அம்மாவின் சேலை

அம்மாவின் சேலையிலே
நான் ..
தொட்டில்கட்டி ஆடினவன்

அண்ணார்ந்து பார்த்து
அவர்
அன்புமுகம் தேடினவன் .
.
காய்ச்சலிலும் குளிரினிலும்
நான்
நடுங்கி நின்றபோது
அம்மாவின்
சேலை கொண்டு போர்த்தினவன்நான்

அம்மா தன் கக்கத்திலே
என்னைத்தூக்கி
சுமக்கையிலே
அவர் சேலைத்தலப்பு
என் கைவிரல்களில்தான்

ஆற்றினிலே நானிறங்கி
நான்
நீச்சல் கற்ற போதினிலே
அம்மா சேலை
எந்தன் இடுப்பினில்தான்

காடுகளப்பென்றாலும்
மேடுவயல் என்றாலும்-
நான்
தேடினதும் நாடினதும்
என்
அம்மாவின் சேலயினைத்தான்

அம்மாவின் சேலை
கொடியில் காய்ந்தபோது
எனக்கு
வான வில்லாக தோன்றியது..

அவர் மடியில் நான்
சாய்ந்தபோது அது
எனக்கு
பஞ்சணையாக இருந்தது…

அந்திமக் காலத்திலும்
அம்மாவின் சேலைசுகம்
அடிக்கடி நினைவில் வந்து
எனக்கு ஆறுதல் தருகிறது …

ஆக்கம் எழுத்தாளர், பாடகர், கவிஞர் கோவிலுர் செல்வராஐன்