Breaking News

„ஓரு பேயைப் பிடிச்சாச்சு“கதாசிரியர், கவிஞர் டோட்முண்ட் மணியம்

இலண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஒன்றில் வசித்து வந்த கந்தசாமி, அருகில் உள்ள கடையொன்றுக்கு பொருட்கள் வேண்டச் சென்றபோது, அவர் கையில் துண்டுப்பிரசுரம் ஒன்றைக் கொடுத்து அவர் முகத்தை ஒருவன் உற்று நோக்கினான். கந்தசாமியும் அவனைப் பார்க்க இருவருக்குமிடையே உரையாடல் நடைபெற்றது. அதன்பின் கந்தசாமி கடைக்குச் சென்று பொருட்களை வேண்டிக்ககொண்டு, தன்னுடன் உரையாடியவனையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தன் மனைவிக்கும் அறிமுகம் செய்து, உணவு வழங்கி அவனை வழியனுப்பி வைத்தார்.

வந்தவரை வழியனுப்பி வைத்தபின், கந்தசாமியின் மனைவி “முன்பின் தெரியாத ஒருவரை எப்படி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வருவீங்க… “ என்று தன் கணவனுடன் சத்தம் போட்டாள். கந்தசாமி “ அந்த ஆள் பெரிய சாத்திரியார் அப்பா… எங்கட பிரச்சினையெல்லாத்தையும் அப்படியே சொல்லுறார். எனக்கு கேட்கக் கேட்க ஆச்சரியமாக இருந்துது… அதனாலதான் அவரைக் கூட்டிக்கொண்டு வந்தனான். இந்த வீட்டுக்கு ஓரு சாந்தி செய்தால் நமது துன்பம் எல்லாம் போய்விடும் என்கிறார் நான் அவரைக்கொண்டு சாந்தி, பரிகாரம் செய்யப் போறன்… “

“நினைச்சன்…. இதெல்லாம் விசர் வேலையப்பா… நீங்கள் வீணாகக் காசைச் செலவு செய்யப் போறீங்க… அவன் உங்களிட்டையிருந்து காசு பிடுங்கப் பார்க்கிறான்… ” என்று மனைவி சத்தம் போட்டாள்.

“உனக்குத் தெரியாது… எங்கட துன்பம் தீர வேண்டுமென்றா…. சாந்தி செய்யத்தான் வேண்டும். நான் நாளைக்கு அவரைக் கூட்டிக்கொண்டு வந்து, வீட்டுக்கு சாந்தி செய்யப் போறன்… நீ பிள்ளைகளையும் கூட்டிக்;கொண்டு எங்கேயாவது போயிற்று திரும்பி வா” என்றான்.

மனைவி கூறிய எந்த அறிவுரையையும் அவன் கேட்பதாக இல்லை. மறுநாள் அவன் மனைவி பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேற, சாத்திரியார் இரண்டு மஞ்சள் நிறப் பைகளுடன் வீட்டுக்கு வந்தார். கந்தசாமி அவரை பயபக்தியுடன் ஒரு அறைக்குள் கூட்டிச் சென்ற போது, சாத்திரி அறையைச் சுற்றி நோட்டமிட்டு, தனது கண்ணை அகல விரிந்து, கட்டியிருந்த கொண்டையையும் அவிட்டுவிட்டு, தலையை ஆட்டி, பெரிதாக மூச்சுவிட்டான். அதனைப் பார்த்த கந்தசாமிக்கு பயமாக இருந்தது. பயந்தபடி “என்ன சாத்திரியார் “ என்றான்.

தலையை ஆட்டியபடி சாத்திரி “ கெட்ட ஆவிகளின் நடமாட்டம் கூடிப்போச்சு… அதோட பேயளும் குட்டிச் சாத்தான்களும் சேர்ந்து கும்மாளம் அடிக்குதுகள்… “ என்று கூறி, பல்லை நறும்பிக்கொண்டான் பல் நறும்பல் சத்தம் கந்தசாமிக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது.

