Breaking News

புன்னகைக்குப்பின் மறைந்திருக்கும் சோகம்..(கதையல்ல நிஜம்)“ரதிமோகன்“

அவன் வகுப்பில் ஒன்றாக படித்தான். வயதில் மூன்று வருடங்கள் மூத்தவன். ஒரு வகுப்பானாலும் வயதுவித்தியாசங்கள் மாணவர்களுக்கிடையில் இருப்பது இயற்கைதானே…அவன்பால் எல்லோருக்கும் அதிக அன்பும் ,மதிப்பும் இருந்தது. படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரன். பொறியியலாளராக வரவேண்டும் என்ற பெரிய கனவு அவனிடம் இருந்தது. பௌதிகவியலில் அவனுக்கு நிகர் எவரும் இல்லை என கூறலாம். மாணவர்மன்றத்தலைவனாக இருந்தான்.. மேடைப்பேச்சு, விவாதங்களில் அவனின் தமிழ்த்திறமை துல்லியமாகத்தெரிந்தது.எப்போதும் விவாதமேடையில் எனக்கும் அவனுக்குமே போட்டி இருக்கும்.. எடுத்த விடயத்தை திறம்பட விவாதிப்பான்.அதைவிட ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் முதல் அவனிடம் இருந்துதான் வரும். போர்ச்சூழலால் இடையில் படிப்பை நிறுத்திவிட்டு ஐரோப்பிய நாடொன்றுக்கு தன் மாமனாரின் தயவில் பயணமானான்.
நகைச்சுவையாலே எம்மை எல்லாம் சிரிக்க வைத்தவன். ஒல்லியானதால் ஓமக்குச்சி என அழைக்கப்பட்டவன் அப்படிப்பட்ட எமது வகுப்புத்தோழனை சந்திக்கும்வாய்ப்பு ஒன்று எதிர்பாராவிதமாக கோடைக்காலவிடுமுறையில் கிடைத்தது. காலத்தின் மாற்றம் ,அடையாளம் காணமுடியாத அளவிற்கு மாற்றியிருந்தது. எப்படித்தான் என்னை கண்டுபிடித்தானோ தெரியவில்லை… சந்தேகத்தோடுதான் என்னை வினாவினான். உண்மையில் ஒரு புறம் திகைப்பும் மறுபுறம் மகிழ்ச்சியுமாக இருந்தது.. எப்படி இருக்கிறாய்? என கேட்டபோது
எனக்கென்ன ராஜாவாட்டம் இருக்கேன் என்றவனின் போலியான அந்த சிரிப்புக்கு பின் மாபெரும் சோகம் மறைந்து இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்..

இதுதான் வாழ்க்கை ..சட்டென மாறும் ஐரோப்பிய காலநிலை போன்றது. எதுவுமே இந்த உலகில் நிரந்தரமில்லை என்பதற்கு அவனின் சோகமான கதை எடுத்துக்காட்டு. அவனின் அனுமதியோடு இதை இங்கு பகிர்கின்றேன்.

உங்கள் எல்லோரையும்போல் மகிழ்ச்சியாகத்தான் அவனின் திருமணவாழ்க்கை ஐரோப்பியத்தேசத்தில் தொடங்கியது. காதலித்து கைப்பிடித்த மனைவியுடன் சந்தோசமாக நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டிருந்த வேளையில் அவன் வாழ்வில் பல இடிகள் விழ ஆரம்பித்து இருந்தது. „ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள்“ என்பதுபோல் அவர்களிடையே அன்னியோன்னியமான திருமணவாழ்க்கையில் ஆட்டம்காணத்தொடங்கியது. அவன்மேல் எடுத்தற்கெல்லாம் சந்தேகப்படத்தொடங்கினாள் அவள் மனைவி. நாளுக்குநாள் அவளின் இந்த செய்கையால் அவனின் நிம்மதி மெல்ல மெல்ல பறிபோய்க்கொண்டிருந்தது. குடிக்க ஆரம்பித்திருந்தான். குடும்ப வாழ்க்கை சீரழிந்து போய் இருந்தது. பெற்றெடுத்த பிள்ளையை எடுத்து கொஞ்சக்கூட மனைவி தடை விதித்து இருந்தாள் என்றால் அவள் எப்படியான குணவதி என நீங்கள் சிருஷ்டித்துக்கொள்ளுங்கள்.. நாளுக்குநாள் அவளின் வீணான சந்தேகம் ஒருநாள் அடிதடியில் முடிந்தது ஆம் அன்றும் வழமைபோல் வேலையால் வரும்போது சற்று குடிபோதையில் வீடு வந்திருந்தான். அவனது வெள்ளை சேர்ட்டில் சிவப்பு மை கறை இருந்ததை பார்த்து எந்தப்பெண்ணின் மைதடவிய உதடுகள்? என கேள்வியோடு ஆரம்பித்த சண்டை பொலிஸ் வரும்அளவுக்கு பாரதூரமாகப்போனது..ஐரோப்பாவைப்பொறுத்தவரை பெண்ணை கைநீட்டி அடித்தல் குற்றம்.. பொலிஸ் எச்சரிக்கை செய்தது. சில வாரங்களின் பின் அவனுக்கு புற்றுநோய் இருப்பதாக அறிய வந்தது.. இதை சாட்டாக வைத்து மனைவியும் அவளின் குடும்பமும் சேர்ந்து விவாகரத்துப்பத்திரம் அனுப்பி இருந்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த அவன் தற்கொலைக்கு முயற்சிசெய்திருந்தான். காப்பாற்றப்பட்டான். “ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்“ ஆனால் அவனுக்கு வாய்த்தவளோ ஒரு சந்தேகப்பேயாக இருந்தாள்.
திருமணம் என்பது ஆயிரம்காலத்துப்பயிர் என்ற நிலைமாறி எடுத்ததுக்கெல்லாம் விவாகரத்து நோட்டிசோடு கோட்டிற்கும் வீட்டிற்கும் அலையும் காலமாக போய்விட்டது. கல்லானலும் கணவன் புல்லானாலும் புருஷன் என வாழ்ந்த வாழ்க்கை முறை இன்று தலைகீழாக மாறிவிட்டது. ஐரோப்பிய தேசத்தவன் எம்மைப்போல் வாழத்துடிக்கிறான். நாமோ அவனைவிட மோசமான நிலைமைக்குத்தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறோம்..
இன்று தன் வாழ்நாட்களை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டிருக்கும் வகுப்புத்தோழனுக்கு கண்ணீரை காணிக்கையாக்கி , ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் இறுதி காலத்தில் அவனின் மனம் அமைதிபெற வேண்டும்…

பலபேரின் புன்னகைகளுக்கு பின் இருக்கும் சோகத்தை காணத்தவறிவிடுகிறோம்.. வார்த்தைகளால் அவர்கள் உள்ளங்களை சாகடிக்கிறோம். வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல. இந்த நிமிடம் மட்டும்தான் இதை எழுதும் இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரம்.. நாளை என்பது கேள்விக்குறி? இதை எழுதிக்கொண்டிருக்கும் என் உயிர் கூட நாளை பிரியலாம்.. எவர் கண்டார்?? வாழும்வரை கோபதாபமின்றி, சந்தோசமாக எல்லோரிடமும் அன்பாக வாழ்ந்து எம்வாழ்வை முடித்துக்கொள்வோமே..

ஆக்கம் ரதிமோகன்

leave a reply