அம்மா! உனக்கு ஒரு மடல்..

ஒருமுறை உன் மடி சாயவேண்டும்
ஓராயிரம் கதை பேச வேண்டும்
கண்ணீரால் எழுதும் இந்த மடல்
என் அம்மா உனக்காகத்தான்..,

நொடிக்கொரு தடவை எனை
நெஞ்சில் நிறுத்தி எண்ணி
நலமா என்ற உன்குரலில்தான்
என் ஜீவன் இங்கு வாழ்வதை அறிவாய்

காலையில் இருந்து இரவுவரை
ஓடுகின்ற வாழ்க்கைக்குள்
கடந்து வந்த காலங்களை தேடி
கும்மிருட்டில் நட்சத்திரங்களை
பார்க்கிறேன்

ஏளனமாக அவை கூட பார்க்கின்றன
எட்டிப்பிடிக்க முடியாத தூரத்திற்குள்
வெறுமைபரவி கிடப்பதான உணர்வு
கண்ணீர்ச்சுரப்பியின் தூண்டலில்

கன்னங்களை நனைக்கும் கங்கை
சொல்லும் மனதின் வலியை பவ்வியமாய்..
செல்லரித்துச்செல்லும் மனப்புத்தகம்
எள்ளளவும் உரிமை மறுக்கப்பட்ட நட்புக்களும் நேசமும்..

வறுமைக்குள் வாடும் அன்பிற்கு விலை
வெளிநாட்டு வாழ்க்கையில் ஜாஸ்திதான்
வெள்ளியில் கூட கோயிலை தரிசிக்காத
இருபத்துநான்கு மணித்தியாலங்கள் போதாத வாழ்க்கைக்குள்..

எஞ்சியிருப்பது சொகுசான பங்களாவும்
பஞ்சுமெத்தையும் பகட்டான காரும் தூக்கத்தை தொலைத்த இரவுகளும்
தாங்கொணா வேலைப்பளுவும்
பறித்துச் செல்லப்பட்ட சந்தோசமும்.

கனவுகள் ஒன்றுதான் இன்னும்
பலவர்ணங்களை தெளித்து செல்வதால்
துள்ளித்திரிந்த காலமும் உன் கைமணம்
மணக்கும் அறுசுவை சமையலும்..

கறுத்தைக்கொழும்பான் மாமரமும்
கொத்தித்தின்னும் அணில்களும்
கோலம் போட்டு திருவெம்பாவைக்கு
மார்கழிப்பனியில் வெடுவெடுத்த காலமும்

நெஞ்சறைப்பெட்டிதொலைக்காட்சியில்
அஞ்சறைக்குஅலாரம்அடிக்கமுன்னே
அசத்தலாக தெரிகிறதே அம்மா
ஆறாது சொல்லி ஆறாது அடுத்த விடுப்புக்கு உன்னிடம் வரும்வரை..

அன்போடு
கண்ணீரோடு
உன் மகள்..

ரதிமோகன்