Breaking News

‚தாயன்பு‘ மாணவர்கள் வழிகாட்டி

தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகர் திருமதி சூரியகாந்தி ஜெயராஜா அவர்களின் ‚தாயன்பு‘ மாணவர்கள் வழிகாட்டி பாடநூலிற்கு வழங்கிய பின் அட்டைக்குறிப்பு.

தாயாகி பாடம் சொல்லும் ‚தாயன்பு‘

மாணவர்களுக்கான நூல்மலர்கள் மணம் பரப்பும் காலம் இது. ஆனாலும் வன்னி மண்ணில் இருந்து, மாணவர்களுக்காக வருகின்ற நூல்கள் குறைவு என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்தக் குறைவினை நீக்குகிறார் ஆசிரிய அலோசகர் திருமதி சூரியகாந்தி ஜெயராஜா அவர்கள். இக்காலம் மிக அவசரமான‌து. ஆறுதலாக அமர்ந்திருந்து பாட்டி கதை சொல்லுதலும், அம்மா பாடம் சொல்லிக் கொடுத்தலும் அருகிவிட்ட காலமிது. இந்த நெருக்கடிமிகு காலத்திலே கையில் ஒரு கற்பித்தல் ஆசான் இருந்துவிட்டால் அது பெற்றோர்க்கு ஒரு தனிப்பட்ட உதவியாளன்தான். அந்த உதவியாளன்தான் இந்த ‚தாயன்பு‘ நூல்.

முல்லைக் கல்வி வலயத்தில் தமிழ்ப்பாட‌ ஆசிரிய ஆலோசகராக பணியாற்றும் திருமதி சூரியகாந்தி ஜெயராஜா அவர்கள், திருக்கோணமலை கும்புறுப்பிட்டியை பிறந்த மண்ணாகக் கொண்டவர். தி/கும்புறுப்பிட்டி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, தி/நிலாவெளி தமிழ் வித்தியாலயம் என்பவற்றில் கல்வி பயின்ற இவர் உயர்தரக் கல்வியை முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தில் பயின்றார். யாழ் பல்கலைக்கழக கலைப்பட்டதாரியான திருமதி சூரியகாந்தி ஜெயராஜா அவர்கள் இருபது வருடகால ஆசிரிய அனுபவத்தையும் கொண்டவர். முப்பதிற்கும் மேற்பட்ட சமூக நாடகங்கள், ஐந்திற்கும் மேற்பட்ட வரலாற்று நாடகங்கள் மற்றும் தகுதிமிக்க வில்லுப்பாட்டுக்கள் என்பவற்றையும் நெறியாள்கை செய்து அரங்கேற்றம் செய்தவர். ஆனாலும் நூல் வடிவில் எவையும் உலா வராமலே இருந்துள்ளது. அக்குறை இப்போ தீர்ந்தது.

கவியாக்கம், பாடலாக்கம் படைத்த இவர் வழங்கும் இன்னொரு ஆக்கமே இந்த ‚தாயன்பு‘ எனும் புத்தக ஆக்கம். விஜய் அச்சுப் பதிப்பகம் அழகாக வடிவமைத்து அச்சிட ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ இந்த நூலினை வெளியீடு செய்வது பெருமைக்குரியது.

வாழ்த்துக்களுடனும் அன்புடனும்,
யோ.புரட்சி,
இயக்குநர்,
செல்லமுத்து வெளியீட்கம், வள்ளுவர்புரம்

leave a reply