Breaking News

காதலெனும் வடிவம் கண்டேன்!-இந்துமகேஷ்

விரிந்து கிடக்கும் வானப் பெருவெளி!உருண்டு செல்லும் புவியின் மையத்தில் நின்று வானத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் அது எட்டாத உயரத்தில் இருப்பதுபோல் தோற்றம் காட்டும். ஆனால் நாம் இந்த வானத்திடையேதான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுமட்டும் நமக்கு வருவதேயில்லை. பூமியில் பாதம் புதைத்தாலும் உண்மையில் நாங்கள் வானப் பெருவெளியில்தான் வாழ்கிறோம். நமக்கும் மேலே ஒருவனடா என்று நாங்கள் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இறைவன் வானத்தில் இருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அவன் நம்மோடு இருக்கிறான் என்றே பொருள். இந்தப் பெரிய வான வெளியின் மையப் பகுதியை எப்போதாவது உங்களால் தொட முடிந்திருக்கிறதா? வானத்தையே எட்டிப்பிடிக்க முடியாதபோது அதன் மையப்புள்ளியைத் தொடுவதாவது என்கிறீர்களா? ஒவ்வொருவரும் இந்த வானப் பெருவெளியின் மையப் பகுதியைத் தொட்டிருக்கிறோமே. நமது மனம்தான் அது. எங்கே நீ இருக்கிறாயோ எங்கே உன் மனது இருக்கிறதோ அந்த இடம்தான் இந்த வானப் பெருவெளியின் மையம். நமது உடலை எறிந்துவிட்டு உயிரைப் பிரித்துக்கொண்டு நாம் அந்த வானப் பெருவெளியோடு கலக்கும் அந்தப் பொழுதில் நமது உடலைச் சொல்வது மையம் என்று.அது இந்த வானப் பெருவெளியின் மையம். நான் யார் என்பதையும் நீ யார் என்பதையும் அடையாளப்படுத்துவதற்காக இந்த உடல். ஆனால் உண்மையில் நீ என்பதும் நான் என்பதும் இருவேறு பேர் இல்லை. நீயும் நானும் ஒருவரே என்பது காதல். நீயும் நானும் ஒருவரையொருவர் காதலிப்பதுபோல் நாம் இன்னொருவரையும் காதலிக்கிறோமே அந்த இன்னொருவரையே கடவுள் என்கிறோம். நாங்கள் கடவுளின் காதலர்கள். ஊன் மறந்து உயிர் கலந்து ஒன்றில் ஒன்றாய் ஐக்கியப் பட்டுவிடும் அந்த உன்னத நிலைக்கு நாம் சென்றாக வேண்டும் என்பது காதலின் உச்சநிலை. இதுவே முக்தி நிலை. ஆனால் காதல் என்பது இன்பம் வேண்டுவது. இன்பத்தோடு இரண்டறக்கலந்தது. ஆனால் காதலில் கண்ணீர் வருகிறது. கண்ணீர் இல்லாத காதலா? அது காதல் அல்ல. காதல் என்பது துன்பம் கலந்த இன்பம் என்பது இயற்கை விதி. உறவும் பிரிவும் என்று எழுதிவைத்த அந்த விதி இன்பத்தையும் துன்பத்தையும் சேர்த்தே எழுதி வைக்கிறது. என் சின்ன வயதில் எனக்கு மரண பயம் அதிகம். நள்ளிரவில் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்வேன். அருகில் அமைதியாகத் துயிலும் என் தாயின் முகம் பார்ப்பேன். ஒருநாள் நான் என் அம்மாவை இழந்துவிடுவேன் அவவுக்கும் மரணம் வரும் என்ற எண்ணம் என்னைக் கவ்விக்கொள்ளும். அம்மாவை அணைத்துக்கொண்டு சத்தமில்லாமல் அழுவேன். நானும் ஒருநாள் மரணிக்கவேண்டும் என்ற நினைப்பு அப்போது எனக்கில்லை. „ஏன் அம்மா..எல்லாரும் சாகத்தான் வேண்டுமா?“ என்று ஒருநாள் அவவிடம் கேட்டேன்.“பிறந்தால் சாகத்தானே வேண்டும்!“ என்று சிரித்தா அவ.“அப்ப பிறக்காமலே இருந்திருக்கலாமே?“ என்றேன்.“அவன் போடும் கணக்கை யாரும் மாற்ற இயலாது!“ அவ சொன்னதை எப்போதும் நினைத்துக் கொள்கிறேன். அதனால் அவ இறந்தபோது அவ இறந்ததாக என்னால் எண்ணமுடியவில்லை.என்னுள் வாழும் அவ எப்போதும் இறந்திருக்க முடியாது. எனக்கும் மரணம் வரும். அப்போது திரும்ப அவவைச் சந்திக்கப்போகிறேன். இப்போது எனக்கும் மரண பயம் போய்விட்டது. இந்த உலகம் ஒருநாள் மனித சஞ்சாரமற்ற ஒரு பெருவெளியாக மாற்றம் பெறும். அப்போது நாங்கள் எங்கே இருக்கப்போகிறோம்? நாங்கள் பிறப்பதற்கு முன்பு எங்கே இருந்தோமோ அங்கே!“நாங்கள் இந்த உலகத்துக்கு வந்து சில கணக்குகளைத் தீர்த்தாகவேண்டியிருக்கிறது. அதற்காகப் பிறந்தாக வேண்டியிருக்கிறது. பிறந்துவிட்டோம் என்பதனால் இறந்தாக வேண்டியிருக்கிறது.ஆனால் கணக்குகள் ?அவை தொடர்கதையாகிவிடுகின்றன. „இத்தனைகோடி மனிதர்கள் பிறக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர்தானே முக்திபெறுகிறார்கள் இதனால் என்ன பயன்?“ என்று சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் யாரோ கேட்டார்களாம். அதற்கு அவர் சொன்னாராம்: „ஒரு மாமரம் வளர்க்கிறோம். அதில் எத்தனையோ பூக்கள் பிஞ்சுகள் காய்கள் கனிகள்…!ஆனால் எல்லாப் பூக்களுமே பிஞ்சாவதில்லை. பிஞ்சுகள் எல்லாமே காய்களாவதுமில்லை. காய்கள் எல்லாமே கனிகளாவதுமில்லை. கனிகள் எல்லாமே பயன்படுவதுமில்லை. ஆனால் ஒரே ஒரு கனியாவது மனிதனுக்கும் பயன்பட்டு அந்தக் கனியின் விதை மண்ணில் புதைக்கப்பட்டு மறுபடியும் ஒரு மாமரம் உருவாகிறதே. அது போதுமானது. அந்த மாமரம் இன்னும் நூற்றுக்கணக்கில் ஆயிரக் கணக்கில் கனிதரும். அது பயன் தரும் அல்லவா? ஆகவே ஒருவன் ஞானியானால்கூடப்போதும் அதனால் இந்த உலகம் முழுதுமே பயன்பெறும் அல்லவா?

leave a reply