இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவனத்தைத் தொட்ட கவிதை நூல் வெளியீடு..

 

நடனமும், பாடல்களும் ஆட்டங்களும் இல்லாத தூய இலக்கிய நிகழ்வு..

கவிதை வெளியீடா.. ஆரப்பா கேக்கிறது நடனங்களை போடுங்கோ கொஞ்சம் போராடிக்காமல் இருக்கும்.. சனமும் வரும்..

இசைக்கச்சேரியை போட்டால் பாடகர்களும் குடும்பங்களும் வரும் சனம் கூடும் ஆகவே கடைசியில் இசைக்கச்சேரி..

இடையிடையே றீமிக்ஸ் பாடல்களுக்கு நடனம்.. இல்லாவிட்டால் புத்தக வெளியீடு வெற்றிபெறாது என்ற புலம் பெயர் தமிழர் புத்தக வெளியீட்டுவிழா தொடர்பான தப்புக்கணக்குகளை உடைத்து இவை எதுவுமே இல்லாத கவிதை நூல் வெளியீட்டுவிழா இது..

kst-13

 

 

 

 

 

 

 

 

 

 

 

இனி..இந்தச் சமயமா..? நாங்கள் வேறு சமயம் அந்தக் கோயிலுக்கு வரமாட்டோம், இல்லை அந்தச் சமயமா இவர்கள் வருதில்லை நாங்கள் வரமாட்டோம்.. இப்படி இருக்கும் பத்தாயிரம் பேர்களில் பத்தாயிரம் பிரிவுகள் மதங்களால்..

இவ்வாறு..

ஈழத்திற்காக ஒன்றுபட்ட புலம் பெயர் தமிழரை சமயங்களால் பிரிக்கும் முயற்சிகளை முறியடித்து வேல் முருகன் ஆலயத்தில் பல சமய தலைவர்களும் கூடியது சிறப்பு தந்தது..

ஒரு வெளியீட்டு விழாவினால் மத முரண்பாடுகளை முறியடிக்கும் காட்சியை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில் தந்த விழா..

பொதுவாக..

கோயிலில் புத்தக வெளியீட்டு விழாக்களை நடத்த முடியாது நாட்டாமை செய்து, நடு வழியில் பூசை தொடங்கப் போகிறது என்று எல்லாவற்றையும் குழப்பியடித்து..

பணம் கேட்டு பிடிவாதம் பிடித்து, மற்றவரை மதிக்கத் தெரியாது வார்த்தைகளை உதிர்த்து பதைபதைக்க வைப்போர் மலிந்த புலம் பெயர் கோயில் கலாச்சாரத்தை உடைத்து இலக்கியத்தை வளர்க்க இடம் தரும் கோயிலொன்றும் கண்டேன் என்று பெருமைப்படும்படியாக கொல்பெக் வேல்முருகன் ஆலயம் வழங்கிய இணையில்லாத ஆதரவு..

இனியொரு நூல் எழுதினால் வேல் முருகன் ஆலயம் இருக்கிறது என்ற நம்பிக்கை தந்த ஆலய நிர்வாகத்தின் நல்ல மனம்..

தொடக்கம் முதல் நிறைவுவரை அரங்கில் இருந்து வெளியேறாது கரங்களை தட்டி ஆதரவு தந்த இரசிகத்தன்மை குன்றாத மக்கள், அலங்காரமாக ஆடைகளை அணிந்துவந்து தந்த தமிழ் மணம்..

fo-1

சிறப்பாக பெண்கள் கைகளை தட்டி வழங்கிய மகத்தான ஆதரவு அதிசயிக்க வைத்தது..

அதுமட்டுமா..?

கவிதை நூல்கள் முழுவதையும் ஒன்று பாக்கியில்லாமல் விலை கொடுத்து வாங்கி வெளியீட்டை உற்சாகப்படுத்திய போக்கு..

இலக்கியமா சனம் வராது என்ற கொள்கைளை வேரோடு பிடுங்கி எறிந்து, இனி இலக்கியத்திற்கே காலம் என்று முழங்கு சங்கே என்று முழங்க..

நடனம், பாடல், வீணை, வயலின் இல்லாமலே நல்ல தமிழ் உரைகளால் அரங்கை கட்டிப்போடலாம் என்று கூறிப்போனது கவிஞர் இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் கவிதை வெளியீட்டு நிகழ்வு.

வேல் முருகன் ஆலயத்தில் தமிழ் வளர்த்த முருகன் பாதங்களில் நூல் வைக்கப்பட்டு ஆலய பிரதம குரு சுபாஸ் சந்திர குருக்கள் தலைமையில் கவிதை நூல் ஊர்வலமாக மங்கள வாத்தியம் முழங்க அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.

ஆசிரியர் கி.செ.துரையின் தலைமையில் நடந்த விழாவில்.. கவிஞர் சக்திதாசனுக்கு கனக கவி என்ற பட்டத்தை சிவயோகம் சித்தபீடம் சுவிற்சலாந்து வழங்கி பாராட்டியது.

