அம்மா என்னும் ஓர் கவிதை! -இந்துமகேஷ்

அம்மா என்னும் அழகிய கவிதை
எல்லோர் வாழ்வையும் எழுதும் கவிதை!
என்னிடமும் ஓர் கவிதை இருந்தது
எப்பொழுதும் என் நாவில் ஒலித்தது
அம்மா அம்மா அம்மா என்று
அத்தனை உணர்விலும் அதுவே இருந்தது
பசியில் ருசியில் பார்ப்பதில் கேட்பதில்
அழுவதில் சிரிப்பதில் அனைத்திலும் அதுவே!
இளமைக் காலம் முற்றுமுழுதாய்
இந்தக் கவிதையே என்னை ஆண்டது
அந்தக் கவிதையை ஊரில் விட்டு
அயலூர் நாடி உழைக்கப் போனேன்
பிரிவிலும் அந்தக் கவிதையின் வாசம்
பிரியா தெந்தன் உணர்வினில் பேசும்!
காலம் விரைந்தது கடமைகள் மாறின
காதல் திருமணம் பிள்ளைகள் என்று
கடந்த வாழ்வில் கவிதையின் ஞாபகம்
இடைக்கிடை மறந்து மீண்டும் துளிர்த்திடும்
பிறப்பினில் தொடங்கி இறப்பது வரையும்
பிரியா திருக்கும் அந்தக் கவிதையை
மறப்பதற் கென்று எவர்தான் துணிவார்?
வாழ்வே அந்தக் கவிதையா மன்றோ?
காலன் ஒருநாள் என்னிடம் வந்தான்
„கவிதை ஒன்று தா!“எனக் கேட்டான்
„உன்னிடம் தந்தால் திரும்ப வராது
ஒன்றும் என்னிடம் இல்லை போ!“ என்றேன்
காலன் சிரித்தான்! „இங்கோர் கவிதையை
கண்டேன் கவர்ந்தேன்!“ என்று மறைந்தான்
„அம்மா!“ என்று அலறி விழித்தேன்
அந்தக் கவிதை என்னிடம் இல்லை
மீண்டும் ஓர்நாள் காலன் வருவான்
வேறோர் கவிதை தா எனக்கேட்பான்
“நான்” எனும் கவிதையை அவனிடம் கொடுத்து
“அம்மா” என்னும் கவிதையை வாங்குவேன்!
– இந்துமகேஷ்