Breaking News

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் “ஈழத்தமிழ் விழி” விருது பெற்ற கலைஞன் திரு.நாகலிங்கம் இந்திரநாதன்

மனிதன் உரு சமூகப்பிராணி தனித்து வாழ முடியாதவன்.எனவே தனது உடல்வலு,பொருள்வலு,கலைத்திறன் போன்ற எந்த சிறப்புககளையும் தனது உற்றம் சுற்றம் கடந்து சமூக தேசிய தளங்களிலும் செலவிட வேண்டிய கடப்பாடுடையவன்.இதைஅறுத்து வாழ்பவர்கள்உளர்.ஏற்று வாழ்பவர்கள் சிலர். அவர்கள் தொண்டர்களோ கலைஞர்களோ கல்விமான்களோ யாராகட்டும்… அவர்களின் சிறப்பை உணர்ந்து இனம்கண்டு போற்றி பட்டமளித்து சிறப்பித்து ஊக்குவித்து வாழ்த்துவதை ஒரு சமூகப்பணியாக கருதி கடந்த எட்டு வருடங்களாக சமூகத்திற்காக அற்பணிப்போடு பணியாற்றிய ஒருவரை தெரிவு செய்து மான்பேற்றி மதிப்பழித்து வருகின்றது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்.

அவ்வகையில் 2015ம் ஆண்டு நடைபெறும் “இராக சங்கமம்” நிகழ்ச்சியில் திரண்ட மக்கள் வெள்ளத்தின் முன்பாக திரு.நாகலிங்கம் இந்திரநாதன் அவர்களுக்கு “ஈழத்தமிழ் விழி” விருது வழங்கி மதிப்பழிக்கின்றது.

கலைஞரின் பெயர் : நாகலிங்கம் இந்திரநாதன்

முகவரி : ஏழாலை தெற்கு மயிலாங்காடு சுன்னாகம்

தற்கால வதிவிடம் : லா கூர்நெவ் பிரான்ஸ்

தந்தை பெயர் : முருகேசு நாகலிங்கம்

தாயார் பெயர் : முதலி சின்னப்பிள்ளை

பிறந்த ஆண்டு : 11.06.1956

சகோதரர்கள் : 9  பேர் 

அன்பும் அறனும் சைவமும் தமிழும் செழித்தோங்கும் ஏழாலை மண்ணிலே நல்லொழுக்கம் நேர்மை வாக்குத் தவறாமை ஆகிய பண்புகள் கொண்ட முருகேசு நாகலிங்கம் பல்வேறு தருணங்களில் சமாதான நீதவான்,இணக்கசபை உறுப்பினர்,ஏழாலை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்,விடுதலைப் புலிகளின் இணக்கசபையின் தலைவராக பணியாற்றியவர்.இவரது 7வது பிள்ளையான நாகலிங்கம் இந்திரநாதன்

ரியூட்டரியில் ஆசிரியராகக் கடமை புரிந்தார். சிறு  வயது முதலே கலைத்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் தன்னை இணைத்துக் கொண்டவர். அக்காலத்தில் வைரமுத்து என்கிற பெயர் கொண்ட அண்ணாவியாரிடம் நாட்டுக் கூத்தும்,நாடகமும்,பண்ணிசையும் பயின்றவர்.

அமரர் நடிகமணி வி.வி வைரமுத்து அவர்களிடம் வில்லிசைத்துப் பாடும் திறனுக்காகப் பாராட்டுப்பெற்றவர்.பிற்காலத்தில் பிரான்சில் திரு.நாச்சிமார் கோவிலடி திரு.இராஜன், திரு.கணேஸ் தம்பையா,வில்லிசை வித்தகர் அமரர்.சின்னமணி அவர்களுடைய குழுவில் பணியாற்றிய திரு.சிவா ஆகியோரது வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்திருக்கின்றார்.

