Breaking News

உனக்கெனவா நான் பிறந்தேன்?-இந்துமகேஷ்

கோயில் யானை ஒன்று குளித்துவிட்டு ஒரு ஒற்றையடிப் பாதைவழியாக வந்து கொண்டிருந்ததாம். சேற்றில் குளித்துவிட்டு அதே வழியாக வந்த பன்றி ஒன்று யானைக்கு எதிர்ப்பட்டதாம். பன்றியைக் கண்ட யானை சற்று ஒதுங்கி அந்தப் பன்றிக்கு வழிவிட்டு நடையைத் தொடர்ந்ததாம். யானை தனக்குப் பயந்து மரியாதை தருவதாக எண்ணிக் கொண்டு உள்ளார்ந்த பெருமிதத்தொடு நடந்ததாம் பன்றி.சேற்றில் குளித்துவிட்டு வரும் பன்றி தன்னருகே வரும்போது தப்பித்தவறி உதறிக்கொண்டால் அதன்மேலுள்ள சேறு குளித்துவிட்டு வரும் தன்மீது பட்டு தன்னை அசுத்தமாக்கிவிடுமே என்பதனால்தான் யானை ஒதுங்கிப் போனது என்றும், பெரியோர்கள் எப்போதுமே அடக்கமுடையவர்களாகவே இருப்பார்கள் என்றும் இந்தக் கதைமூலம் நீதி சொல்லப்படுகிறது.பெரும்பான்மையான நீதிகளைக் கற்றுக்கொள்ள நமக்கு அறிமுகப்படுத்தப்படும் கதைகளுக்கு எல்லாம் பிற விலங்கினங்கள் மூலமாகவே உருவகம் தரப்படுகிறது.விலங்கின் குணங்கள் மனிதர்களுக்கு அவ்வப்போது உதாரணமாகக் காட்டப்படுவதுபோலவே மனிதக்குணங்களையும் அவ்வப்போது விலங்குகளுக்கும் போர்த்தி மகிழ்கிறோம்.எப்போதெல்லாம் நமக்குக் கோபம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மற்றவர்களைக் கடிந்துகொள்ள நாம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று: பன்றி!„கண்டது கற்கப் பண்டிதனாவான்!“ என்று பழமொழி சொன்னால் அதற்கு ஒத்ததாக „கண்டது தின்னப் பண்டியனாவான்!“ என்று மறுமொழி சொல்வதும் உண்டு. (பன்றி என்பதைப் பண்டி என்று அழைத்துப் பழக்கப்பட்டவர்களுக்கு பண்டிதனைப் பண்டியனாக்குவது இலகுவான காரியமாக இருக்கிறது.)பன்றி எப்போதும் சேற்றில் குளிப்பதால் அது அசுத்தமான பிராணிபோலக் காட்சி தருகிறது. ஆனால் இயற்கை அதற்கு வியர்வைச் சுரப்பிகளைத் தராததால் அவை சேற்றில் குளிப்பதன்மூலமே தமது உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கமுடியும் என்று அறிந்து வைத்திருப்பதாலோ என்னமோ அவை சேற்றில் புரண்டுகொண்டிருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.சேற்றிலிருந்து பன்றியை மீட்டு அதை நன்னீரால் சுத்தம் செய்துவிட்டால், „கடித்துத் தின்னவேண்டும் போல்!“ அழகுகாட்டும் அதன் செம்மேனியின் நிறம் அதற்கு ஆபத்தாய் முடிகிறது. பெரும்பாலான மனிதர்களின் பசிபோக்க அது அவர்களது அடுப்பங்கரைகளுக்குப் போய்ச் சேர்கிறது.1918ம் ஆண்டு தொடங்கியதாகக் கூறப்படும் பன்றிக்காய்ச்சல் இன்றுவரை பயம்காட்டினாலும் பன்றிகளுக்கு உயிர்ப்பிச்சை தர மனிதர்கள் மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஏனைய விலங்கினங்களைவிட அதிகமாக வம்சவிருத்தி செய்வதால் பன்றிகள் அதிகமாக இரையாகிப் போகின்றனவா அல்லது அதிகமாக இரையாகிப் போவதால் அவை அதிகமாக வம்சவிருத்தி செய்கின்றனவா? என்ற இந்தக் கேள்விக்கு இன்னும் விடை இல்லை!நாம் வாழும் உலகத்தை வளப்படுத்தும் உழைக்கும் வர்க்கம் – விவசாயி முதல் துப்பரவுத் தொழிலாளி வரையில்- சேறும் சகதியும் சாக்கடைகளும் என்று அழுக்குகளுக்குள் கால்பதித்துத்தான் உலகத்தை வளப்படுத்த வேண்டியிருக்கிறது.உழைக்கும் பொழுதுகளில் உடம்பில் படியும் அழுக்குகளை ஓய்வுப் பொழுதுகளில் கழுவிவிட்டு ஏனைய பொழுதுகளில் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வாழும் ஒரு தொழிலாளியின் மனம் கொள்ளும் நிறைவு, வெறுமனே தம்மைக் காட்சிப் பொருள்களாகமட்டுமே மாற்றிக் கொண்டு கற்பனை சுகங்களில் களித்திருக்கும் மனித உருவங்களுக்கு ஒருபோதும் கிட்டுவதில்லை.ஆதிகாலங்களில் மண்ணில் புதைந்திருக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுப்பதற்காய் மண்ணைப் புரட்டிப்போடும் பன்றிகள், தாம் அறிந்தோ அறியாமலோ விவசாயிகளுக்கு உதவியிருக்கின்றன. பன்றிகளுக்கு உணவூட்டி, வளர்த்த பன்றிகளையே உணவாகக் கொள்ளும் மனிதனுக்குப் பன்றிகளின் குணம் கொஞ்சமேனும் ஊறாமலா இருக்கும்?அது சரி! உலகம் முழுதும் வாழும் மனிதர்களின் எண்ணிக்கை இப்போது எத்தனைகோடி என்பது உங்களுக்குத் தெரியுமா?683 கோடியே 12 இலட்சத்தைத் தாண்டிவிட்டது (2011 இல்) என்கிறார்கள்.„என்ன இது பன்றி குட்டிபோட்டது மாதிரி?“

leave a reply