***இரை தேடும் பறவைகள் ***கவிதை மண் நேசன்

வரை முறைக்குள் வாழ்வாங்கு வாழ்ந்த
……… வம்சாவழித் தமிழர் நாம், அன்று.
கரை புரண்டு ஓடிய கயவர்களின்
…….கடுமையான போரலையினாலே,
இரை தேடும் பறவைகள் ஆகியே
…….இலங்கையை விட்டுப் பறந்தோம்.
சிறை வாழ் சிங்கங்கள் போல்-எம்மனதில்
….சிந்தனைகளெல்லாம் சிலோனை பற்றியே.
பறை சாற்றி மகிழ்கிறோம் இன்று நாம்
…..புலம் பெயர் நாட்டுப் ,புதியவர்களென
உறைகின்றஇடங்கள் எல்லாம் ஒருபோதும்
……உறைபனிக்கு உரிமை ஆவதில்லையே.
தரை தனில் படுத்துறங்கினாலும் நம்
…….தாயகமே எம்மைத் தாங்கும் மண்.
விரைந்தோடும் காலங்கள் வீணாகி நம்
……..வயதை மட்டுமே அதிகரித்துப் போக.
நரை சூழ்ந்து நலிந்த போது நம்மவர்க்கு
……நல்ல நிழல் என்றும் நம் தாய்மண்ணே
ஆக்கம்; மண் நேசன்