தனது ஊரில் நடக்கின்ற பொதுவிடயங்கள் எதுவானாலும் முன்னின்று செயற்பட்டவர். அன்று தொட்டு மண்ணுக்கும்,மக்களுக்கும் கலையூடாகவும்விளையாட்டு போன்ற  வேறு வழிகளிலும் சளைக்காது முன்னின்று செயற்பட்டு வருபவர்.

தாயகத்தில் நடைபெற்ற மாவீரர் மேடைகளில் (மானிப்பாய், நீர்வேலி) “பூதத்தம்பி” நாடகத்திற்காக ‘சிற்றரசன்’ வேடமேற்று நடித்து புதுவை இரத்தினதுரை, பொன்சுந்தரலிங்கம் ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர்.

உதைப்பந்தாட்டப் போட்டிகளில் தாய்மண்ணில் சீமேந்து தொழிற்சாலை உதைப்பந்தாட்டப்  பிரிவில் இணைந்து விளையாடினார்.

ஆலயங்களில் பொதுமேடைகளில் கவிதைகள், பாடல்கள், எழுதுவது,பட்டிமன்றங்கள், வில்லிசை போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவது என்பன இவருடைய தொடர்ச்சியான வாழ்வோடு இணைந்த செயற்பாடுகளாகும்.

நகைச்சுவை, நாடகங்கள்  மூலம் தாய் மண்ணில் பிரபலமானவர்.புலம்பெயர்ந்த மண்ணிலும் பாடல்கள், கவிதை, நாடகம், விளையாட்டு எனப் பல்துறைகளிலும் இவரது பணிவிரிந்து கிடப்பது கண்கூடு  ‘யாழ்டன்’ விளையாட்டுக் கழகத்தின் பயிற்சியாளராகவும், நடுவராகவும் பணிபுரிந்திருக்கிறார். இன்னும் தொடர்ந்து செயற்படுகின்றது.

பிரான்சிலே உள்ள பல இசைக்குழுக்களில் உதாரணமாக இளையநிலா, ஈழநிலா, சுப்பர் ரியுனர், தமிழீழ இசைக்குழு, ஸ்டார் மீயுசிக் குறூப் போன்ற இசைக்குழுக்களில் பாடியிருக்கிறார்.

இப்போது சன்ராஜ் இசைக்குழுவில் இணைந்து பாடிவருகிறார். தனியார் இசை நிகழ்ச்சிகளில் திரையிசைப் பாடல்களோடு தழிழீழ விடுதலைப் பாடல்களையும் சேர்த்து பாடுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்படுபவர்.

ஆலயங்களில் பக்திப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், தனிக்கச்சேரிகள் எனப் பல வடிவங்களில் நிகழ்ச்சிகள் செய்து வருகின்றார்.இவரது தனியார் இசை நிகழ்ச்சிகளிற் கூட தாயகப் பாடல்கள் தப்பாமல்  இடம் பிடிக்கும்.

பல மேடைகளில் தானே மெட்டமைத்து உருவாக்கி இருக்கிறார். பத்துப் பாடல்கள் கொண்ட “டென்மார்க் அம்மன்” ஆலயங்களிற்கான இறுவெட்டு இவரது அண்மைய  கால முயற்சியாகும். இவற்றை  தானே பாடல் எழுதி மெட்டமைத்துப் பாடியிருக்கிறார்.

இப்போது அடுத்த இறுவெட்டிற்கான தாயரிப்பு வேலைகளில் பற்பல சமூக வேலைகளுக்கு இடையிலும் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறார்.

இலண்டனில் தற்போது வசிக்கும் பேராசிரியர் திரு.பாலசுகுமார் அவர்களால் பாரிசில் நடைபெறும் பொங்கல் விழாவிற்காக எழுதப்பட்ட பலவித நாட்டுக்கூத்து இராகங்களில் அமைந்த இசை நாடகத்திற்கு பிரதான பாடகரா  தனது  கடமையை  மிக அழகாகச் செய்தன் மூலம் மக்களதும் பாலசுகுமார் அவர்களதும் பாராட்டைப் பெற்றார்.

