Breaking News

கலாபூசனம்;ஆளுநர் விருதுபெற்ற கலைஞர் பொன்.சேதுபதி!

இந்த வெள்ளை மீசைக்காரன் வேறுயாருமில்லை.என் உடன்பிறந்த மூத்த சகோதரன் பொன் சேதுபதி அவர்கள்.முல்லை மாவட்டத்தின் கலைவளர்ச்சிக்கென அரும்பாடுபட்டவர்களில் இவர்முக்கியமானவர்.இன்று எழுபத்தேழு வயதைக்கடந்திருக்கும் இவருக்கு சிலவருடங்களுக்கு முன் சிறந்த கலைஞருக்கான „கலாபூசனம்“விருது கிடைத்தது.அதன்பிறகு ஆளுநர் விருதும் கிடைத்தது..அண்மையில் கதைத்தபோது வேறு ஒரு விருதும்கிடைக்க இருப்பதாகச்சொன்னார்.முல்லைக்கலைஞர்களைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதவேண்டுமென்ற ஆர்வம் என்னிடத்தில் நீண்டநாட்களாகவே இருந்தது.அவரது படத்தை அனுப்பும்படி அடிக்கடி கேட்பதுண்டு.அவர் இதுவரை அனுப்பவில்லை.இந்தப்படம் முல்லைத்தீவில் நடைபெற்ற கலாச்சார விழா ஒன்றை முகநூல் பதிவுசெய்திருந்தது.அதலிருந்து உருவிக்கொண்டேன்.இந்த விழாவில் தான்அடுத்த விருதும் கிடைத்ததோ எனக்குத்தெரியாது.: கலாபூசனம் விருது கிடைத்ததை அறிந்து அவருக்கு ரெலிபோன் எடுத்து வாழ்த்துத்தெரிவித்தேன்.மிகவும் சந்தோசப்பட்டார்.உனக்கு இந்த விருதின் பெறுமதி தெரியும் அதனால் வாழ்த்துத்தெரிவிக்கின்றாய்.இஞ்ச அதைப்பற்றியாரும் பெரிதாகநினைக்கிறார்கள் இல்லை என்று கவலையோடு சொன்னார்.கிடைக்கின்ற விருது மற்றவர்களால் பாராட்டைப்பெறும்போதுதான் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..அது எனக்கும் கவலையாக இருந்தது.
ஒருகாலத்தில் முல்லைமக்களின் பொழுது போக்காக இருந்தது.கூத்துக்களும் நாடகங்களும்தான்.எனது சின்ன வயதுப்பருவம்ஒன்பது பத்து வயதிருக்கும்.முல்லைத்தீவு பொதுச்சந்தையிலிருந்து கடற்கரைக்குப்போகின்ற பாதையின் இடையில் ஒரு பாலம் இருந்தது.அதன்பள்ளத்தில்தான் அந்த நாடகமேடை.அதில்தான் அண்ணனாக்களின் சூட்சியின் முடிவு“ நாடகம் எனக்குத்தெரிந்து மேடையேறியது. அதில் அண்ணன்தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.மைக்கல் அண்ணன் கதாநாயகி பெண்வேடத்திற்கு ஏற்ற அழகான மனிதர் அவர்.கோபாலண்ணை அந்தோனிக்குரூச் இவ்வளவு பேரையும்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.இடையில் மழைவந்து அந்த நாடகம் குழம்பிப்போயிற்று.ஒருகிழமையின் பின்“மறுமலர்ச்சி மைந்தன் என்று பெயரை மாற்றி மேடையேற்றினர்.செம்மலைக்கோபாலண்ணை பல நாடகங்களுக்கும் இயக்குனராக இருந்தவர்.அதன்பிறகு இந்த இடத்தில்தான் சிற்றம்பலம் டோக்கீச் நீலிபோட்டி என்ற ரென்றுக்கொட்டகைகள் வந்தன.
