Breaking News

விதியே… -இந்துமகேஷ்.

எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுவே விதி.
இன்ன நேரத்தில் இன்னதுதான் நடக்கும் என்று முன்பாகவே எவரால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்திருக்கிறது.

எது எது எப்போது நடக்கும் என்பதைத் தீர்மானிப்பது யார்? அல்லது எது?
இதையே விதி என்ற ஒன்றுக்குள் அடக்கிவிட்டாயிற்று.

„விதியா..? அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?“ என்று வினாவெழுப்புபவனும் அதே விதிக்குள் அகப்பட்டுக்
கொண்டிருக்கிறான் என்பதே விதிக்குள்ள மகிமை.
ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அவனுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
இதை மாற்றுவதற்கு விதியை நம்புபவனால்மட்டுமே முடியும்.
„இது என் விதியா இல்லை இதைநான் மாற்றிக் காட்டுகிறேன்“ என்று எழுபவன் தீவினைகளைக்
கடந்து நல்வினை புரிய முனைகிறான்.

பக்தி என்பது எப்போதும் பயமூட்டுகின்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.
இந்தப் பயம் என்பது தீவினைகளுக்கு எதிரான பயம்.
தீமை புரிந்தால் நரகத்துக்கும் நன்மை புரிந்தால் சொர்க்கத்துக்கும் போகலாம் ஆகவே தீமைகளிலிருந்து உன்னை விலக்கிக்கொள் என்பதிலேயே ஒருவித பயமூட்டுகின்ற தன்மை பரப்பப்பட்டிருக்கிறது.
இந்தப் பயக்திதான் பலரை முக்திவழிக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதும் உண்மையே.
பயபக்தி என்பது எங்கிருந்து வருகின்றது என்றால் அது மரணத்திலிருந்து வருகிறது.
ஒருநாளைக்கு நாம் இந்த உடலை எறிந்துவிட்டு ஓடிப் போய்விடவேண்டும் என்ற பயம்.
வாழ்கின்ற காலத்தில் ஏதாவது நல்லதைப் புரியவேண்டும் என்ற அக்கறைக்கும் மரணத்தைப் பற்றிய பயமே மூலமாய் அமைந்திருக்கிறது. எதைச் சொன்னாலும் அசைவுறாதவன் உன்னைக் கொல்லப்போகிறேன் என்றதும் எப்படிப் பதறிப்போகிறான்.
ஆனால் எவனும் எவனையும் கொல்லமுடியாது.
அவனுக்கு நேரம் வந்துவிட்டால் அதைத் தடுக்கவும் எவனாலும் முடியாது.

பிறப்பும் மரணமும் இயற்கையின்விதி.
பெண்ணில் தொடங்கி மண்ணில் முடிகிற மனிதவரலாறு என்பதே விதி.
இந்த இயற்கையின் விதிக்குள் இயங்குகிற வாழ்க்கைப் பயணத்தில் நடப்பவைகள் எல்லாம் இந்த
விதிக்குள்ளேயே அடக்கம்.

விதியை நம்புவதும் நம்பாமல் விடுவதும் இரண்டுமே விதி.
நான் விதியை நம்புகிறவன். நீ அதை நம்பாமல் விடுவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை.
உன் கொள்கையில் உனக்கு இருக்கும் நம்பிக்கையை நான் மாற்றமுடியாததுபோல என் கொள்கையில்
எனக்கிருக்கும் நம்பிக்கையையும் நீ மாற்ற முடியாது. இருவருமே இப்படி கொண்ட கொள்கையில் பற்றாளர்களாக இருக்கிறோம் என்பதே விதி என்றால் அதை யாரால் மாற்ற முடியும்?

உன்னை எனக்குத் தெரியாது. என்னை உனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்போது எழுதிக் கொண்டிருப்பதை நீ என்றோ ஒருநாள் படித்துக்கொண்டிருப்பாய் என்பதை நான் அறிவேன். படிக்கும் உனக்காகத்தான் இதை நான்
எழுதுகிறேன். நீ படிக்காமல் தூர எறிந்துவிட்டுப் போயிருந்தால் உனக்கும் எனக்குமிடையில் ஒரு சந்திப்பு நேர்ந்திருக்காது.
ஆனால் நாம் சந்தித்துக்கொள்ளவேண்டும் என்ற விதி இருப்பதால் நான் எழுதியதை நீ படித்துக் கொண்டிருக்கிறாய். இருவரும் இப்போது விதியைப்பற்றிக் கருத்துக்களைப் பரிமாறுகிறோம்.

என்னோடு நீ ஒத்துவருபவனாகவோ அல்லது உன்னோடு நான் ஒத்து வருபவனாகவோ இருக்கலாம்.
முரண்பாடுகள் மட்டுமே விதியல்ல.
ஒத்த தன்மை என்பதும் விதிதான்.
உலகத்தைக் கடவுள் படைத்தான் என்பதை நம்புகிறவன் நிச்சயம் விதியை நம்புகிறவனாகவே இருப்பான்.

பக்தி என்பது மதம் கடந்தது.
கடவுள் எந்த வடிவத்திலும் வரலாம். நீ எந்த வடிவத்தில் எதிர்பார்க்கிறாயோ அந்த வடிவத்தில் வரலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அறுவைச் சிகிச்சையின்போது ஒரு இளைஞன் தன் உயிருக்காகப்
போராடிக்கொண்டிருந்தான்.
சக்தி சக்தி என்று எப்போதும் தவிக்கிற மனது.
இங்கே சக்தியின் மற்றொரு வடிவமாக மரியாளை மனதால் தியானித்துக் கொண்டிருப்பான்.
காமாட்சி மீனாட்சி கருமாரி மகமாயி என்ற வரிசையில் மரியா.
மரணப்படுக்கையிலும் அதைச் செய்தான்.
அறுவைச் சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அவன் மயக்கநிலையில் இருந்தான்.
இடையிடையே அவன் கண்விழிக்கும்போதெல்லாம் ஒரு தாதிப்பெண் முக்காட்டோடு அவனருகிலேயே
நின்றிருந்ததைக்கண்டான்.
இரவு முழுவதும் அவள் அவனருகிலேயே நின்றிருந்தாள்.
அதிகாலையில் அவன் ஓரளவு மயக்கம் தெளிந்த போதும் அவள் நின்றிருந்தாள்.
அவன் மெதுவாக அவளிடம் கேட்டான்-
„நீங்கள் யார்?“
அவள் மெதுவாகப் புன்னகைத்தபடி சொன்னாள்-
„நான் மரியா!“
கட்டுடைத்த வெள்ளமென அவன் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.
அவள் அவனது தோளில் ஆதரவாக வருடிக் கொடுத்தாள்:
„கவலைப்படாதே..சீக்கிரம் குணமடைந்துவிடுவாய்!“

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று ஆர்க்கிமிடீஸ்போல எழுந்து ஓடாத குறையாக அவன்
புலம்பிக்கொண்டிருந்தான்.
வருவோர் போவோரிடமெல்லாம் அரற்றிக் கொண்டிருந்தான்.
இது உண்மையில் நடந்தது.
அந்த இளைஞன் நான்தான்.

தெய்வம் என்பது எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறாய் நீ.
மனிதவடிவில் அது வரும்.
புராணகாலங்களில் வந்ததுபோல் கலியுகத்தில் தெய்வம்வராது என்று நீ நினைக்காதே. வரும்.
வேண்டுதல்மட்டும் சரியாக இருந்து நமது விதியும் சரியாக இருந்தால்.

leave a reply