அறுகம்புல்லும் மகிழம்பூவும்லண்டன் மாநகரில் 16. 09 – 18 வெளியீடு

அறுகம்புல்லும் மகிழம்பூவும்
என்ற நாவல் கிருஷ்ணவேணி கந்தவேள் எனும் இயற்பெயரும், தீபதிலகை
எனும் புனைபெயரும் கொண்ட, பன்முக ஆற்றலுள்ள‌ எழுத்தாளர் தீபதிலகையால்
எழுதப்பட்டிருக்கிறது.

அண்மையில் இலங்கையில் வெளியான இந்நூல் இம்மாதம் லண்டன் மாநகரில் 16. 09 – 18 அன்று வெளியாவ‌தோடு ஜேர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளிலும் வெளியீடு காணவுள்ளது. அதற்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

இந்நூலைப் பற்றிய எனது மேலோட்டமான கருத்தை எழுதியுள்ளேன். இந்நாவலின் ஆழ்ந்த‌ ஆய்வையோ, சுருக்கத்தையோ
தற்போது எழுதி வாசகரின் ஆர்வத்தைக் குறைக்க வேண்டாம் என்றே எழுதவில்லை.

இந்நாவல் நாகர்களின் சிற்பத்தின் அட்டைப்படத்தோடு
என்றும் அழியாத அறுகம்புல்லையும் வாசம் வீசும்
மகிழம்பூவையும் நாவலின் பெயராகக் கொண்டுள்ளது.
267 பக்கங்களைக் கொண்டுள்ள இவ்வரலாற்று நாவல் இலக்கியம், சமயம், விஞ்ஞானம், அரசியல், வானியல், கலை கலாச்சாரம் என பல்துறைசார் அறிவைப் புகட்டியபடி நகர்கிறது. இந்நாவல் நயினாதீவை
மையமாகக் கொண்டாலும் ஈழத்தமிழர் வரலாற்றையும் அலசி ஆராய்கிறது.

நயினாதீவு மக்களின் வாழ்வியலை ஆசிரியர் நுணுக்கமாக அனுபவித்துக் கூறுவது மிக அழகு.
எம்மையெல்லாம் நயினாதீவுக்கு சுற்றுலா
அழைத்துப்போய் திரும்பிவர மனமில்லாத உணர்வைத் தந்துள்ளது என்றால் மிகையில்லை.
ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும் , மணிமேகலையிலும் கூறப்பட்ட
மணிபல்லவம் தன் பிறந்தமண்ணான நயினாதீவுதான் என்று ஆதாரங்களோடு தீபதிலகை
நிறுவுகிறார். இச்சிறிய நூலுக்குள் பல்வேறு அறிவுசார் விடயங்களை திரட்டித்தந்துள்ளார். அத்துடன்
இந்நூலைப் படித்ததும் பல கேள்விகளை வாசகர் மனத்தில் ஏற்படுத்தி சிந்தனையைத் தூண்டுகிறார்.
சில விடயங்கள் திரும்பத் திரும்ப‌ சொல்லப்படுவதும் அத்தோடு சில‌ எழுத்துப்பிழைகளும் இருப்பது அச்சுப்பிழையென்று கருதுகிறேன். அவை தவிர்க்கப்பட்டிருப்பின் மேலும் நூலை அழகாக்கியிருக்கும்.

இந்நாவலிலுள்ள இத்தீவும் தமிழ்இனமும் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அறுகம்புல்லைப்போல் அழிவின்றியும் மகிழம்பூவைப் போல் வாசமும் வீசுமென ஆசிரியர் சொல்லாமல் சொல்கிறாரென
நினைக்கிறேன்.
இந்நூலானது எதிர்காலச் சந்ததியினருக்கு ஆவணமாகவும், ஆய்வுநூலாகவும் அமையும் என்று நம்புகிறேன். „அறுகம்புல்லும் மகிழம்பூவும்“ நூல் வெளியீடுகள் இனிதே நிறைவு கண்டு எழுத்தாளர் தீபதிலகையின் எழுத்துப்பயணம் ஓளிவீச என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

– நக்கீரன் மகள்