இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவிதை

டென்மார்க்கின் தலை நகரையண்டிய கொல்பெக் நகரத்தில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்து கவிதை, நாடகம், மேடைப்பேச்சு, வில்லுப்பாட்டு என்று இப்போது ஆலயங்களில் பக்தி சொற்பொழிவு ஆற்றுவது வரை தன்னை சகல துறைகளிலும் புடம் போட்டுள்ளார் கவிஞர் இணுவையூர் சக்திதாசன்.

தாவடியில் பிறந்து, கொக்குவிலில் கல்வி கற்ற இவர் தனது பெயருடன் இணுவையூர் என்ற நகரத்தையும் இணைத்து தனது நான்காவது நூலாக இந்த கவிப்படைப்பை வெளியிட்டுள்ளார்.

சமூக அக்கறை கொண்ட இவரின் படைப்புக்களில் பல்வேறு பாடு பொருள்களும் பங்கெடுத்துக் கொள்கின்றன, வெறும் காதலை மட்டுமே கருப்பொருளாகக் கெண்ட பல கவிதைத் தொகுப்புக்களை கண்டு சலித்துப் போன மனதிற்கு இவரது இத்தொகுப்பு சற்று ஆறுதல் தருகிறது என்று கவிஞர் அகளங்கன் தனது பக்க நியாயத்தைத் தருகிறார்.

வவுனியாவில் உள்ள விஜய் அச்சகம் 134 பக்கங்களில் யூலை 2016 இந்த நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறது, ஆத்மாவின் அடி ஆழத்தை முத்தமிட்டு முத்தமிட்டு முத்தெடுக்கின்றன இவர் கவிதைகள் என்று கவிஞர் கல்லாறு சதீஸ் புகழுகிறார்.

இந்த நூலில் கவிஞர் தனது அணிந்துரையில் தரும் வரிகளிலேயே இனி என்ன வரப்போகிறதென்பதை தெளிவாகவே தந்துவிடுகிறார். பீரங்கி தாக்கிய மரமாய் எனது வாழ்வு, தொடரும் மேற்குலகில் கலையுணர்வும் கவியுணர்வும்தான் என்னை வாழ வைக்கிறது என்கிறார்… போதுமே..! முதலில் இந்தத் தொகுப்பில் உள்ள சில கவிதைகளைப் பார்க்கலாம்..

sak-foto

மேக்கப்..

விரும்பி உன் அழகைக்
கெடுக்காதே..
இயற்கையிலேயே நீ ரெம்ப
அழகுதான் – அதை
மறக்காதே..!

யாழ்ப்பாணத்தில் காதலனை அடித்துவிட்டு காதலியை பாலியல் வன் கொடுமை செய்து சென்ற கூட்டத்தை நினைத்தப் பாடிய கவிஞர்..

காதல் தப்பா..?
காதலித்தவன் தப்பா..?
காதலித்த சமூகம் தப்பா..?

என்று காட்டமாகக் கேட்கிறார், இப்படி அன்றாட பிரச்சனைகள் பற்றி கவிஞர் பாடிய முகநூல் கவிதைகளே இந்தத் தொகுப்பில் அதிகம் இடம் பிடிக்கின்றன.

அந்த ஆத்மாக்களின் பிச்சை என்ற கவிதையில்..

என்னை மட்டும் ஏற்றிவிட்டு
வான் பார்த்து கும்பிட்டவர்களே
மீண்டு வந்து பார்த்தபோது காணவில்லை
மாண்டுவிட்ட தடயம் கூட இல்லை…

ஒவ்வொரு ராத்திரி கனவிலும் இரத்த நிலா ஊர்வலம் போகிறது என்கிறார்.

உன்னைப் பார்த்து – இந்த
உலகம் திருந்துமானால்
நீதான்
இந்த உலகத்தின்
உண்மை குடிமகன்..!

————
sak-2

அணு அணுவாய் அனுபவி
உன் வாழ்வை
வீணடித்தால் அணு அணுவாய்
அழுவாய்..!!

————

அரசியல் கட்டவுட்
சினிமா எதுமே
கிடையாத சிங்கப்பூர்
சாலைகள்…!

————

ஒரு நாடின்றி அலைகின்ற
தமிழர் எல்லாம் – தாம்
வாழுகின்ற நாடுகளில் இருந்தபடி
தமிழ் வாழ உழைக்கின்ற
பெரு முயற்சி போதும்
தமிழ் வாழும்..!

————

தூக்கம் கெட்டு
உழைத்து துண்டு துண்டாய்
சீட்டுக்கட்டி ஆண்டு
இரண்டு கழிச்சு
கழிவில்லாமல் சீட்டெடுக்க
தாய்ச்சிக்காரன்
நாட்டிலேயே
இல்லையென்றால் – அந்த
இரவை எப்படி அழகென்பேன்..?

————

ஊருக்கு உபதேசம்
தேவைக்கொரு மந்திரம்
யாருக்கும் உதவாத வேதங்கள்
கூறு போட துடிக்கும்
சமூகங்கள்..!

————

அந்தக் காலம் போலல்ல
இந்தக்காலம் படு பிஸி
பாட்டி தாத்தா கூட
பேஸ்புக்கில்தான் – இப்போ
நடு நிசி..!

————

இன்று கதை எழுதுவோரும்
கவிதை எழுதுவோரும்
கட்டுரை எழுதுவோரும்
புத்தகங்களை அச்சடித்துவிட்டு
விற்பனை சந்தையில்லாமல்
ஒப்பனைக்காக வாழும் வாழ்வு..!

sak-3

இவ்வளவு கவிதை வரிகளையும் வடித்தெடுத்து தொகுப்பின் தொகுப்பாக பார்த்தால் கவிஞரை அடையாளம் காண முடியும்.

சமுதாயம் வாழ வேண்டுமென்ற போராட்டம்..
படைப்புகளால் சமுதாயத்தை புண்படுத்தாமல் பண்படுத்த வேண்டுமென்ற நோக்கம்
தன் சொந்த அனுபவத்தையே கவிக்கருவாக எடுக்கும் உண்மை..
மற்றவர்களுக்கு தெரிந்தாலும் கண்டு பிடிக்க முடியாத விடயங்களை நுட்பமாக கண்டறிந்து கவியாக்கும் கழுகு பார்வை..
சலிப்பில்லாத பயணம்..

இணுவையூர் சக்திதாசனின் இந்தப் படைப்பை கையில் எடுத்தால் மனதுக்கு இன்பம் தருகிறது அந்த இணுவையூரின் இயற்கை அழகு போல..

விஜய் பதிப்பகம் தரமாக அச்சடித்துள்ளதால் படிக்க மேலும் விருப்பம் தருகிறது.

படிக்க வேண்டிய தொகுப்பு..