கார்த்திகை விளக்கீடு…!கவிதை கவிஞர் ரதிமோகன்

கார்த்திகை விளக்கீடு
கலகலப்பு வீடுகளில்
கொழுக்கட்டை அவித்து
பழங்கதை பாட்டி சொல்ல
கேட்டிருந்த காலம்தான்
இனி வருமா வாழ்வில் மீண்டும்..

வீதிகளில் வாழைக்குற்றியில்
அப்பாவின் கையைப்பிடித்து
விளக்கிட்ட பொழுதுகள்
விலகிடுமா மனதை விட்டு
வலம் வருதே கனவுகளாய்..

சொக்கநாதர் கோயிலில்
சொக்கப்பானை கொளுத்துவதை
சோடியாக கைகோர்த்து பார்த்த
சோக்கான என் தோழிகளை
நினைக்காத நாளில்லை..

திருக்கார்த்திகை விளக்கீட்டில்
செத்தவருக்கு படைக்கிறது
தெருவிற்கு போகாதே என்று
தலையில் குட்டிய சித்தியை
மறக்கவும் முடியவில்லையே …

பெருநாட்கள் பெருங்கடல்தாண்டி
கனக்கின்ற மனதிற்கு ஒத்தடம்இன்றியே
கரைதொடாத அலைகளாய் அலைபாயும்
எண்ணங்கள் பறக்கின்றதேஅன்னைமண் நாடி…

ஆக்கம் ரதிமோகன்