Breaking News

என்(ண்) தேசங்களை வென்றவள்..!

என்(ண்) தேசங்களை வென்றவள்..!
ஹே!! டியோனியஸ்!!
பிரபஞ்சத்தின்
அதி பழமையான
பழரசத்தின் ஒரு துளியை
என் நுனிநாக்கில் இட்டுவிடு
என்னவளின் முத்தத்தைவிட
தித்திப்பான போதை
உன்னிடமுள்ளதாய்
நேற்றைய கனவில்
வீனஸ் என்னிடம்
தர்க்கித்துக்கொண்டிருந்தாள்
ஆர்டெமிஸ், நிலவை விட்டுவிட்டு
என்னவளை ஆளப்போவதாய்
அடம்பிடிக்கிறாள்
தனக்கு பிரபஞ்சத்தின்
பிரகாசமானதொன்றை
ஆட்சி செய்யவேண்டுமென
நீண்ட நாள் ஆசையாம்
பெர்சியருக்கு முன்
இவளை நிறுத்தியிருந்தால்
எத்தினியக் கடற்படையும் , ஸ்பாட்டன்களும்
உயிரிழப்பின்றி வெற்றி கண்டிருப்பார்களாம்
இவளின் அழகுக்கு முன்
யுத்தங்கள் மண்டியிட்டிருக்குமென
ஆதங்கம் கொண்டான் ஆரெஸ்
மசிடோனியா அழகிகளும்
ஏன் கிளியோப்பாட்றாவும் கூட
உயிரோடு இருந்திருந்தால்
இவள் மீது பொறாமை
கொண்டிருப்பார்களாம்
ஹோமர் எழுதத்தவறிய
காதல் காவியம் இவள் என
என் கனவில் வரும் சில
தீப்ஸ் தேசப் பிரஜைகள்
கிசுகிசுக்கிறார்கள்
பார்த்தாயா அத்திகா..!
உன்னால்
ஒரு தேசத்தின் கடவுளர்களோடெல்லாம்
போட்டிபோடவேண்டியிருக்கிறது
இனி இமைகளை சரி செய்துகொள்ளாதே!
உதட்டுக்கு நிறச்சாயம்
வேண்டவே வேண்டாம்!
அடிக்கடி ஆடை வாங்காதே,
மஞ்சள் தேய்த்து
சத்தியமாய் ஸ்நானம் செய்வதை நிறுத்து
அக்தரும் ஜவ்வாதும்
அறவே வேண்டாம்!
ஆம் நான் அவசர அவசரமாய்
உன் அழகில் ஒரு பகுதியை
குறைத்தாக வேண்டும்
-#அனாதியன்-

leave a reply