Breaking News

நாளை எதுவுமாகலாம்

எங்கள் பேரினவாத
காஞ்சோன்டி கடவுளுக்கு சலாமொன்று.
எங்களின் மண்ணில் உங்கள்
விழுதொன்றின் எச்சம் தகனமாகியது.
நாளை நாகதீப யாப்பனைய பிரித்
எங்கள் செவிப்பறைகளை பலதடவை தட்டவிருக்கிறது.
முற்றவெளியில் நாளை புட்களை வெட்டி அரச வளாகம் என்பார்கள்.
இரவோடிரவாக சில புத்தர்கள் முளைக்கக்கூடும்.
நாளை மறுதினம் குழி வெட்டி
நூறாயிரம் வழுக்கைகள் பவனிவருவார்கள்.
இனத்துவேச ஜந்து ஒன்று அடிக்கல் நட்டு ஆரம்பிக்கும்.
படையணிகள் பணியமர மிகப்பெரிய கோபுரம் எழும்.
கோட்டைக்குள் பிக்குவின் வாசஸ்தலம் அமையும்.
பண்ணையடியில் ஒளிச்சமிஞ்சை நடப்படும்.
சில காப்பரன் முளைத்து நிற்கும்.
பெட்டிக்கடை , விசிறிக்கடை , சொரூப கடை , கூவி நிற்கும்.
துரையப்பா விளையாட்டரங்கு காவியுடைகளால் தழும்பியழும்.
எம் தலைமைகள் கிரிபத் உண்டு கைகுடுப்பர்.
வீடமைப்பும் வீட்டுத்திட்டமும் வந்திறங்கும்.
முனியப்பர் முன்றலின் வாகன பயிற்சிகள் வேறிடம் செல்லும்.
என்றுமில்லாதவாறு துணி அலங்காரங்கள் வீதிமறைக்கும்.
மெழுகு கொடிகளுடன் யானையும் பாகனும் வலம் வருவார்கள்.
இன ஐக்கியம் என சுலோகங்கள் போடுவார்கள்.
நல்லாட்சியின் வெற்றி என சிங்கள பத்திரிகைகள் தம்பட்டம் அடிப்பார்கள்.
உள்ளழும் மனதோடு ராமசாமி வீதியை கடக்கக்கூடும்.
கச்சான் கடைக்காரன் சிங்களம் கற்க தொடங்குவான்.
மதுக்கடைகளுக்கு இடமாற்றம் கிடைக்கலாம்.
மீன் சந்தையில் சிங்கள வியாபாரிகளின் கத்தல் ஒலிக்கும்.
நகரினுள் மாடிகள் படிபோட்டு எழும்பக்கூடும்.
சில அரசமரங்கள் முளைக்கக்கூடும்.
பாடவிதானத்தில் தகனம் பற்றி பொறிக்கக்கூடும்.
சிங்கள பள்ளியும் பன்சலயும் பல் இளிக்கும்.
வீரம் பேசி பேரம் பேசிய தலைகள் சாயக்கூடும்.
எதிர்த்து நிற்கும் இளைஞர் கூட்டம் விசாரிக்கப்படுவர்.
சிங்கள சிறுக்கிகள் வலைவிரித்து கண்ணடிக்க
நம்ம தம்பிகள் கரம்பிடித்து வரம்பெறக்கூடும்.
கைகளில் வெள்ளை நூல்கள் கட்டி ஆடக்கூடும்.
சின்னக்கடையில் சிங்கள சலங்கை ஒலிக்கும்.
யாழ் திரையில் அவர்கள் மொழி படமோடும்.
நூலகத்தினுள் மீண்டும் புகை மூட்டமாகலாம்.
முனியப்பர் மூச்சடக்கி ஒருபுறமிருப்பார்.
வீரசிங்க இருக்கைகளும் வாடகைக்காக ஏங்கி நிற்கும்.
வீதியில் வெள்ளையும் காவியும் கண்சிமிட்டும்.
வாகன நெரிசலும் சட்ட காவலும் உலாவரும்.
நாளை கப்பலும் வரும்.
கப்பலிலே சங்கமித்தையும் கனவில் வருவார்.
தூய தமிழ் கொச்சையாகும்.
நயினை தேரர் நதியில் மிதப்பார்.
மின்னொளி கண்ணை பறிக்கும்
கிரிபத் பசியை மறைக்கும்.
நாளை எதுவுமாகலாம்.
ஏனெனில்
யாழ்ப்பாணம் வந்தாரை என்றும்
வரவேற்று வாழவைக்கும்.

நெடுந்தீவு தனு

leave a reply