அக்கினிக்குண்டொன்று…..

அதிகாலையின் அனந்த சயனத்தில் விழித்தே
அந்த சாளரம் வழியே உன் உருவம் கண்டேன்.
வானம் வெளிறியிருந்தது, இருள் வெளுக்கவில்லை.
பூமியும் வெளித்திருந்தது, உயிர் விழிக்கவில்லை.

சிந்தனையோ சிறகு விரித்த ராசாளியாய்
எந்தனையும் இழுத்துத்தான் பறந்தது.
இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கையில்
இயற்கையின் பங்குதான் எம்மட்டோ?

பரிதிக்குண்டே! பத்தினி சாபம் பன்மடங்காக
பத்தியெரித்தாய், மதுரையும் மண்மேடாக,
எத்தனை சோகங்கள் எம்மவர் மத்தியில்
ஏங்கியே தவிக்கின்றோம், எதை நீ அறிவாய்?

அக்கினிக்குண்டே! உன்னால் அழிந்த உயிர்கள் ஆயிரம்
அச்சுவாலையில் செரித்த சேதாரங்கள் சொல்லும் பாயிரம்
வனங்களிலும் காட்டிவிட்டாய் உன்வன்ம வெஞ்சினத்தை
வாயு பகவான் காவி வந்தான் வானமெங்கும் புகை மூட்டத்தை.

வருணன் வருகையை எண்ணி திசையாய் காத்திருக்க
அனல்தான் தணியுமென ஆவலுடன் பார்த்திருக்க
பூமி நனையவுமில்லை வானம் வெளுக்கவுமில்லை
அதுவே வெறுப்பாக வெந்துதான் கிடக்கிறோம்.

பச்சையத்தின் நடுவே ஒரு தீப்பந்தாய் நீ
பகலவனா? பகவானா? பரவசமாய் ரசித்தேன்
பணிமனை செல்ல என பரபரத்தே பறந்தேன்
இனியொரு நாளென விறுவிறுத்தே விரைந்தேன்.

மஞ்சு மோகன்