Breaking News

வெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து !

வெளிநாட்டில் ஒரு பிள்ளை இருப்பது என்பது எம்மவர்களுக்கு ஒரு
சமூக அந்தஸ்த்து என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அவர்களுக்கு அந்தரங்கமான சோகம் என்பது அவர்களுக்குத்தான்
தெரிகிறது. அதேபோல் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளுக்கும்
பணம்,பொருள்,படாடோபம்,நாகரீகம்,வாழ்வியல் மாற்றத்தினால்
ஏற்பட்ட புத்துணர்ச்சி என்று ஏகப்பட்டவை இருந்தாலும் பலருக்கு
பிரிவின் தாக்கமும்,பெற்றோர்,உறவுகள் பற்றிய ஏக்கமும்,பாசமும்
இருந்துகொண்டுதான் இருக்கிறது.ஐரோப்பிய நாடுகளிலும்,கனடா,
ஆஸ்த்திரேலியா போன்ற நாடுகளிலும் எம்மவர்கள் தாய் நாட்டை
விட்டு புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.அநேகமானோர் நாற்பது
ஆண்டுகளுக்குமேல் தங்கள் மண்ணையும்,மக்களையும்,சொந்த
பந்தங்களையும் பிரிந்து வந்தவர்களாக இருக்கிறார்கள்.ஆரம்பத்தில்
அந்நிய தேசத்து வாழ்க்கை இவர்களுக்கு கலாச்சாரம்,மொழி,
பண்பாடு,பழக்கவழக்கங்கள் போன்ற காரணிகளில் இணைந்து கொள்வது அல்லது அனுசரித்துபோவது என்பது கஷ்டமாக இருந்தாலும் காலப்போக்கில் அது அவர்களுக்கு பழக்கப்பட்டதாகவும்
ஏற்புடையதாகவும் ஆகிவிட்டது.
இயந்திரமயமான வாழ்க்கை,பனியிலும்,கடும் குளிரிலும்,உடல் வருந்திய உழைப்பு,ஊரில் உள்ள பெற்றோரை,உறவுகளை நல்லபடி
வாழவைக்க வேண்டும் என்ற துடிப்பு,கடமை,என்று இவர்களுக்கு
பல உணர்வுகள் இவர்களின் உளத்தில் உறைந்து கிடந்தன.
அதேபோல் ஊரில் உள்ள பெற்றோர்கள் வெளிநாட்டில் பிள்ளைகள்
இருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியிலும்,கௌரவத்திலும் சொல்லிக்
கொண்டாலும் உள்ளுக்குள் தங்கள் பிள்ளைகள் பிரிவால் வேதனப்
பட்டார்கள்.சோகத்தால் துவண்டார்கள்.தங்கள் பிள்ளைகள் ஒரு
வருடமோ,இரண்டு வருடமோ அல்லது பல வருடங்களுக்கு பின்னோ விடுப்பில் ஊருக்கு வரும்போது அவர்களுக்கு ஏற்படும்
ஆனந்தம்,மகிழ்ச்சி சொல்லும்தரமன்று. ஓடியோடி உபசரித்து ஊரில்
பல இடங்களுக்கு அவர்களை கூட்டிச் சென்று காட்டுவதும்,பிடித்த
உணவுவகைகளை செய்து கொடுப்பதும்,பலகாரங்கள் செய்து அவர்களுக்கு பரிமாறுவதும்,..இப்படி தங்கள் அன்பை வெளிப்படுத்தி
தங்கள் பிள்ளைகளை சந்தோசப் படுத்துவார்கள்.விடுமுறை முடிந்து
அவர்கள் திரும்பும்போது அவர்கள் படும் வேதனை சொல்லில்
அடங்காதது.அம்மா,அப்பா,சகோதரங்கள்,பாட்டன்,பாட்டி,மாமா,மாமி
மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கண்கள் கலங்கி
வழியனுப்பும்போது இதயங்கள் நொறுங்கிப் போவதுண்டு. ஒரு மூன்று அல்லது நான்கு வாரத்துக்குள் என்னத்தை செய்வது?அதைப்
பண்ணவில்லையே..இதைப் பண்ணலியே என்று புலம்பும் அம்மாவின் அன்பை விலக்க முடியாமல் விடுபடும் பிள்ளைகள்
கண்ணீர் ததும்ப பிரியும்பொழுது பாசத்தின் அணை உடைந்து
பிரவாகமாக ஓடும்.இந்தக் காட்சிகள் ஒவ்வொரு வருடமும் எமது
தேசத்திலே.எமது ஊர்களிலே இன்று இடம்பெறுகின்றன.
இப்பொழுதுள்ள அறிவியல் விஞ்ஞான யுகத்திலே பல மின் தொடர்பு சாதனங்கள் இருப்பதால் ஊர்விட்டு வந்ததும் இந்த சாதனங்கள்
மூலம் தொடர்புகள் தொடரும்….குறிப்பாக இப்பொழுது „ஸ்கைப்“
என்ற காட்சி தொடர்பாடல் மூலம் தங்கள் உறவுகளுடன் பார்த்து
பேசுகிறார்கள்.முன்பெல்லாம் தொலைபேசியில் குரல் மூலம் உறவாடியவர்களுக்கு இன்று அறிவியல் விஞ்ஞானம் கொடுத்த
பரிசுதான் இந்த „ஸ்கைப்“என்னும் தொடர்பாடல் சாதனம்.தங்கள்
பிள்ளைகளுக்கு அவர்கள் ஸ்கைப் மூலம் அவர்களின் பாட்ட,பாட்டிகளை காட்டுவதும்,அவர்களுடன் பேசவைப்பதும்,இன்று
புலம்பெயர் நாடுகளில் அன்றாடம் நடக்கும் விடயமாகும்.ஊரில்
உள்ளவர்களும் இதனால் மிக சந்தோசப் படுகிறார்கள்.சில பாட்டிகள்
தங்கள் பேரக்குழந்தைகளை கணினியில் தொட்டுவிட்டு பல மணி நேரம் தங்களை மறந்து நிற்பதும், சிலவேளைகளில் கைகள் அலம்பாமல் இருக்கிறார்கள்.கழுவ மறுக்கிறார்கள்.காரணம் கேட்டால் தங்கள் பேரக்குழந்தையை தொட்ட கைகளை கழுவ
மனம் வரவில்லையாம்.இதைப் பார்த்து கண்கலங்கும் மக்கள்
ஏராளம் எமது மண்ணில் இன்று.
உறவு என்ன ஊறுகாயா? வாய் புளிக்கும்போது தொட்டு நக்குவதற்கு?
உறவு எமது மூச்சுக் காற்று..இந்த மூச்சுக் காற்றை பிடித்துக்கொண்டு
அந்நிய நாட்டில் வாழும் எத்தனை இளைஞர்கள் இன்று வேதனையை அனுபவிக்கிறார்கள்.படுக்கையில் புரண்டு,பிரண்டு
படுத்து நித்திரை இல்லாமல் தூக்கத்தை தொலைத்து இவர்கள் படும்
வேதனை மகா கொடியது.
அம்மா ஊட்டிவிட்டத்தை நினைப்பதும்…
அம்மா காட்டிக்கொடுத்ததை அசைபோடுவதும்…
அம்மாவின் சமையல்,சாப்பாட்டின் மணத்தையும்,சுவையையும்
ருசிப்பதும்,அம்மாவின் சேலை நெடிகூட இவர்களுக்கு புது வாசனையாக இருக்கிறதாம்..என்னதான் வசதி,வாழ்க்கை என்று
இருந்தாலும் இவர்களின் வாழ்க்கை இங்கேயும் அங்கேயும் ஒரு
வெறுமையுடன் கூடிய வெட்டவெளியாக..சுட்டமண்ணாகவே
கிடக்கிறது இதுதான் உண்மை…

leave a reply