குறிப்பாக இசைநிகழ்ச்சிகளில் சபையோர் எழுந்து நின்றும் கண்கலங்கியும் தமை மறந்த நிலையில் கரவொலி எழுப்பியும் இரசித்த பாடல்கள் ஏராளம் அவற்றுள் சில:

ஒன்றல்ல இரணடல்ல  நூறாயிரம்….

கேட்கும் போதெல்லாம் காலத்தாலும் இடத்தாலும் முள்ளிவாய்க்காலுக்கே அழைத்துச் செல்லும் இப்பாடல் தன் இசையசைவு எங்கும் ஒரு மூச்சுத் தப்பாமல் முள்ளிவாய்க்கால் அவலத்தையும் சில பிரதானமான வரலாற்று உண்மைகளையும் செப்பமான இசைபாங்கோடு பதிவு செய்கிறது. இதன் வீடியோ சேர்ந்த வடிவம் இந்திய தொலைக்காட்சியில்  பலமுறை ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இணையத் தளங்களைப்  பொறுத்தவரை யாரும் இப்போதும் பார்வையிடலாம்.

பிரான்ஸ் மண்ணிலே விடுதலைக்காக தமது இன்னுயிரை நல்கிய கஜன், நாதன் ஆகியோருக்காக 2012 இல் மாவீரர்தின  நிகழ்வையொட்டி வெளிவந்த நாடு கடந்தும் நாட்டிற்காக உழைத்த வீரரே… என்ற பாடல்.

தாயகத்தில் மாவீரர்களின் கல்லறைகள் யாவும் அழிக்கப்பட்ட இன்றைய நிலையில் பிரான்ஸ் மண்ணில் மனித நேயத்தாலும் பண்பாட்டாலும் தப்பிப் பிழைத்த இவ்வீரர்களது கல்லறைகளைச் சுத்தம் செய்தும் மலரஞ்சலி செய்தும் பாடி நடித்து வெளிவந்த பாடலை பல்லாயிரம் தமிழர்கள் ஜீ.ரீ.வியிலும் இணையத் தளங்களிலும் கண்டு கழித்துத் தமது அபிப்பிராயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

ஆறாத அனல் சுட்ட காயம்…..

எழுத்து, மெட்டமைப்பு, பாட்டு – இந்திரன்

வாத்திய இசையமைப்பு – இன்பராஜ்

மே 17 இன் நினைவுகளையும் வலிகளையும் சுமந்து கேட்போரை 2009 முளிளிவாய்க்கால் வரை இழுத்துச் சென்று அன்றைய யதார்த்தத்தை அச்சொட்டாக மனவரங்கில் ஏற்றிவிடும் அற்புதமான சக்தி மிக்க பாடல்.

எழுத்து : சிவா சின்னப்பொடி

மெட்டு : இந்திரன்

வாத்திய இசையமைப்பு : சிறீ

தமிழீழ தேசிய துக்க நாள் தனிலே…

இந்நாளுக்காக வெளிவந்த பாடல்தான் இதுவும் அடிமைச் சங்கிலியால் மேலும் இறுக்கப்பட்டுள்ள தமிழர்கள் தாம் தோல்வியால் துவண்டுவிழும் நிலை கடந்து தோல்வியையே வெற்றி கொள்ளும் வழிதேடி “நாடு கடந்த அரசை” பலமூட்டம் விதமான பாடல்.

எழுத்து : சுதன்ராஜ்

மெட்டு குரல் : இந்திரன்

வாத்திய இசையமைப்பு : சிறீ

முள் முடிதரித்தனரே…

யேசுபிரான் மாந்தர்களின் துன்பங்கள் நீங்க முள்மூடி தரித்தது போல உடலை உறைய வைக்கும் குளிரிலும் தமது மக்களின் விடிவு தேடி யூ.என்.ஒ வரை நடை பயணம் மேற்கொண்ட விடுதலை வீரர்களுக்காக வெளியான பாடல்.

