையொன்று முந்தவிளைகின்றன.

ஐரோப்பாவிலும் பல குதிரைகளைப் பார்க்கிறேன்.

இலண்டனில் ராஜபரம்பரையைச் சுமக்கும் குதிரைகளிலிருந்து இங்கே ஜெர்மனியில் மதுபானத்துக்கான விளம்பரங்களைச் சுமக்கும் வண்டிகளை இழுத்துச் செல்லும் குதிரைகள்வரை! சில சந்தர்ப்பங்களில் மணமக்களையும் அவை சுமந்து செல்கின்றன.

நவீன விஞ்ஞானிகள் பலவிதமான இயந்திரங்களைக் கண்டுபிடித்ததால் இந்த வாய்பேசா உயிர்களுக்கு கொஞ்சம் நிம்மதி. இல்லாவிட்டால் அவை தொடர்ந்தும் வதைபட்டுக் கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் மனிதர்களோடு குதிரைகள் மிக நெருக்கம் கொண்டிருந்தன. பெரும்பாலும் விரைவுப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் வண்டிகளின் சாரதிகளாக அவைகள் இருந்தன. விவசாயத்தில் மாடுகளின் பணியைக் குதிரைகளும் செய்தன. போர்க்களங்களில் தமது எஜமானர்களுக்கு இணையாக வீரசாகசம் புரிந்து அவர்களுக்கு வெற்றிகளை வாரிக்குவித்தன.

„நான் பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு! என் குதிரை பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு!…“ என்று தொடரும் ஒரு கதைப்பாடல்!

-சிறுவயதில் நான் படித்த அந்த ராஜாதேசிங்கு கதையில் வரும் குதிரையில் இருந்து இப்போதைய திரைப்படக் கதாநாயகர்கள் ஓட்டிச் செல்லும் குதிரைவரை எத்தனை விதமான குதிரைகள்.

உயிர்க் குதிரைகளைப்போலவே பாவனை காட்டிக்கொண்டு கோயில் திருவிழாக் காலங்களில் ஊரவர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கென்று அயலூர்களிலிருந்து வந்து ஆட்டம் போடும் பொய்க்கால் குதிரைகளும் என் சிறுவயதுக்கால நினைவுகளில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

கால ஓட்டத்தில் பொய்க்கால் குதிரைகளின் வரவு நின்றுபோனதுபோலவே உயிர்க் குதிரைகளின் நடமாட்டமும் ஊருக்குள் அற்றுப் போனது.

என்றோ ஒருகாலம் உலகம் முழுதும் உள்ள குதிரைகளின் இனம் அழிந்தாலும்கூட மனிதர்களோடு அவைக்குள்ள உறவு காலகாலமாக வாழ்ந்துகொண்டிருக்கவே செய்யும்!

leave a reply