அவன் கவிஞன்


உலகை உள்ளங்கையில் வைத்திருப்பவன்
அவன் எழுத்துக்களில் அகிலம் மயங்கும்
அகங்காரம் கொண்டதில்லை அவன்
ஆனால் கவிஞன் என்ற செருக்குண்டு
தமிழை உயிராய் மதிப்பவன்
உயிரான தமிழை சுவாசமாக கொண்டவன்
அவன் கண் நோக்கினால் கவி மழை பொழியும்
இரவும், நிலவும், இயற்கையும்
அவன் வார்த்தைகளில் களி நடனம் புரியும்
இயற்கையுடன் ஒன்றிய புள்ளினங்களும் பாட்டிசைக்கும்
அவற்றின் பிறவிப் பயன் என்ன
என்பதை அவன் வாயுரைக்கும்
கட்டி ஆளும் அவன் எழுத்தின் சக்தி
வாய்மையை தினம் உரைக்கும் அவன் புத்தி
கனவினையும் கட்டிப் போடும் திறன் கொண்டவன்
கனவு காணவும் வழி வகுக்கும் திறனும் கொண்டவன்
அவன் சூரியன் சுடும் என்றால் நிஜமாய் சுடும்.
இல்லை குளிரும் என்றால் பனியாய் குளிரும்.
அவன் அடங்குவதில்லை ஆராவாரக் கூச்சலுக்கு,
அவன் அடங்கும் பிள்ளை, அன்புள்ளம் கொண்டவர்க்கு
அன்புக்கு விலையேதும் அறியான்,
ஆசைக்கு விலை போகான்,
அறிவுக்கு தலை வணங்குவான்,
அன்பரையும் அனைத்து மகிழ்வான்
குழந்தைகள் என்றால் இவனுக்கு உயிர்,
குழந்தையாகும் சில நேரம் இவன் மனமெனும் பயிர்,
அனைவரையும் வசீகரிக்கும் இவன் வார்த்தைகள்.
குணம் கொண்டோன், குரலும் கம்பீரமே
கருமை எனினும் இவன் உள்ளம் வெண்மையே,
கடவுளை பணியும் உள்ளம்
அதில் கடலென தினமும் பாச வெள்ளமே
பாவியையும் மன்னிக்கும் உள்ளம்
அது கடவுள் கொடுத்த அருள் வெள்ளம்
பழித்ததில்லை என்றும் எவரையும்
மன்னித்து மறப்பதுண்டு எவர் செய்த தவறையும்
என்றெல்லாம் நினைத்திருந்தேன்
புரிந்தது….
அவன் கவிஞன் மட்டுமல்ல
திறமை மிக்க நடிகனும் என்று …