மெட்டு எழுத்து :ஜெயா

வாத்திய இசையமைப்பு : சிறீ

சுற்றி வளைத்தொரு முற்றுகைப் போரில் சிக்கித் தவிக்குது  ஈழம்…

பாடல் வரிகள் : ஜெயா

இசை : தில்லைச்சிவம்

அந்த ஆலமரம்…

இப்பாடலால் பாதிக்கப்படாதவர்கள் யாருளார்.

எழுத்து : மணி நாகேஸ்

இசையமைப்பு : தில்லைச்சிவம்

இந்த ஒரேயொரு பாடலுக்காக இவர் கனடா அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட இருக்கிறார் என்பது இனிமையான செய்தி.

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு…

இப்பாடல் வெளிவந்த நேரமே அற்புதமானது தமிழர்களது கரங்களைப் பொறுத்தவரையில் விடுதலைக்கான அத்தனை வழிகளும் அடைபட்டு உறைபனியாகிவிட்ட இந்நிலையில் நாடுகடந்த அரசின் சுதந்திர சாசன முரசறைவு மெள்ள ஆனால் காத்திரமான ஒரு அரசியல் அசைவை உலகிற்கு அறிவித்தது.

தமிழர்களோடு நாடு கடந்த அரசின் பிரதமர் திரு.உருத்திரகுமாரர் அவர்களுடைய உள்ளத்தையும் தொட்டுவிட்ட இப்பாடல் அற்புதமானது.

எழுத்து : சுதன்ராஜ்

பாடியவர்கள் : நிலானி, கவிதா, இந்திரன்

இசையமைப்பு : துநல

தமிழர்கள் நாம் பரணியெங்கும் பரந்துள்ளோம்….

இப்பாடல் 2008 இல் சிலம்பம் அமைப்பு ஒழுங்கு செய்யும் பொங்கல் நிகழ்சியில் பாடப்பட்டது.

எழுத்து : பரா

இசை : உமாபதி

பம்பையில் வீற்றிருக்கும் கன்னி மூல கணபதிக்கு….

இப்பாடல் சபரி மலை ஜயப்பனுப்பானது.

எழுத்து : நவநீதன்

இசை : மகேஸ், சதா (இறுவெட்டு – உன்நாமம் என் நாவில்)

உயிருக்கு ஊனம் இல்லை….

எழுத்து : புலவர் சிவநாதன்

இசை : மகேஸ், சதா

கண்ணிவெடிகளின் தாக்குதல் உட்பட போரின் பல்வேறு பொழுதுகளில் தமது உறுப்புக்களை இழந்த வீரர்களை நெஞசில் நிறுத்தி எழுதப்பட்டு அவ்வாறே பாடவும் பட்ட பாடல்.

முள்ளிவாய்க்கால் அவலங்களின் போது புலம்பெயர் மக்களின் தொடந்த போராட் காலங்களில் அந்த கனத்த இரவுகளில் இவரது பாடல்கள் எத்தனையோ உள்ளங்களுக்கு ஆறுதலளித்தது.

பல்கிளைகள் கொண்ட இவரது  சமூக சேவைப் பயணம் அத்தனையிலும் அற்புதமான நகைச்சுவை இழையோடுவதைக் காணலாம். நிகழ்ச்சிகளின் போது அந்த சுகத்திற்காகவே இந்திரனைச் சுற்றி இளைஞர்கள் களிப்போடு கூடுவதைக் காணலாம்.

காத்தான் கூத்து மெட்டு போன்ற  மென்னைப் பாங்கான மெட்டுக்களுக்கு உடனுக்குடன் தாளத்தோடு  பக்குவமாக இசைந்த பாடல் வரிகளை யாத்துப் பாடும் ஆற்றல்  கைவரப்பெற்றவர்.

அதே வேளையில் அவரது விரல்கள் கையிலுள்ள உடுக்கை எனும் அற்புத வாத்தியத்தை பாடலின் தாளத்துக்கு மட்டுமல்ல வரிகளின் மென்மைக்கும் உக்கிரத்திற்கும் ஏற்ப ஏற்றி இறக்கி சாவகாசமாக வாசிப்பதை தனியாகச் சுவைக்கலாம்.

