அளையப்பட்டவைகள்

எல்லாமே எமக்கு மட்டும்தான்
மிகச் சுத்தமான உயர்தரங்களை
நாங் மட்டும்தான் அளைகிறோம்
என நினைப்பது
எவ்வளவு பெரிய வேடிக்கை
ஒரு சமையல்க் காரன் அளைந்த உணவை
புதியது என நினைத்து உண்ணுகிறார்கள்
யாரோவெல்லாம் அளைந்த பணத்தாள்களை
தம்முடையது என பத்திரப்படுத்துகிறார்கள்
யாரோ ஒருவர் பற்றிய வாகனத்தை
யாரோவெல்லாம் உறிஞ்சிய தேனீர்க் குவளைகளை
யாரோவெல்லாம் அமர்ந்த பேருந்து ஆசனங்களை
யாரோ சுவைத்தை அதரத்தை குறிகளை
யாரோவெல்லாம் இருந்த.., புதைந்த
நிலத்தை
யாரோவெல்லாம் அசுத்தப்படுத்திய
கழிப்பறைகளை
தமக்கானவை என தீர்க்கமாய் நம்புகிறார்கள்
யாரோவெல்லாம் உள் இழுத்த காற்றை
உள்ளிளுத்தபடி
தங்களை உயரத்தில் வைக்கிறார்கள்
பரிசுத்தமானதென இங்கு எதுவுமே கிடையாது
எல்லாமே அளையப்பட்டவைகளே
விக்கிரகம் தொடக்கம்
உயரிய விலைகள் வரை
ஆனாலும்
எனது மதம்
எனது ஜாதி
எனது நிலம்
எனது உடல் என அவர்கள் ஒரு மாயைக்குள் வாழ்கிறார்கள்
வேடிக்கை என்னவெனில்
உயர்தரமானவற்றையெல்லம்
சொந்தம் கொண்டாடியவர்களின்
பிண நாற்றம் அத்தனை கொடுமையாய்
இருக்கிறது என
முகமூடி அணிந்தபடி கொத்திக் குடல்
எடுக்கிறான்
உயர்தரமானவர்களால் புறக்கணிக்கப்பட்ட
ஒருவன்
அனாதியன்