Breaking News

பல்துறைக்கலைஞர் பராபற்றிய ஓர்பார்வை கே.பி.லோகதாஸ்

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் விழி, பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்கள் மூத்த கலைஞரே!!
ஈழத்தில் இளம்வயதிலேயே சமூகப்பணி கலைப்பணி என்று ஆர்வம் கொண்டு கம்யூனிஷத்தால் ஈர்க்கப்பட்டு சமூகத்துக்கான போராட்டங்களில் தோழர் சண்முகதாசன் அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.
கலையிலே இளைய பத்மநாதன் அவர்களை குருவாகக் கொண்டு நீண்டகால கலைப்பணி!
புலம்பெயர்ந்து ஜேர்மன், பின்னர் பிரான்ஸ் வந்து தமிழர் கலை பண்பாட்டு கழகத்தினூடக நாடகங்கள்,இசைநிகழ்ச்சிகள், குறும்படங்கள் என்று தலைவர் பிரபாகரன் அவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக பிரான்ஸ் கலை பண்பாட்டு கழகத்தினூடக இவரது பணி 3 தசாப்தகாலம். 17.09.2000 ரி. ஆர்.ரி தொலைக்காட்சி ஊடகம் நிர்வாகம் ரி.ரி.என் ஆக கைமாறப்பட்ட போது அதன் கலைப் பொறுப்பாளராக இவர்.
இவர் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்களை வைத்து இயக்கிய „பேரன் பேத்தி“ குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டது.
அது மட்டுமல்ல பாரிஸின் பல முன்னணிக் கலைஞர்களை வைத்து இவர் எழுதி இயக்கியிருந்த „ஒரு பார்வை“ முழுநீளத் திரைப்படம் சிறப்பாக அமைந்திருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிவரமுடியவில்லை, வெளிவந்திருந்தால் நம்மவர்கள் சினிமாவில் ஒரு மாற்றத்தை அப்போதே ஏற்படுத்தியிருக்கும்.
பரா அவர்கள் எழுதி இயக்கி உச்சம் தொட்ட நாடகங்கள் பல அதில் ஒன்று பாரிஸில் நவீன ஔவையார்“ நாடகம் இரண்டு மணித்தியாலங்கள் பல நடிகர்கள் ஔவையாராக கணேஸ் தம்பையா நடித்திருந்தார். பாடலும் உரையாடலும் கலந்த நாடகம். பிரான்ஸ் தவிர்ந் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் மேடையேற்றம் கண்டது.
பாரிஸில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழாவில் மூத்த நாடகவியலாளர் எம்.அரியநாயகம், இளம்கலைஞர் கெங்கேஸ் ஆகியோருடன் இணைந்து சிறப்பாக நடத்திய பெருமைக்கு இவரது உழைப்பும் மிக முக்கியமானது.
மூத்த கலைஞர்களிலிருந்து இளைய கலைஞர்கள் வரை நேசத்துக்குரியவராக திகழும் பரா அவர்கள்.
முன்நின்று நடத்தாத கலைநிகழ்வில்லை பாரிஸில் என்றால் அது மிகையாகாது.
இவரது பணிவும் கனிவும் நிறைந்த மென்போக்கு மாற்றுக்கருத்தாளர்களையும் இவரைத் தேடிவந்து கட்டியணைத்து கைகுலுக்கவைக்கிறது.
இவருடைய சிறப்பறிந்த எங்கள் தோழமைத்தந்தை ஏ.ரகுநாதன் அவர்கள் பரா அவர்களின் சேவையை பாராட்டி ஒரு பாராட்டு விழா நடத்தினார்.
அதேபோன்று பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கு கழகம் „ஈழத்தமிழ் விழி“ என்ற விருது வழங்கி பரா அவர்களை கௌரவித்தார்கள்.இப்படி அவருக்கான மரியாதையை
பலரும் செய்து வருகிறார்கள்.
பரா அவர்கள் பற்றி மூத்தகலைஞர் ஈழத்தமிழ்விழி அமரர் முகத்தார் ஜேசுரட்ணம் அவர்கள் அவரது „நீயும் நானும் „நூலில் குறிப்பிட்ட தகவல் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது „பணிவிலே ஏ .வி.எம் சரவணன் போல் சிறுவர் பெரியவர் என்று பார்க்காமல் கைகட்டி நிற்கின்ற பாங்கு பண்பாளனுக்கான சிறந்த அடையாளம். அது தம்பி பராவிடம் தான் இருக்கிறது.
இன்று மகிழ் பறை ஓசையுடன் அனைத்து நிகழ்விலும் ஒற்றுமை ஓசை எழுப்புவதோடு இளையவர்களையும் இசையூடாக இணைக்கிறார். எங்கள் பாரம்பரிய கலைவடிவங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அவரது அக்கறை ஓசை அகிலமெங்கும் அதிர்கிறது.
நல்வாழ்த்துக்கள். (K.P.L) 13.05.18

leave a reply