பழைய T.T.N இணையத்தள தொலைக்காட்சி சேவையான வளரி ஆகியவற்றில் அன்றும் G.T.V, TRT வானொலி யூரியூப் போன்ற  ஊடகங்களில் இன்றுமாக இவரது படைப்புகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன.

நாடகங்கள்

யாழ்பாடி இசைநாடகம்….

பிரதியாக்கம் : திரு.இளையபத்மநாதன்

நெறியாள்கை : திரு. எம்.அரியநாயகம்

நாமும் நலியாக் கலையுடையோம் அடடே! இப்படியுமா?  ஆகிய நகைச்சுவை நாடகங்கள் –

பிரதியாக்கம், நடிகர்கள், நெறியாள்கை : திரு. பரா

மேடை நிகழ்ச்சிகளின் முன்பே , அதன் அமைப்பாளர்களுக்குத் தன்னால் இயன்றளவு உதவிகளைச் செய்வார். விசேட பண்பு ஒரு தொழிலாளியாக, ஒரு தொண்டனுக்குத்  தோள் கொடுப்பது! இளம் சமூகத்தோடு எப்போதும் நகைச்சுவைப் பண்போடிணைந்த நட்பை பேணுவதோடு, பொதுச்சேவைகள், ஆலயப்பணிகளில் ஈடுபடுவது, தேவார  திருவாசகங்கள் பாடுவது,  மரணச் சடங்குகளில் கூட அவற்றை முறைப்படி நடாத்துவதற்கு உறுதுணையாக இருப்பது இப்படி, எத்தனையோ.

இவரது நகைச்சுவைப் பாடல்களில் ஒரு பாடலின் சில வரிகள் : (அசல் பாடல் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் ஒளியில்லை)

“ஒரு பெண்ணைப் பார்த்து அனுப்பச் சொன்னேன் இன்னும் வரவில்லை
நான்         கறுப்போ சிவப்போ செய்யப் போறேன் என்னில் பிழையில்லை”

 

“நான் தனியா வாழ்ந்தது போதும் – ஒரு
துணையோ எனக்கு  வேணும் – இனி
என்ன செய்வது வயசும் போச்சுது
தலையும் நரைச்சுப் போச்சு.”

1983 இலிருந்து தொடர்ந்து வந்த சில வருடங்கள் தமிழர்கள் மிகமிக அதிகமாகப் புலம்பெயர்ந்த காலங்கள். அன்று அவர்கள் தங்களது துன்ப துயரங்களை இப்படியான திரைமெட்டுக்களில் எழுத்தை ஈழப்பாணியில் பதிவு செய்தார்கள். அவற்றை ஒன்று  சேர்ப்பது ஒரு உன்னதமான இலக்கிய பணி. அந்த வகையைச் சார்ந்துதான் இப்பாடல்.

1992 இல் பிரான்சிற்க்கு  வந்ததிலிருந்து தொடுத்த  பணி இன்னும் தொடர்கின்றது. அந்நாட்களில் சறோன் பாடசாலையின்  உதைபந்தாட்ட அணியில் இணைந்து விளையாடியும், அதன் வேலைகளில் ஈடுபட்டும் உழைத்திருக்கிறார்.

பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கும் பாடியிருக்கிறார்.

“இந்திரன் இசைக்குழு”

“இந்திரன் இசைக்குழு” என்பது , இவருடைய  இசைக்குழு  யோகேஸ், ராஜன் ஆகியோர் முறையே  சுரத்தட்டு,தபேலா வாசிக்க இவர் பாடியதை இரசித்த அனுபவத்தைப் பலரும் மறக்கமாட்டார்கள்.

இவருக்கு கிடைத்த பட்டங்கள்

கலைமணி

லாக்கூர்னவ் சைவபரிபாலன சபையின் சைவக்குருக்கள் சுதன் ஜயா அவர்களும் அவ்வாலயத்தின் தர்மகத்தா அவர்களும் இணைந்து கௌரவித்துக் கொடுத்தது.

