ஆட்டோவில்‘ ஆடு(து)கள்

உறவுகளைப் பார்க்கும் எண்ணத்தில் – எம்
ஊரை நோக்கிப் புறப்பட்டேன்.
ஊரின் பேரில் பேருந்து
உவகைகொண்டு அதில் சென்றேன்.
பழைய நினைவுகள் தலைதூக்க
பகல் பிரயாணம் அமைந்ததினால்
காட்சிகள் பலவே கண்முன்னே
கண்டு களித்தேன் மகிழ்வாக.

கொக்குகள் குருவிகள் கோலமிட
கோழிகள் குஞ்சுகள் குதுகலிக்க
ஆடுகள் மாடுகள் மேய்த்தபடி
ஆங்காங்கே திரிய சுயமாக
விரிந்து பரந்த ஆலமரம்
விழுதுகள் தாங்கி சடைச்சு நிற்க
வளைந்த சவண்ட பூவரசுகள்
வருட முதிர்ச்சி காட்டி நிற்க
வேப்ப மர நிழலினிலே
வேலை முடித்த பெரியோரும்
விளையாடிக் களைத்த சிறுவர்களும்
அமர்ந்திருந்த காட்சிகள்
கண்ணுக்கு விருந்தாய் அமைந்திடவே
களைத்தபடி இறங்கினேன்
நான்.
பார்த்திருந்த உறவுகள்
பாசமாய் என்னை அணுகாமல்
பரிகாசமாய் பார்த்தார்கள்
|பஸ்| ல்; நீங்கள் வருவதறிந்தால்
ஆட்டோவுடன் நாம் வந்திருப்போம்.
ஆடுகளைக் கூட மேச்சலுக்கு
ஆட்டோவில்தானே அனுப்புகிறோம்.

கேட்க கேட்க பொறுக்கவில்லை
கேணைப்பயலா நீ எனக்
கேட்டது மனது உள்ளுக்குள்.
காலை மாலை வேலைக்கு
இங்கே நான் கால்நடையா
சென்று வந்து பணம் சேர்த்து – எம்
தேச உறவுகளுக்கு அனுப்பி வைத்தால்
மேச்சல் தரைக்கு கால்நடைகள்
சென்று திரும்ப ஆட்டோக்கள்.

மணியம் டோட்முண்ட்