Breaking News

நான்காவது ஆண்டாக நடைபெற்ற ‚வணக்கம் ஐரோப்பா‘ கலைமாலை நிகழ்வு.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஓபகவுசன் நகரில் நடைபெற்ற வணக்கம் ஐரோப்பா முதல் கலைமாலை நிகழ்வில் இவ்விழாவைத் தொடர்ந்து நடத்துவோம் என செயல்பாட்டாளர்கள் கூறியதை மெய்ப்பித்து இவ்வாண்டும் அதனை நிறைவேற்றியுள்ளார்கள்.

தாயகத்தில் உள்ள நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவி செய்யம் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட வணக்கம் ஐரோப்பா என்ற செயல்பாடு தொடர்ந்தும் நேற்றைய புதுவருடப் பிறப்புத் தினமான 01.01.20 அன்று நான்காவது ஆண்டாகவும் மங்கல விளக்கேற்றல், அமைதி வணக்கம் என மரபு சார்ந்தும் , உன்னதமான கடமை எனக் கொண்ட அடையாள ஆரம்பங்களுடன்; மண்டபம் நிறைந்து மக்களுடன் ஆரம்பித்து இக்கலைமாலை சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது.

ஒரு விழாவை நடத்துவது அதற்கான திட்டமிடலான வரைபடத்திற்கு (Archizecture))ஒப்பிடலாம்.திட்டமிடலை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் நடத்துவதன் மூலமே அது ஒரு வெற்றிவிழாவாகவும் திட்டமிடலை நடத்தி முடித்த விழாவாகவும் கருத முடியும்.

வணக்கம் ஐரோப்பா 2020 கலைமாலை நிகழ்வு ரிப்ரொப் என்று சொல்லும் வகையிலும், ஒழுங்கான விழா (Perfect) என்ற தன்மைத்துவத்துவத்துடனும், பாராட்டும்படியும் நடந்து முடிந்துள்ளது.

பல்வேறு வடிவங்களைக் கொண்ட நடனங்கள், பாடல்கள் நகைச்சுவை நாடகம்,பக்திப் பாடல்களைக் கொண்ட இறுவெட்டு வெளியீடு எனக் கதம்ப நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டுமென்ற ஏற்பாட்டுக் குழுவினரின் எண்ணத்தை இவ்விழா பூர்த்தி செய்துள்ளது.

தொய்வில்லாமலும்; நேரவிரையமில்லாமலும் மக்களை மகிழச் செய்யும் விதத்திலும்,இவ்விழா அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் விழா அமைப்பாளர்கள் செயல்பட்டதனால் இடைவெளியில்லாது அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.

இவ்விழாவில் கலந்து கொண்டிருந்த கலையாளர்கள் தமது திறனை வெளிப்படுத்தும் விதத்தில் சுவைகுன்றாதவாறும் கலைக்குள்ளடக்க வழியாகவும் அதனைக் காட்சிப்படுத்தி மக்களைப் பரவசப்படுத்தியமையைக் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்ச்சி அறிவிப்புகளைக் குறுகிய நேரத்திற்குள் காத்திரமான கவர்ச்சியான சொல்லாடல்களைப் பயன்படுத்துவதன் மூலமே அடுத்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பையும் ஆவலையும் மக்களிடத்தில் ஏற்படுத்த முடியும் என்பதை இவ்விழா அறிவிப்பாளர்கள் நிரூபித்துக் காட்டியிருந்தார்கள்.

திரு.நயினை சூரி, திரு.திலகேஸ்வரன்,திரு.கிருஸ்ணா, திரு.சீலன்,திரு.ரமேஸ் ஆகியோர் கச்சிதமான அறிவிப்பைச் செய்திருந்தார்கள்.
இவ்விழாவில் தாயகக் கவிஞரும் ஆன்மீகச் செயல்பாட்டாளருமாகிய கவிஞர் திரு. உ.வீரா அவர்களால் உருவாக்கப்பட்ட முல்லைச்சாரல் என்று பக்திக் கீதங்கள் அடங்கிய இறுவெட்டு வெளியீடு செய்யப்பட்டது.

முதல் பிரதியை ஐபிசி குழுமத்தின் நிறுவனர் திரு.கந்தையா பாஸ்கரன் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் கவிஞருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பாக திரு.கணேசலிங்கம், வணக்கம் ஐரோப்பா ஏற்பாட்டுக் குழு சார்பாக திரு.நயினை சூரி இன்னும் பலர் கவிஞருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

கவிஞரும் ஆன்மீகச் செயல்பாட்டாளருமாகிய கவிஞர் திரு.உ.வீரா அவர்கள் உரையாற்றும் போது மிகவும் அர்த்தம் பொதிந்த கருத்துக்களை வெளிப்படுத்திய வேளை மக்கள் நலன்நோக்கிச் சிந்தித்தலும் உணர்ச்சிகரமான பேச்சுக்களைத் தவிர்ப்பதன் மூலமும்,தமிழக அரசியல்வாதிகளின் பேச்சுக்களையோ கருத்துக்களையோ கவனத்தில் கொள்ளாமலிருப்பதுமே தாயக மக்களுக்குச் செய்யும் நன்மையாகும் என்பதை தனது உரையில் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

இந்த விழாவில் சிறப்பு வடிவமாக, சில நடனங்களுக்கு நேரிடையாக மேடையிலேயே பாடகர்கள் பாடியமை குறிப்பிடத்தக்கவை.

நான்காவது ஆண்டு வணக்கம் ஐரோப்பா 2020 மெருகேறியிருந்தமையை காணக்கூடியதாகவிருந்ததுடன்.பிரான்சிலிருந்து வந்த நடனக்குழுவிலும் ஜேர்மனிய நடனக்குழுவிலும் அந்தந்த நாட்டின பெண் கலைஞர்கள் பங்குபற்றியமை எமது கலைகளில் அவர்கள் விருப்பம் கொண்டு வருகிறார்கள் என்பதையும், செறிவுமிகுந்த எமது நடனக்கலைகளால் அவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் அவதானிக்க முடிந்தது.

ஒரு விழாவை ஏற்பாடு செய்வது என்பது சாதாரண விடயமல்ல.விழாபற்றி சிந்தித்தல் திட்டமிடல் என்ற ஆரம்ப நகர்விலிருந்து அதனை நிறைவேற்றி முடிக்கும்வரை தடைகள், வலிகள், படபடப்பு என எல்லாவற்றையும் கடந்தே ஒரு விழாவை நடத்தி முடிக்க முடியும்.

எல்லாவற்றையும் கடந்து வணக்கம் ஐரோப்பா 2020 கலைமாலை விழாவைச் செய்து முடித்த ஏற்பாட்டாளர்களையும் செயல்பாட்டாளர்களையும் அவர்களோடு இணைந்து நின்று விழாவை வெற்றித்திருவிழாவாக்கிய அனைவரையும் பாராட்டி வாழ்த்துவதுடன் கிளிநொச்சி மலையாளபுர செஞ்சோலைச் சிறார்களுக்கு சக அமைப்பினராகிய வணக்கம் மாணவ அமைப்பினருக்கு நிதி கொடுக்க முன்வந்த வணக்கம் ஐரோப்பா 2020 ஏற்பாட்டாளர்களை பாராட்டி மகிழ்கிறேன்.

விழாவினை ஐரிஎன் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்திருந்தது

leave a reply