மண்வாசனைக் கலைமணி

யேர்மன் சார்பூருக்கான தமிழ்ச்சங்கம்

1996 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் நடைபெற்ற ஒரு மாபெரும் இசைவிழாவிற்கு உலகெங்கும் இருந்து பல பாடகர்கள் வந்து பங்கேற்றனர்.அதில் இவர் பிரான்சிலிருந்து சென்று பங்கேற்று கௌரவிக்கப்பட்டார்.

இன்றைய நாட்களில் இவருக்கு இப்படியான கௌரவிப்பு சிறிதும் பெரிதுமாக அவ்வப்போது ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன.

சுவிஸ், நோர்வே, டென்மார்க், இலண்டன், ஹொலண்ட், ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு தனியாகவும், தனது குழுவுடனும், வேறு  இசைக்குழுக்களுடனும் சென்று  இசைநிகழ்ச்சிகள் செய்திருக்கிறார்.

குறும்படங்கள் 

சுகந்தனின்  “சிறுமலர்கள்”, பாஸ்கரனின் “நதி” ஆகியன. முகநூலில்  தொடர்ச்சியான  விறுவிறுப்பான நாடகங்கள், குறும்படங்கள் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகின்றன.

மன்னாரைச் சேர்ந்த ஆசிரியரும்,  அண்ணாவியாருமான  திரு. குழந்தை ஜயா அவர்களின் மைந்தர்கள் ஆனந்தன, இன்பன் ஆகியோர் பாரிசில் மேடையேற்றிய பல நாடகங்களில் பாடியும், நடித்தும் இருக்கின்றார்.

“அன்னை தமிழீழ மண்ணே உன்னை”  என்ற விடுதலைப்பாடலைப்  பாடும் போது  அப்போது மேடையிலிருந்த திரு.கங்கை அமரன் அவர்கள் அழுகையை அடக்க முடியாமல் மேடையை விட்டே இறங்கி தன் உணர்ச்சிகள் வடியும் வரை ஒதுங்கி நின்றார் என்பது  அவர் உணரச்சிபூர்வமான, பொய்மையற்ற மக்கள் பாடகன், கலைஞன் என்பதற்கு ஒரு சிறப்புச் சான்று.

அண்மையில் இவரது நண்பர்களால் மிகுந்த எதிர்பார்ப்போடு மேடையேற்றப்பட்ட “அரிச்சந்திர மயானகாண்டம்” நாடகத்தில் ஏறக்குறைய வீ.வீ.வைரமுத்து அவர்களை முழுமையாக நினைவூட்டும் விதமாக நடித்து , மண்டபத்தில்இருந்த அத்தனை அன்புள்ளங்களின் பாராட்டுதல்களையும் அள்ளிக்கொண்டார்.

மேலும் இன்றைய தேதியில்  சில மாதங்களுக்கு முன இவரால் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல்கள்நிறைந்த ஒரு இறுவெட்டு இந்தியாவிற்கு அனுப்பி பாடப்பட்டு, பக்கவாத்திய இசை சேர்க்கப்பட்டது. அந்த இறுவெட்டில் திருவாளர்கள் ரி.எல்.மகாராஜன், வீரமணிதாஸ், மாணிக்க விநாயகம், முகேஸ், ரி.எம்.எஸ்.செல்வக்குமார் போன்ற புகழ்பெற்ற பாடகர்கள் பாடியுள்ளார்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட தமிழ் மக்கள் நல்வாழ்விற்காக உழைக்கும் அத்தனை தளங்களிலும் இவரது அக்கறை அர்ப்பணம் மகிழ்வு பொங்கும் மன உடல் உழைப்பு உள்ளது என்பதை எவரும் திருப்தியோடு ஏற்றுக்கொள்வர்.

11.10.2015 சபையோர் முன்னிலையில் “ஈழத்தமிழ் விழி” விருது   தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்.

leave a reply