Breaking News

குரங்குப் பிடி -இந்துமகேஷ்

மனிதர் தொகை உலகில் அதிகரித்துக் கொண்டு போவது ஒருபுறமிருக்க மனிதர்களின் மூதாதையர் என்று பெருமளவில் நம்பப்பட்டுக் கொண்டிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டே போகிறதாம்.
மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. குரங்கு என்பது வேறு. மனிதன் என்பது வேறு. கடவுளின் படைப்பில் மனிதன் என்பதும் தனியானதோர் இனம். அதற்கு குரங்குதான் மூலம் என்பது முட்டாள்தனமான கற்பனை என்று வாதாடப்படுவதையும் ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குரங்குகளின் குணாதிசயங்கள் மனிதனிடம் மலிந்து கிடப்பதைப் பார்க்கும்போதுதான் சந்தேகம் வருகிறது.

குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்பதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கத் தோன்றும்வகையில் குரங்கும் மனிதனும் பலவகைகளில் ஒத்திருக்கிறார்கள்.
எனக்கென்னவோ மனிதர்களிலிருந்துதான் குரங்குகள் தோன்றியிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எது உண்மை என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சின்னவயதில் நாம் படித்த பல குட்டிக்கதைகளின் கதாநாயகன் குரங்கு.
குரங்கின் இதயத்தைச் சாப்பிட நினைத்த முதலையிடமிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பிய குரங்கு, அப்பத்துக்காகச் சண்டைபோட்ட பூனைகளை ஏமாற்றி அப்பம் முழுவதையும் தானே அபகரித்துக்கொண்ட குரங்கு, ஆப்பிழுக்கப் போய் அகப்பட்டுக் கொண்ட குரங்கு, புத்திசொன்ன தூக்கணாங்குருவியின் கூட்டைக் கலைத்த குரங்கு என்று ஏகப்பட்ட குரங்குகள். அவைகளிடமிருந்து நாம் அறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நம் முன்னோர் சொன்ன கதைகளில் அவை உலவுகின்றன.
அறிவை வளர்த்துக்கொண்டோமோ இல்லையோ சிறுவயதில் குரங்குச் சேட்டைகள் விடவும் வயது முதிர்ந்த காலங்களில் குரங்குப் பிடி பிடிக்கவும் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறோம்.

„பிடித்தால் ஒரே பிடிதான் குரங்குப் பிடி!“ என்று பிடிவாதம் காட்டும் மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது குரங்குதான் உதாரணம் காட்டப்படுகிறது.
அதென்ன குரங்குப் பிடியில் மட்டும் அத்தனை இறுக்கம்?
இயற்கையான காரணம் ஒன்றுண்டு.
குரங்கு மரத்துக்கு மரம்தாவும் இயல்புடையது.
மரக்கிளைகளில் அது தாவும்போது பற்றிக்கொள்ளும் அதன் பிடி உரமானதாக இல்லாவிட்டால் அதன் கதி அதோகதிதான்.
சில நேரங்களில் குட்டிக் குரங்கையும் சுமந்துகொண்டுதான் தாய்க்குரங்கு மரம் தாவ வேண்டியிருக்கும். அந்தச் சமயத்தில் குட்டிக் குரங்கின் பிடி தவறிவிட்டால் அதன் பிறகு தாய்க்குரங்கு அதைச் சேர்த்தக்கொள்ளாதாம்.

குரங்குப் பிடிக்கு உதாரணமாக ஒரு கதை சொல்வார்கள்:
ஒருநாள் ஒரு குரங்கு பாம்பு ஒன்றைப் பிடித்ததாம். பாம்பின் கழுத்தைப் பற்றிப் பிடித்ததால் பாம்பினால் குரங்கைக் கொத்த முடியவில்லை. தன் பிடியை விட்டுவிட்டால் பாம்பு தன்னைக் கொத்திவிடுமோ என்று குரங்குக்குப் பயம். அதனால் அது தன் பிடியைத் தளர்த்தவில்லை. சற்றுநேரத்துக்கெல்லாம் பாம்பு செத்துவிட்டது. ஆனாலும் குரங்கு தன் பிடியை விடாமலே இருந்தது. ஊண் உறக்கம் இன்றி பாம்பைக் கையில் பிடித்தபடியே இருந்தது குரங்கு.
பாம்பின் பயத்தால் பட்டினியாயிருந்து குரங்கு களைத்துப் போனது என்றாலும் அது தன் பிடியைத் தளர்த்தவில்லை.மறுநாள் அந்தப் பாம்பிலிருந்து நாற்றம் வரத்தொடங்கியபோதுதான் பாம்பு செத்துவிட்டது என்பதைத் தெரிந்துகொண்டு குரங்கு தன் பிடியை விட்டது.
அந்தளவுக்கு இறுக்கமான பிடி குரங்குப் பிடி.