சின்னவயதிலிருந்தே அண்ணன் .நடிகர்திலகம் சிவாஐிகணேசன் ரசிகர்.மனோகரர்அனார்க்கலி சாம்பிராட் அசோகன்>சாக்கிரட்டீச் நாடகங்களையும் அந்த வசனங்களையும் பேசிப்புகழ் பெற்றவர்.சிலம்பு;நீதியா?பாசமா?சேரன் செங்குட்டுவன் என்று வரிசைப்;படுத்திக்கொண்டே போகலாம். அவர் நடித்து மேடையேறிய நாடகங்களை.திரையரங்குகளின் ஆதிக்கம் முல்லைத்தீவில் வந்தபோது நாடகங்களின் வரவு குறைந்துதான் போயிற்று.அண்ணன் நடிகர் மாத்திரமன்றி நல்ல கதைவசனகர்த்தாவாகவும்;சிறந்த இயக்குனராகவும் விளங்கியவர்.என்னையும்;தம்பியையும் அதற்குள் புகுத்தி பூரித்து நின்றவர்.நான் வட்டுவாகல் பாடசாலையில் படித்தகாலத்தில் முல்லைத்தீவு வட்டாரத்திற்கான பாடசாலைகளின் போட்டிக்கலைவிழாக்களில் கதாநாயகனாக நடித்த „எனக்கா மன்னிப்பு“ „நான்துரோகி“ என்ற நாடகங்கள் முதல் இடத்தைப்பெற்றன.இந்த நாடகங்களை அண்ணனே எழுதி நெறிப்படுத்தியிருந்தார்.அப்போது எனக்கு பதின்மூன்று பதினாலு வயதிருக்கும்.இதில் சிறப்பு என்னவென்றால் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களே நடுவராக இருந்தார்.அவர் தனதுரையில் எனது நடிப்பைப்பாராட்டி சின்னச்சிவாஐி என்றார்.இந்தப்புகழ் எல்லாம் அண்ணனையே சாரும்.இந்த நாடகங்கள் வவுனியாவுக்குத்தெரிவுசெய்யப்பட்டு அங்கும் முதலாம் இடத்தைப்பெற்று இலங்கை வானொலிக்குத்தெரிவாகியிருந்தன.கல்வியைக்காரணம் காட்டி நாம் அங்கு போகவில்லை.அந்தக்கவலை இப்போதும் எனக்குண்டு.அண்ணன் எழுதிய எங்களுக்கும் காலம்வரும்““மகுடம் தந்த மரணம்“கலிங்கப்போர்“ „சாம்பிராட் அசோகன்““சிலையெடுத்த செம்மல்“போன்ற நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன்.“சிலையெடுத்த செம்மல்“முல்லை மகாவித்தியாலயத்தில் மேடையேறி பெருத்த வரவேற்பைப்பெற்றது.இந்தநாடகத்தில் தற்போது லண்டனில் வசிக்கும் எலும்பு முறிவு தறிவு சத்திர சிகிச்சை நிபுணர் சூசைநாதர் சேரன்செங்குட்டுவனாக சிறப்பாக நடித்திருந்தார்.கண்ணகியாக இந்திரா நடித்திருந்தார்.இந்தமேடையில் நான் எழுதி இயக்கிய“தங்கையா?தாரமா?நாடகமும் மேடையேறியது இது எனக்குப்பெருமையாக இருந்தது.அண்ணனுடன் பங்களிப்பு செய்தவர்களும் அந்தக்காலத்தில் கலைக்காக சேவையாற்றியவர்களையும் பதிவு செய்யவேண்டுமென்ற விருப்பம் நிறைய உண்டு.
குண்டுமணி(ஐி.மரிசலீன்)செபத்தியாம்பிள்ளை
மலையான் (அந்தோனிப்பிள்ளை )யோகதாசு;துரைமணி அன்ரனி என்று நாடகத்துக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள் இருக்கிறார்கள்.“எனது நினைவுகளில் முல்லைக்கலைஞர்கள்“என்ற தலைப்பில் எழுத இருக்கிறேன்..அண்ணனின் பங்கு இன்றும் கலையோடுதான்.ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு ஓம் சாந்தி அமைப்போடு பாடசாலைகளுக்குச்சென்று யோகாபற்றிய பிரச்சாரங்களில் நேரத்தைச்செலவு செய்வதாக அறிந்தேன்.அவர் தேகஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழவேண்டுமென்று விரும்புகின்றேன்..வாழ்த்துகிறேன்.
நன்றி.

leave a reply