எங்கள் திசைகள்.-கவிமகன்.இ

தேடிக் கொண்டிருந்த
வானவில் தோன்றாமலே
போயிருக்கலாம்
அழகான வர்ணங்கள்
என்று நினைத்தது
வானில் வராமலே
போயிருக்கலாம்
வந்தும் வராமல் போயும்
என்ன கண்டது எம் வானம்
ஏழு வண்ணக் கலவைகள்
கருக்கொண்டதால்
எதை கண்டது
கிழக்கு வானம்
கூட்டி பெருக்கி
கழித்து பிரித்து பார்த்தால்
விடை சுழியம்..

வர்ணக்கலவையாய்
தென் வானில்
தோன்றிய போது
கிழக்கு வானம்
இயலாமையில் கருமை
போர்த்து கிடந்தது.
தெற்கும் மேற்கும்
உதட்டுக்குள்
சிரித்துக் கொண்டன
வானவில்லின் நிறப்பூச்சு
தெற்கில் இருந்து
மேற்கு கரை வரை
இழுபட்டு
விரிந்து கிடந்தது

கிழக்கு,
சூரியனின் ஒளிக்குள்ளும்
கண்ணை மூடி கிடந்தது
அன்று
தென் வானத்தின் அழகிற்குள்
மூழ்கிப்போவதை விட
மார்க்கம் இல்லை
ஒளிக்கீற்றையே உலகுக்கு
பிரசவிக்கும் பெருமையில்
பொருதிக் கொள்ளும்.
கிழக்கு அன்று
சாவுக்கான மணி ஒலி
கேட்டு அதிர்ந்து கிடந்தது

வடக்கு,
திசைகளின்
தலைமகன்
நிர்க்கதியற்று திட்டமிட்டு
வானவில்லின் ஒளிர்ப்பை
இயற்கை பறித்தெடுக்க
திசை எங்கும் ஓலமிட்டும்
பலனற்று
தலை கவிழ்ந்து கிடந்தது

மேற்கு,
வானவில்லின் சாரம்
மெல்லிய கோடாய்
கீறப்பட்டிருந்தது கண்டு
மகிழ்ந்திருந்து
தெற்குடனான ஆளுகைக்குள்
புன்னகைக்க இசைந்து
கொண்டது

தெற்கு,
வானத்தில் மழைச்சாரல்
முப்பெரும் திசைகளின்
இயங்ககம்
கட்டுப்பாடற்ற புன்னகை
அடக்கியாளும் திமிர்
அதன் வீச்செல்லை
நாற்றிசையும் பரந்து விரிய
தொடங்கியது
சர்வதேச இயற்கை
வேடிக்கை பார்த்தது
தெற்கின் அகங்கார
சிரிப்பு திசையெங்கும்
ஓங்கி ஒலித்து
வானவில்லை தம்வசம்
கொண்டதால் வம்சமே
தலை தெறிக்கத் தொடங்கியது.

ஆனால்…

கிழக்கும் வடக்கும்
நிமிர்ந்து நிற்க முயன்றன
தனக்கான உரிமையை
தட்டிக் கேட்கத் தொடங்கின
வானவில்லின் வண்ணம்
தெற்கின் கரையோரம்
சிலாகிர்த்து கிடந்ததால்
முடிவிடம் நெருங்க முடியவில்லை
வானவில்லின் அழகொளியை
சூரியகீற்றுக்களால் துடைத்தெறிய
முனைந்தன வடகிழக்கு திசைகள்
ஆனால் கருமேகம்
இயற்கை உலகால்
வடகிழக்கை ஆக்கிரமிக்க
தொடங்கி இருந்தன
மாறி மாறி வானவில்லின்
அழகை வடகிழக்கு
நுகர அந்த கருமேகம்
தடை விதித்து கொண்டே இருந்தது

தடை உடைத்து
வான்வெளியில் சரித்திரமாக
விடிவெள்ளி ஒன்று
பசி மறந்து வடகிழக்கு வான
அழகுக்காக
தன்னை உருக்கத் தொடங்கியது
இயற்கை அதிர
தொடங்கிய போதும்
விடிவெள்ளியை
தடுக்கும் சக்தி அற்று போனது
தெற்கோடு இணைந்திருந்த
ஐந்தாம் திசை ஒன்று
விடிவெள்ளியின் உணர்வுகளை
கொஞ்சம் கொஞ்சமாய் தின்று
வான் வெளியின்
மண்ணுக்குள் புதைக்க தொடங்கியது
வடகிழக்கோ…
விடிவெள்ளி தேய்வதை கண்டு
நிசப்தமாகி கிடந்தது…

கவிமகன்.இ