இலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள் .KS ராஜா

இலங்கை வானொலி நினைவில் நிற்கும் குரல்கள் .

KS ராஜா – இலங்கை வானொலி அறிவிப்பாளர் ..

„வீட்டுக்கு வீடு 
வானொலிப் பெட்டிக்கருகே 
ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!“

1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி!

‚இலங்கை‘ என்ற வட்டத்தினை உடைத்து, தென்னிந்தியாவிலும் அன்றைய நாட்களில் வானொலிகளை நோக்கி மக்களை ஒன்று கூட வைத்தவர்கள்….. இலங்கை வானொலியின் அறிவிப்பாளர்கள் கே.எஸ்.ராஜாவும், பி.எச்.அப்துல் ஹமீத்தும்!

எடுத்துக்கொண்ட விஷயத்தை, சில சொல்லாடல்கள் மூலம் மனதில் நிலைத்து நிற்பதாக, பொட்டில் அடித்தாற்போல் நேயர்களின் மனதில் பதியவைக்கும் இலாவகம் கொண்டவர்கள்!

ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் ‚இசைத் தேர்தல்“ என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். „இளமை ஊஞ்சலாடுகிறது“ படத்தில் வரும் „என்னடி மீனாட்சி“ பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது.

இவ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இருந்த கற்பனைத்திறன் அலாதியானது.நிகழ்ச்சித் தயாரிப்பை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு, ஒரு நிமிடம் தமிழ், அன்றும் இன்றும் போன்ற , இன்றும் பல்வேறு கல்லூரி விழாக்களிலும், தொலைக் காட்சி சானலிலும் பார்க்கும் நிகழ்ச்சிக்களை உருவாக்கியவர்கள் இவர்கள்.

கே.எஸ். ராஜா „திரைவிருந்து“ என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார்.

கம்பீரக் குரல், மின்னல் வேகம், வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக் கொள்ளும்படியான தெளிவான உச்சரிப்பு…… வார இறுதி நாட்களை வானொலிக்கருகே கட்டிப் போட்ட வித்தகர் K.S.ராஜா!

„அறிவிப்பு என்பது தாலாட்டுப்பாடுவது போன்றதல்ல, தூங்கி விழுபவர்களையும் உற்சாகம் கொள்ளச் செய்வது“ என்று தனது குரலால் அனைவருக்கும் சக்தி பாணத்தை காது வழியாக ஊட்டியவர் கே.எஸ்.ராஜா!

‚நீயா?‘ பட விளம்பரத்தில் ஸ்ரீப்பிரியா கதறிக் கேட்கும், 
”என்னை விட்டுட்டு போகாதீங்க ராஜா….” — இதை நிகழ்ச்சியின் இறுதியில் வைத்து, „போகவில்லை நேயர்களே…. மீண்டும் அடுத்த ஞாயிற்றுகிழமை இதே நிகழ்ச்சியில் சந்திப்போம்!“ என விடைபெற்றுச் செல்வது K.S ராஜாவின் தனி அடையாளம்!!

யாழ் முற்றவெளி அரங்கில் K.J. ஜேசுதாசின் இசை நிகழ்வு! பாடகி சுஜாதாவும் வருகை தந்திருந்தார். மேடை அறிவிப்பாளர் K.S ராஜா! தமிழும் ஆங்கிலமும் கலந்து, ‚இசைச் சிகரமும் – அறிவிப்பு சிகரமும்‘ இணைந்த அந்த மேடை நிகழ்வு இன்றளவும் யாழ் முற்றவெளியையும் அது தாண்டிய கடற்பரப்பையும் வருடிச் செல்லும்!

‚நான் ஏன் பிறந்தேன்‘ படத்தில் 
கே.ஆர்.விஜயாவிடம் எம்.ஜி.ஆர் பேசுவதாக வரும்….,

„அழறவங்களை சிரிக்க வைக்கிறதும், சிரிக்கிறவங்களை சிந்திக்க வைக்கறதும் தான் என்னோட லட்சியம்!“ 
என்ற வசனத்தை மட்டும் தனியே பிரித்தெடுத்து……..

„மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களே! உங்கள் இலட்சியம் என்ன?“ என்று நீங்கள் பேசிவிட்டு, அந்த இடத்தில் கொண்டு வந்து லிங்க் கொடுப்பீர்களே…… அடடா!

இது போன்ற ரேடியோ கிராபிக்ஸை எல்லாம் 
இன்றும் கூட என் செவிகள் அசை மீட்டு ரசிப்பதுண்டு.

1983 இலங்கை, ஜூலை கலவரம்….. இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ‚ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் ‚இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‚நினைவு சமாதி‘ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.

K.S.ராஜா, தூய தமிழில் உரையாடும் வேகத்துக்கு ஈடு கொடுக்க இது வரை தமிழினத்தில் யாரும் பிறந்ததுமில்லை, பிறக்கப் போவதுமில்லை!

கோடான கோடி தமிழ் வானொலி நேயர்களின் மனதில் இன்றும் அவரது நினைவுகளும், அவரது மதுரக்குரலும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

நன்றி – யாழ் சுதாகர்., ஆருத்ரா, ஜனா