Breaking News

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

சுயசரிதை

பாவனை இன்றியே பழுதான பாதணி நான்.

இரண்டு உயிர்களின் இணைப்பிலேயே எல்லோரும் பிறக்கின்றனர். ஆனால் நானோ ஒரு உயிரின் இறப்பில்ப் பிறந்தேன். தாய் என்றோ, வீரன் என்றோ தலையில்த் தூக்கிக் கொண்டாடிய மாடென்கின்ற, என் தாயை/தந்தையை நீங்கள் அறிவீர்களா? தமிழனின் வீட்டில் தலைக்கட்டு ராஜாவாக/ராணியாக இருந்த அவர்களின் இறப்பில்த் தான் நான் பிறந்தேன். கேளுங்கள் ஒரு நிமிடம் என் கதையை. ஓயாமல் உழைத்த என் பெற்றோர்கள் நூலாகத் தேய்ந்தனர். அதனால்த் தான் இன்றும் ஓயாமல் உழைக்கும் மனிதனை மாடாகத் தேய்கின்றான் என்று சொல்வார்கள். ஓடி ஓடி உழைக்கும் தமிழனின் உடல் கறுப்பாக இருந்தாலும் உள்ளம் வெள்ளையாக அழகாக இருக்கின்றது. ஆனால் அன்றொருநாள் வந்தான் ஒரு வெள்ளை மனிதன். பார்ப்பதற்கு மிக அழகான தோற்றம் கொண்டவன், ஆனால் மனம் முழுதும் மாசு. மாசாய் இருக்கும் அவன் அனைவரையும் அடிமைப் படுத்தினான். அவன் அடி பணியவே பாதணிகளாகிய எங்களையும் உருவாக்கினான். கம்பீரமாகத் திரிந்த காளை மாட்டையும், பால் கொடுத்த பசுமாட்டையும் பாரபட்சம் இன்றிக் கொன்று குவித்தான். அந்தக் கொலையில்ப் பிறந்த விலை கூடிய ” லெதர் ஷூ ” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாதணி தான் நான், இன்று ஜெர்மனியில் கழிவுகள் கொட்டும் குப்பை மேட்டில் கவனிப்பாரின்றி கொட்டப்பட்டுள்ளேன். இத்தனைக்கும் நான் பாதம் தேயாப் பாவனையின்றி இருந்த பாதணியாவேன். இருப்பினும் ஏன் எறியப்பட்டிருப்பேன் என்ற கேள்வி உங்கள் மனதிலும் வருகின்றதா? சொல்கின்றேன் கேளுங்கள் என் சோகக் கதையை.

ஜெர்மனியிலேயே மிகப் பெரிய பணக்காரரான பேண்ட் என்பவரின் பாதங்களைத்தை தான் நான் அலங்கரித்தேன். சொந்தத் தொழில் செய்து சொகுசாய் வாழ்ந்த பேண்ட் அளவிற்கு மீறி அதிகமாகச் சம்பாதித்தார். பணத்தின் பகடைக் காயிற்கு அவரும் பலியானார். பழக்க வழக்கம் தவறாகிற்று, பழகும் நண்பர்கள் பிழையாகிற்று, எடுக்கக் கூடா போதை எடுத்து உடல் பாரிசவாதம் என்ற நோயில் வீழ்ந்தார் பேண்ட். நோயில்க் கிடந்த பேண்டிற்கு, சிவநேசன் என்ற தமிழ் நண்பர் என்னைப் பரிசாகக் கொடுத்தார். ஆடாத காலிற்குச் சலங்கை போல், இரண்டு ஆண்டாக நடக்கா அந்தக் கால்களை நான் அலங்கரித்தேன். சோர்ந்த அவரின் பாதங்களை நான் தங்கினேன். என் பாதங்கள் நடக்க முடிந்தும் நடக்காமல் ஏங்கினேன். கட்டிய கணவன் சரியில்லை என்றாலும், கட்டிலில் கிடக்கும் மனைவியைப் போல், நானும் வெளித் தோற்றத்தில்ப் புதிதாகவும், உள்ளே வெதும்பிப் புண்ணாகவும் கிழியத் தொடங்கினேன். என் கிழியலைக் கண்ட பேண்ட், நான் பழயதாகி விட்டேன் என்று பழைய கடைக்கு விற்றுப் பணமாக்கினார். பிணமாகப் போகினும் பணம் பார்க்கும் உலகமிது என்று எண்ணி நானும் ஏற்றுக்கொண்டு இடம் மாறினேன். பழைய கடைக்காரரும் என்னைப் பழுது பார்க்க முயன்றார். ஆனால் இரண்டு ஆண்டுகள் என்மீது பதிந்த பேண்டின் பாதச் சுவடுகள், என் உடல் அமைப்பையே உட்புறமாய் மாற்றிவிட்டது. அதனால் நான் உபயோகப்பட மாட்டேன் என்று, எடுத்து என்னை எறிந்தார் குப்பையில்.

எருவோடு எருவாய் மக்கும் நானே, பாவனை இன்றியே பழுதான பாதணியானேன்.

எழுத்து,
சிந்தனை சிவவினோபன்

leave a reply