கால்க்கட்டில் கடல் கடந்தேன்

ஊரு சுற்றி வலம் வந்தேன்
உதவாக்கறையாக..
உறவுக்காரங்க உசுப்பேத்தி
கால் கட்டுப் போட்டாங்க
திருந்தாத ஜென்மம் எனக்கு
ஏழேழு பந்தமென்று கைபிடித்து வந்தாள்
எனக்கான சொந்தமொன்று
என் வாழ்வில் வசந்தம் கொண்டு
கால் கஞ்சி ஊத்துவான் என அவள் நினப்பு
கால் கட்டு போட்டால் மாறிடுமா வாழ்வு
சுமையொன்று என் தலையில் ஏற
சுமை தாங்கி யாக நானும் மாற
சுமந்தாள் என் என்னுருவை வயிற்றில்
சுருக்கு விழுந்தது என் கழுத்தில்
உழைப்பு எனக்கு ஆனது கடமை
உணவு கொடுப்பது என்பது வழமை
கரு வளர்ந்து உருவானது
என் உடல் சோர்ந்து பிளவானது
உயிரான உறவான மனைவி
உழைத்தால் உறவாவேன் என கூவி
உரைத்தாலே ஒரு வார்த்தை
உழைத்தால் தான் வாழ்க்கை
உயிர் ஊசலாடியது உடலில் கனத்து
ஊர் விட்டு வெளியேற நினைத்தது மனது
கடவுச்சீட்டு கை கொடுத்தது வெளிநாடு
கடல் கடந்து போக தலையெழுத்து என்பாடு
கனவை சுமந்து வெளியானேன் புது நாடு
கனமாக மாறியது என் வாழ்வு
வந்த இடம் இங்கே சாக்கடை
வெந்து போனேன் யாரும் பாக்கல
எந்தன் நிலை போக்கல
என்ன சொல்ல என் சிக்கல
அக்கரைக்கு இக்கரை பச்சை
அயல் நாடு தீர்க்குமா என்னுடைய இச்சை
அயராது உழைத்தும் என் மனம் பாலை
ஐய்யோ அம்மான்னு அழுதிட தோணும் சில வேளை
கரு சுமந்தவள் கதைத்திடும் போது
இரு விழிகளும் சிந்திடும் கண்ணீரு
தருதல என நிலைத்த என் பேரு
அருமை மகனென அழைக்கிறா தாய் பாரு
முகம் சுளித்து உடன் இருந்தவள்
மாதம் முடியும் முன்னே குறை விதைக்கிறாள்
பணம் அனுப்ப தினம் கதைக்கிறாள்
பசி பட்டினியென எனை வதைக்கிறாள்
மீள் கற்பனை
கவித்தென்றல் ஏரூர்