ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் வெளியீட்டு விழா.


முகநூலில் அறிமுகமான அநேகர் தமது திறன்களை விரிவாக்கி இன்னுமொரு கட்ட இலக்கியப் பாய்ச்சலில் ஈடுபடும் காலமிது. வேகமான காலத்தில் வேகமாக நூற்பிரசவங்களும் தொடர்கின்றன. யாழ்ப்பாணம் வாழ் பெண் படைப்பாளி நிவேதா நிவேதிதா எழுதிய ‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 01.09.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு ஈழத்தின் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஆரம்பமானது. நிகழ்விற்கு கவிஞர் வே.முல்லைத்தீபன் தலைமை வகித்தார்.
முன்னதாக விருந்தினர்கள் மலர்ச்செண்டுகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்[பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தினை கலைஞர் பவானந்தமூர்த்தி இசைத்தார். வரவேற்புரையினை ஒளிஅரசி சஞ்சிகையின் உதவி ஆசிரியர் பா.ஜெயிலா வழங்கினார். ஆசிரியர் து.சுதர்சன் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். தலைமையுரையினைத் தொடர்ந்து வாழ்த்துரையினை யோ.புரட்சி வழங்கினார். ஊடக அனுசரணையாளர்கள் சார்பில் ‚ரியூப்தமிழ்‘ வலையமைப்பின் அறிவிப்பாளர் டிவனியா முகுந்தன் சமகால இலக்கியப்போக்கு பற்றிய கருத்துரை வழங்கினார். சிறப்புரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார். வாழ்த்துக் கவிதையினை ஆதவன் வானொலி அறிவிப்பாளர் கிளம்சன் வழங்கினார்.
பிரதம விருந்தினர் உரையினை நிகழ்வின் பிரதம விருந்தினர் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.ஹம்சத்வனி நிகழ்த்தினார். பிரதம விருந்தினர்க்கான பிறந்தநாள் வாழ்த்தினை நூலாசிரியர் நிவேதா நிவேதிதா வழங்கினார். நூலினை வடமாகாண கல்வித் திணைக்களத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.ஹம்சத்வனி, உடுவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் ரஜனி நரேந்திரா வெளியிட முதற்பிரதியினை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பிரதி அதிபரும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்திய இணைப்பாளருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
நூலின் ஆய்வுரையினை துணுக்காய் பிரதேச கலாசார உத்தியோகத்தர் எழுத்தாளர் கு.ரஜீபன் நிகழ்த்தினார்.
நூலாசிரியருக்க்கான பாராட்டு மொழிகளை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பிரதி அதிபரும், சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிராந்திய இணைப்பாளருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், இளைய படைப்பாளிகள் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா, கவிஞர் ஆ.முல்லைதிவ்யன், கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் ஆகியோர் வழங்கினர். டான் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பணிப்பாளர் பண்பலை வேந்தன் ரி.எஸ்,முகுந்தன் அவர்களின் கருத்துரையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. நூலாசிரியரின் உருவத்தினை ஓவியமாக்கி படைப்பாளர் வழங்கிமை சிறப்பானது..
இறுதியாக நூலாசிரியர் நிவேதா நிவேதிதா அவர்களின் ஏற்புரை இடம்பெற்றது. நூல் வெளியீட்டிற்கான அனுசரணையினை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தது..
‚எறும்பூரும் பாதைகள்‘ கவிதை நூல் என்பது முதற்படைப்பு எனும் அடிப்படையில் வெற்றி என்பதோடு, அடுத்த நகர்வின் ஆரம்பம் என்பதனை நூலாய்வுரை நிகழ்த்திய எழுத்தாளர் கு.ரஜீபன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.