குரங்குப் பிடி பிடிக்கும் மனிதனைப் போலவே குரங்குச் சேட்டைவிடும் மனிதர்களும் நிறையப் பேர்.
பெரும்பாலும் இளம் வயதினரே அதிகமாகக் குரங்குச் சேட்டை விடுகிறார்கள்.
„எப்ப பார்த்தாலும் ஏதாவது குரங்குச் சேட்டை செய்துகொண்டு…!“என்று பெரியவர்கள் கடிந்துகொள்கிற இளவயதினர் அதிகம்.

சிந்தித்துத் தெளிவுபெறாமல் செய்யப்படுகின்ற காரியங்கள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இளம்கன்று பயமறியாது என்றும், சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்துசேராது என்றும் சொல்லப்படுவதெல்லாம் சிந்திப்பதற்கு நேரமின்றி துடிப்பாக அவர்கள் காரியமாற்றிவிடுவதைக் குறிக்கத்தான்.

செயலாற்றும் வேகம் சிந்தனைத் திறனைவிட அதிகம் இருப்பதால் இளையோர் சடுதியாகக் காரியத்தில் இறங்கிவிடுகிறார்கள். அது வெற்றியா தோல்வியா என்பதெல்லாம் அதற்குப் பிறகுதான். எண்ணாமல் துணிந்த கருமங்கள் பல குரங்குச் சேட்டைகளாகவே போய் முடிகின்றன.
குரங்கு கையில் பூமாலை, குரங்கு கையில் கொள்ளிக்கட்டை, குரங்கு கையில் பேன்பார்த்தல், இஞ்சி தின்ற குரங்கு, என்று குரங்கின் நடவடிக்கைகள் குரங்குச் சேட்டைகளுக்குள் அடங்கும்.
இந்தக் குரங்குச் சேட்டைகளைச் செய்யும் மனிதர்களைப் பார்த்துத்தான் மனிதன் குரங்கின் வழி வந்திருக்கவேண்டும் என்று கற்பிதம் செய்துகொண்டார்களோ என்னவோ?

குரங்குகளைப் பழக்கி வித்தைகாட்டும் குரங்காட்டிகள் அந்தக் குரங்குகளுக்கு ராம நாமத்தை அதிகம் போதிக்கிறார்கள். „ஆடுரா ராமா ஆடுரா ராமா!“ என்று அவர்கள் உற்சாகக் குரல் கொடுக்கும்போது அந்தக் குரங்குகளும் குரங்காட்டிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு பணிவோடு செயற்படுகின்றன.
இலங்கைக்குப் பாலம் அமைப்பதற்கு இராமருக்கு உதவிபுரிந்த சாதாரண குரங்குகளிலிருந்து வாலி சுக்ரீவன் என மன்னர்களாய்த் தொடர்ந்து, இராம பக்தனாகவே வாழ்ந்த அனுமான் வரை குரங்கின் இனம் எனினும் அவர்கள் மனிதர்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்று இதிகாசங்கள் சொல்கின்றன.
உண்மையா கற்பனையா என்ற விவாதங்களுக்கு மேலாக விலங்கினங்கள் மனித வாழ்வோடும் இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதே நம்மால் உணரப்படவேண்டியது.

குரங்கின் இனம் இப்போது குறைவடைந்து வருவதற்குக் காரணம் என்ன?
மரங்களையும் காடுகளையும் அழிக்கும் மனிதனின் குரங்குச் சேட்டைதான் குரங்குகள் இனம் குறைவடையக் காரணம் என்கிறார்கள்.
ஓர் இனத்தின் வாழ்விடங்களை அழித்து அவர்களை வாழாவெட்டிகளானக அலைய விடுவதன்மூலம் அந்த இனத்தையே அழித்துவிடலாம் என்று உலகெங்கிலும் சில புத்திசாலிகள் செயற்படுகிறார்கள். இவர்களது இந்தக் குரங்குச் சேட்டைக்கு உலகம் எப்போதும் ஒத்துக்கொள்ளுமா என்ன?

குரங்கின் வழி மனிதன் வந்திருந்தாலும் மனிதன்வழி குரங்கு வந்திருந்தாலும் குரங்குச் சேட்டைகளை நாம் எப்போதும் அனுமதிக்க வேண்டும் என்பதில்லை.
பிற உயிரினங்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விடயங்கள் இருக்கின்றன.
அவற்றைத் தெளிவாகப் புரிந்துணர்ந்தாலே போதுமானது. நமது வாழ்வு செழிப்புற அவையும் நமக்குக் கைகொடுக்கும். அவற்றைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொள்வோமா?!

leave a reply