உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதை மண்..

💞

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் கவிதைகள்💞
மண்..
என்னை என் மண்ணில்
புதைத்தாய் பகைவனே!
என் மண்ணை
எங்கே புதைப்பாய்?
மாவீரன்..
இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்;
பாடம்..
புரட்சியாவது வெங்காயமாவது
என்கிறாய்
தெரிந்து பேசு
காயப்படுத்தியவனின் கண்ணீரை
வாங்கும் வெஙகாயம்.
செந்நீரை வாங்கும் புரட்சி
போர்..
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.
ஞானம்..
ஞானம் பெற்றது.
நீ – உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்
கட்டப்பட்டதால்; நான்-என் மண்ணில்
பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.
கொடை..
தங்க வளையலைக்கழற்றி
போராளியிடம் தந்தாள்…
செலவுக்குவைத்துக்கொள்,
உங்களில் பலருக்கு
கைகளே இல்லை
எனக்கு எதுக்கு வளையல்.
மானம்..
உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு,
கெஞ்சி கோவணம் கட்டாதே.
அம்மணமாகவே போராடு.
நிமிர்வு..
தேவை பயில்வான்களல்ல வீரர்கள்
உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு
வில்லில் இல்லாத நிமிர்வா?
நிலவு..
புராணமாய் இறைவனின் தலையில்
வரலாறாய் மனிதனின் காலில்.
அடி ..
கலையை – கலைஞனை
போற்றிய நாடிது என்கிறாய்…
காலம் காலமாய்
பறையை – பறையனை தாழ்த்திய நீ.
நாற்காலி..
இங்கே வேறுபாடு அதிகம் இல்லை
நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.
வீடு தூங்க கட்டில்
நாடு தூங்க நாற்காலி
அடக்கம்..
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்
திமிர்..
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்
மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….
கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.
முரண்..
இறைவனின் வாகனம் என்றான் நாயை
அவதாரம் என்றான் பன்றியை
இறைவனே என்றான் குரங்கை
இவனே திட்டினான் என்னை
நாயே! பன்றியே! குரங்கே!