Breaking News

போதை…

விழிகளின் தீண்டலில் யாவுமே போதை
விரல் தொடும் சுகங்கள் உள உடல் போதை
நிறங்களில் கரைகின்ற மனமொழி போதை
நித்தியம் காக்கின்ற இறை வழி போதை.

சுடு தணல் மீதேறும் போர் நெறி போதை
சுற்றி வரும் பூமியின் ஈர்ப்பு வெறி போதை
கத்தும் கடலலை கரை தொடும் போதை
கவிஞனின் சிந்தை இயற்கையின் போதை.

உயிர்களைப் பலியிடல் மரணத்தின் போதை
உரிமையின் இருக்கை மேல் அரசியல் போதை
பிரியங்கள் குடியேறும் இடமெல்லாம் போதை
பிம்பத்தின் மேடையில் ஆசை பெரும் போதை.

சரி பிழை சடங்குகள் நீதியின் போதை
சாதனைப் பாதையில் கள நடை போதை
வலி தரும் வார்த்தையில் நம்பிக்கை போதை
வரலாற்றின் வேர் பற்ற மனிதத்தின் போதை.

அடிமையின் சுவாசிப்பில் கண்ணீரின் போதை
அவசர நடையிடும் உலகில் கலியுக போதை
திறவுகோல் சிறகுகள் பன்முகத்தின் போதை
திண்மமா திரவமா வாழ்வியலின் போதை….

கலைப்பரிதி.

leave a reply