முகநூலில் கவிஞர் எழுதிய கவிதைகள் முற்றத்தில் போடப்பட்ட பல்வேறு கோலப்புள்ளிகள் போல பல்வேறு தலைப்புக்களில் பதிவாகியிருக்கிறது, ஆனால் அவை எல்லாவற்றையும் இணைத்து சமுதாயத்தின் மேல் கவிஞர் கொண்ட நேசம் அருவமாக கோடு போல இணைக்கிறது, அந்த இணைப்பு ஓர் அழகிய உதயமாக, கோலப்படமாக, வாழ்க்கை சித்திரமாக நூலுக்கு வடிவு கொடுக்கிறது.

இதுவே இன்று புற்றீசல்கள் போல வரும் முகநூல் கவிதைத் தொகுப்புக்களில் இருந்து இந்த நூலானது வேறுபட்டு நிற்க முன்னணிக்காரணியாகும், நாம் முகநூலில் எழுதிய கவிதைகளை எல்லாம் தொகுப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது, அதை தொகுப்பாக்க முன்னர் ஒரு தொடர்பை பேண வேண்டும்.

அப்படிப் பேணாவிட்டால் முற்றத்தை கூட்டி குவிக்கும் குப்பைக் கோபுரம் போல கவிதை தொகுப்பு குப்பையாகிவிடும், அந்த ஆபத்து இல்லாமல் வெளிவந்துள்ள ஒன்றிரண்டு தொகுப்புக்களில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

fo-2

கவிஞரின் முதலாவது கவிதை நூலுக்கு பின்னர் அவருடைய இரண்டாவது தொகு வருகிறதா.. அப்போது குடும்பத்தின் ஆதரவு தளர்வுற ஆரம்பிக்கும், ஆனால் நான்கு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட தொடர்ந்து அவருடைய குடும்பத்தினரின் ஆதரவு பெருகிச் செல்வதே கவிஞரின் வெற்றியாகும், அவருடைய மனைவியார் ராஜி சக்திதாசனும் மூன்று பிள்ளைகளும் கண்ணீர்மல்க அவரை பொன்னாடை போர்த்தி வாழ்த்தியது அதன் அடையாளமாக இருந்தது.

கவிஞர்கள் எழுத்தாளருக்கு ஆதரவு கொடுக்காத குடும்பங்களுக்கு சவுக்கடி போட்டது விழா.. இதுவே உச்சக்கட்டமாகும், போகிவிட்டு கேலி பேசாது எல்லோரும் விசுவாசமாக ஒரு வெளியீட்டை மதித்தது தமிழினம் சரியான பாதையில் திரும்புகிறது என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.

விழாவில்..

பேராசிரியர் ஜெயந்தி பாலச்சந்திரனின் உலக நேச வாழ்த்துப்பாடல், கோப்பன்கேகன் தமிழ் பாடசாலை அதிபர் திரு. மோனராஜா வழங்கிய உவமை விளக்கங்கள், அதன் ஆசிரியை சென்னைப்பல்கலைக்கழக பட்டதாரி கமலி சசிபாலு வழங்கிய உதாரணங்கள், தமிழ்நாடு பேராசிரியர் பாலச்சந்திரனின் நிர்மலமான பேச்சு, வினோத்சர்மாவின் நெஞ்சை தொடும் தமிழ் விளக்கம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கற்ற திரு. ரமேஸ் பக்கிரிசாமியின் இலங்கை, தமிழகத்தமிழ் பேதங்கள் பற்றிய விளக்கம், அருட்தந்தை அல்பிரட் சூசைப்பிள்ளையின் சுவைத்தல் அனுவ பகிர்வு, திரு. ஆர். இரேசேந்திரம் அவர்கள் தந்த குறிப்பான விளக்கங்கள், சு. ரவீந்திரனின் விளக்கம், ஆலய பொருளாளர் பவானந்தன் கூறிய கருத்துக்கள், மயூரன், சிவயோகம் ஐயா ஆகியோரின் வாழ்த்துக்கள் அனைத்தும் அவையை சோர்வின்றி வைத்திருந்தன.

ss

எவருமே அதிக நேரம் உரையாற்றி விழாவில் மற்றவர்கள் பேச முடியாத இக்கட்டான சூழலை உருவாக்காமல் ஒருவருக்குக் கூட நேரமாகிவிட்டது என்று கூறாமல் எல்லோரும் நேரத்தை மதித்து நடந்தமை பெரு மகிழ்வு தந்தது.

ஆசிரியர் கி.செ.துரையின் தலைமையில் நடந்த இந்த விழாவில் வெளியிடப்பட்ட நூலின் முதற் பிரதியை வேல்முருகன் ஆலயத் தலைவர் திரு. அன்னலிங்கம் பெற்றுக் கொண்டார்.

தொடர்ச்சியான விருந்துபசாரங்களுடன் ஐந்து மணி நேரம் போனதே தெரியாது பறந்து போனது..

தாயகம் வவுனியா விஜய் அச்சகத்தில் 134 பக்கங்களில் சென்ற ஆண்டு யூலை வெளியிடப்பட்ட இணுவையூர் சக்திதாசனின் தொட்டுவிடும் தூரத்தில் இப்போதுதான் சரியான தூரத்தை தொட்டுள்ளது