Breaking News

என் வாசிப்பு அனுபவங்களும் என் எழுத்துப் பயணமும்! -இந்துமகேஷ்

வலைப்பூக்கள் மிகப் பிரபலமாகிக்கொண்டிருந்த புத்தாயிரம் ஆண்டின் அந்த ஆரம்பப் பொழுதுகள்…!
பூவரசுக்கான பணிகளில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டி இருந்ததால் இணையத்தளப் 
பக்கமாக என் கவனம் குறைவாகவே இருந்தது.
அவ்வப்போது வலைப்பூக்களின் பக்கம் வந்துபோகும்பொழுதுகளில் எல்லாம் என் பார்வையில் விரிந்த பக்கங்களில் புதிய புதிய படைப்பாளர்களின் ஆக்கங்கள் வியப்பளிக்கத் தவறவில்லை.
எழுதுவதை விடுத்து ஒரு வாசகனாக இரசிகனாக அவைகளை அணுகுவதில் ஒரு ஆனந்தம் இருந்ததை மறைப்பதற்கில்லை. இப்போதும்கூட அப்படித்தானே!

தனிநபர் வலைப்பூக்கள், பலர் இணைந்து 
குழுமங்களாக இயங்கும் வலைப்பூக்கள் என 
பரந்ததொரு பூஞ்சோலையாகக் காட்சிதருகிறது இணையம். 
அதற்குள் நுழைந்துவிட்டால் எந்தப்பக்கம் போவது 
என்று தெரியாமல் தடுமாறும் சந்தர்ப்பங்கள் அதிகம். 
எதற்காக உள்ளே வருகிறோம் என்பதைத் தீர்மானித்துக்கொண்டு அங்குமட்டும் போய்விட்டு நமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவது நல்லது. ஆனால் மனது கேட்காது.
நாலு திசைகளிலும் சுழன்றடித்து நமக்குத் தேவையானவைகளோடு தேவையில்லாத சங்கதிகளையும் சுமந்துகொண்டு வெளியே 
வருகின்ற சந்தர்ப்பங்களும் அதிகம்.
கொஞ்சம் முயன்றால் இந்த நிலை வாராமல் தடுக்கலாம்!

பழக்கப்பட்டாயிற்று.
கூடவே எனக்கென்று ஒரு வலைப்பூவையும் உருவாக்கிக்கொண்டேன்.
அதிலிருந்து இன்னொன்று அதிலிருந்தும் மற்றொன்று என்று பல பெயர்களில் வலைப்பூக்கள்.

இந்துமகேஷ் (எனது கதை, கட்டுரை, நவீனங்கள்) 
inthumakesh.blogspot.com

உள்ளே வெளியே (எனது ஆன்மீகத் தேடல்)
ulleveliye.blogspot.com

பாடாமல் பாடுகிறேன் ( எனது பக்திப்பாடல்கள்)
padukiren.blogspot.com

திரைக்கடலோடி ( எனது திரையுலகப் பார்வை)
thirakkdalodi.blogspot.com

இந்த வரிசையில் ஒன்றுதான் பூவரசம்பூ.

poovarasampoo.blogspot.com

என் வாசிப்பு ஆனுபவங்களையும் எழுத்துலக அனுபவங்களையும் பதிவாக்கிக் கொள்ளலாமே என்று தொடங்கினேன்.

என் சிறுவயதிலிருந்து என் மனதில் குடியேறிய படைப்பாளர்கள்முதல் இங்கு புலம்பெயர்ந்தபின் என்னைக் கவர்ந்த புதிய படைப்பாளர்கள்வரை பதிவாக்கவேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது.

2007இல் ஆரம்பித்த அந்த வலைப்பூ இடையில் சிலகாலம் பதிவுபெறாமலே நின்றுவிட்டது.
(என் உடல்நிலை, வாழ்நிலை, சூழ்நிலை என்பன தந்த இடையூறுகள்) மீண்டும் என்னைப் புதுப்பித்துக்கொண்டு எழுதமுயன்றபோதும் கடந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த என் அன்புக்குரியவர்களின் பிரிவு என்னை அமைதியிழந்தவனாக்கிற்று.

விரைந்தோடும் காலத்தின் வேகம்-
என் இளமைக்காலம்தொட்டு என்னோடு மனதால் இணைந்தவர்களின் பிரிவு- 
நீயும் விரைவாக மூட்டையைக்கட்டும் வேளை நெருங்கிவிட்டது என்று நெருக்குவதை உணர்கிறேன். 
இந்த ஆண்டுக்குள்ளேனும் விரைவாய்ப் பலவற்றைப் பதிவுசெய்துவிடவேண்டும் என்ற வேகத்தை என்னுள் விளைத்திருக்கிறது.

வலைப்பூக்களைவிட முகநூல் நல்லது .உடனுக்குடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று சில வருடங்களுக்கு முன்பே எழுத்தாள நண்பர் பொ. கருணாகரமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார். 
அவர் சொன்னால் சரியாக இருக்கும் என்றுதான் ஆரம்பித்தேன். 
ஆச்சரியம் – அவர்கூட இன்னும் என் முகம் பார்க்கவில்லை! (ரொம்பத் தாமதித்து விட்டேனோ?)

அடுத்த பக்கத்தில் எனது பூவரசம்பூவை மீள் அறிமுகம் செய்கிறேன்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்யுங்கள்!
தொடர்வோம்!

-இந்துமகேஷ்

leave a reply