இதன்பின் சாத்திரி; தான் கொண்டு வந்த ஓரு துண்டை விரித்து, அதில் அமர்ந்து, தனது பைகளுக்குள் இருந்த வாழைப்பழம், மாம்பழம், நீற்றுப்பூசணிக்காய், மாவினால் செய்யப்பட்ட பாவை, ஓரு பிளாச்ரிக்கினால் செய்யப்பட்ட மண்டையோடு போன்றவற்றை தன் முன் பரப்பினான். பின்னர் கையில் வைத்திருந்த உத்திராட்ச மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டு. விளக்கைக் கொழுத்தினான். சாம்பிறாணிக் குச்சியை விளக்கில் கொழுத்தி வாழைப்பழத்தில் குத்தினான். கற்பூரத்தைக் கொழுத்தி பாவைக்கு ஆலாத்திய பின், நீற்றுக்காயை வெட்டி அதன்மேல் குங்குமத்தைப் தடவினான். சாம்பிரணி நறுமணமும் விளக்கொளியும் வெட்டியநீற்றுப் பூசனிக்காயில் பூசப்பட்ட குங்குமமும் சாத்திரியின் உச்சாடனமும் உறுமலும் கந்தசாமியை திகைப்புக்குளளாக்கியது. இதனை அவதானித்த சாத்திரி உறுமிச் சத்தம் போட்டு “ ஓம் மகாகாளி… காடேறி… காத்தருளம்மா… ம்.. ம்.. ம்…“ எனக்கூறி சாமியாடத் தொடங்கினான். அவன் கையிலிருந்த உடுக்கும் அவன் குரலுக்கேற்ப கூடிக்குறைந்து ஓசையெழுப்பியவாறு இருந்தது. பின் கந்தசாமியை நோக்கி வீபூதியை எறிந்த சாத்திரி “ நீண்டகாலமாக இந்த வீட்டில் பேய்கள்;, குட்டிச் சாத்தானுகள், கெட்ட ஆவிகள் குடிகொண்டுள்ளன. படிப்படியாகத்தான் இவற்றைக் கலைக்க வேண்டும். அதற்கு பல வழிமுறைகளைக் கையாள வேண்டும்.“ என்றுகூறியபின், ஆவேசம் தணிந்து அமைதி நிலைக்கு வந்த சாத்திரி “ இந்த வீட்டுக்கு பரிகாரம் செய்வதற்கு என்னைவிடப் பெரிய மந்திரவாதிதான் வேண்டும். அவர் இந்தியாவில் கேரளாப் பகுதியில்தான் இருக்கிறார். குறைந்த செலவில் அவரைப் பிடிக்கலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது“ என்றான்.

தன் நிலை மறந்த கந்தசாமி, தன் கழுத்தில் கிடந்த ஐந்து பவுண் சங்கிலியை கழற்றிக் அவன் கையில் வைத்து, அவனைக் கும்பிட்டு, “ நீங்க நினைக்கிறமாதிரிச் செய்யுங்க சாமி…“ என்றான்.

அதன்பின்னர் இந்தியத் தொடர்புக்கு நவீன கைத் தொலைபேசியையும் வேண்டிக் கொடுத்தான். ஒரு நாள் ; இரண்டு நாள், மூன்று நாள் எனக் காலம் போய்கொண்டிருந்தது. சாத்திரி கந்தசாமியுடன் அவ் வீட்டிலேயே தங்கிவிட்டான். மறுநாள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள மந்திரவாதி, அங்கு மடைபரவி, தீமூட்டி, பேயாடிக்கொண்டிருந்தான்;. கந்தசாமி தான் வேண்டிக்கொடுத்த புதுக் கைத்தொலைபேசியில் புலனம் (Whats App) மூலமாக அதனைப் பார்த்து, திகிலடைந்து தன்னை மறந்தான். இதனை கவனித்த சாத்திரி மேலும் புலனம் (Whats App) மூலமாக அங்கு நடக்கும் மாயவித்தைகளைக் காட்டி, அதனை மேலும் பெரிதுபடுத்திக் கதை கூறி, கந்தசாமியை பயப்பிராந்தியத்துக்குள் நகர்ததியபடி சாமி ஆடிக்கொண்டு, பெரும் சத்தமாகக் கத்தி, “ ஓரு பெரிய பேயைப் பிடிச்சுவிட்டோம்;… என்னும் சின்னச் சின்ன குட்டிச்சாத்தான்களும் குட்டிப் பேய்கள் சிலவும் வீட்டைச் சுற்றிச் சுற்றித் திரிகின்றன. வீட்டுக்குள்ளும் அவை வந்து வந்து போய்கொண்டிருக்கின்றன. “ என்ன செய்கிறதென்றான். அதலட்டலாக.

கந்தசாமி அழாக்குறையாக “ சாத்திரியார்… ஒரு பேயைப் பிடிக்கவே… ஐந்து பவுண் சங்கிலி, கைத் தொலைபேசி, பதினேழாயிரம் ஈறோ… செலவாகிவிட்டுது. மற்றதுகளையும் பிடிக்கிறதென்றா… என்னும் செலவாகுமே… என்ன செய்கிறது… யாரட்டைக் கடன் கேட்கிறது? “ என்றான். சாத்திரி “ பிரச்சினையில்லை… காசைச் சேர்த்துவைத்துவிட்டு என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள், மற்றப் பேய்களையும் பிடிப்பம்… “ என்று கூறிய இந்தியா கிழம்பிவிட்டான்.

(உண்மையும் கற்பனையும்)

leave a reply