உனக்காகவே வாழ்கிறேன்! -இந்துமகேஷ்

நெடுங்காலத்துக்குப் பிறகு எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட இரண்டு நண்பர்களுக்கிடையிலான சுகநல விசாரிப்புக்கள்:
„ஆளே அடையாளம் தெரியேல்லை… எப்பிடியடாப்பா இருக்கிறாய்??“
„ம்… ஏதோ இருக்கிறன்!“
„என்னடா… சலிச்சுக்கொள்ளுறாய்?“
„வேறை என்ன மச்சான்…. எங்கடை பழைய காலம் மாதிரி இல்லை மச்சான் இப்ப….காலம் நல்லா
மாறிப் போச்சு…. எல்லாம் தலைகீழாப் போச்சுது!“
„உலகம் தோன்றின காலம்தொட்டு எல்லாக் காலத்திலையும் உலகத்திலை இருக்கிறதெல்லாம்
தலைகீழாத்தானே இருக்கு… நானறிஞ்சவரைக்கும் வெளவால் ஒண்டுதான் நிலத்தைப் பார்த்துக்கொண்டு
தலை நேரா நிக்குது…!“
„நீ பகிடி விடுறை மச்சான்… நான் என்ரை கஷ்டத்தைச் சொல்லுறன்!“
„விளங்குதடாப்பா.. ஆனா…வாழ்க்கை எண்டால் எல்லாத்தையும் சந்திச்சுத்தான் ஆகவேணும்!“
„நீயும் இப்ப நல்லா மாறிப்போனாய்… சும்மா ஒரு சின்னக் கவலை எண்டாலும் முகத்தைத் தொங்கப்
போட்டுக்கொண்டு திரிவாய்… இப்ப என்னடா எண்டால் ஒரு கவலையும் இல்லாதவன் மாதிரி..! “
„காலம் எல்லாரையும் எல்லாத்தையும் மாற்றிப்போடும்தானே மச்சான் “
மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
„மாறிக்கொண்டேயிருப்பதே இயற்கையின் மாறாத விதி“ எனில் இந்த மாற்றம் குறித்து அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை.
உலகின் இயக்கமும் இந்த மாற்றங்களோடு இரண்டறக் கலந்துவிட்டது.
புவியின் உள்ளும் புறமுமாய் நிகழும் மாற்றங்களைப் போலவே நமது உடலும் உள்ளும் புறமுமாய்
மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
நமது புலன்களுக்கு எட்டும் மாற்றங்கள் அவ்வப்போது நமது கவனத்தை ஈர்க்கின்றன. நமது புலன்களுககு எட்டாத மாற்றங்கள் குறித்து நாம் பெரிதாய் அக்கறைப் படுவதில்லை.
இயற்கை வகுத்த ஒழுங்கின்படியே மாற்றங்களைக் கொண்டுவரும் உடல், அந்த ஒழுங்கு நிலை பிறழும்போதுதான் அதுபற்றிக் கவனமெடுக்கிறோம். „இது இப்படித்தானா?“ என்று ஆராய முனைகிறோம்.
உடல்வலி என்றோ நோய் என்றோ ஏதும் ஏற்படாத வரையில் உடலின் இயக்கம் பற்றியோ உடல் உறுப்புக்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியோ நாம் கவலைப்படுவதில்லை என்பதுதானே நிஜம்.
நான் நான் என்று தம்மைத்தாம் அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் கணத்துக்குக் கணம்
தம்முள் நிகழும் மாற்றங்களைப்பற்றி அறிந்திருக்கிறார்களா எனில் இல்லை என்பதே விடையாக இருக்கும்.
உடலின் அத்தியாவசியத் தேவை உணவு.
வகைவகையாய் உணவைத் தயாரிப்பதுவும் உண்பதுவும் மட்டுமே நமது கடமையாகிவிட்டது. உண்ணும் உணவு நாவில் சுவைகாட்டி தொண்டைக்குழிவழி உள்ளே இறங்குவதுவரைதான் நாம் உணர்ந்துகொள்ளத் தக்கதாய்
இருக்கிறது.
உள்ளே போகும் உணவு வயிற்றுக்குள் எப்படி செமிபாடடைகிறது? அது எப்படி சக்தியாக
மாற்றம் பெறுகிறது? இந்தச் சக்தி எப்படி உடலியக்கமாக மாறுகிறது? உடலின் சக்தி எப்படி செலவழிந்து மறுபடி பசிக்க ஆரம்பிக்கிறது?
– இதுபற்றிய ஆராய்ச்சிகளில் நாம் ஈடுபடுகிறோமா?
உண்பது வரைதான் நமக்குத் தெரிந்திருக்கிறது.
உணவுண்டவுடன் வாயையும் கையையும் கழுவிக்கொண்டு அடுத்த காரியத்துக்குப் போய்விடுகிறோம்.
இயற்கை தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது. மாற்றம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
உடலால் மனத்தால் நிகழும் செயல்கள் வெளிப்படும்போதுமட்டுமே மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதுவும் புலனாகிறது.
„எப்படியிருந்தவன்… இப்படி மாறிப்போனானே?“ என்று ஒருவனைப் பார்த்து இன்னொருவன் மகிழவோ
அல்லது வியப்படையவோ அல்லது திகைக்கவோ அல்லது கவலைப்படவோ ஆரம்பிக்கும்போதுதான் தன்னிடம் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது அவனுக்கு புரிகிறது.
ஒருவரிடத்து நிகழும் மாற்றங்கள் அவர்களைப்பற்றிய மதிப்பீடுகளுக்கு உரியனவாகின்றன.
நல்லது எது கெட்டது எது என்பதைத் தீர்மானிப்பதற்கும் இந்த மாற்றங்களே காரணமாகின்றன.
„பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களும் எதைநோக்கி நடக்கின்றன?“ என்றொரு கேள்வி எழுந்தால்
பெரும்பாலானவர்களிடமிருந்து வரும் பதில்-
„மரணத்தை நோக்கி!“ என்பதாகத்தான் இருக்கிறது.
„வாழ்க்கையை நோக்கி!“ என்று எவரும் பதில் சொல்லக் காணோம்.
பிறந்ததுமுதல் மழலைப்பருவம் பிள்ளைப்பருவம் வாலிபப்பருவம் முதுமைப்பருவம் என்று பல்வகையான பருவகாலங்கள் கொணரும் மாற்றங்களோடு வாழ்க்கைப் பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாலோ என்னவோ
நமது பயணத்தின் இலக்கும் வாழ்க்கையை நோக்கியதுதான் என்ற எண்ணமும் பலருக்கும் மறந்துவிட்டிருக்கும்.
„மரணத்தோடு வாழ்வு முற்றுப்பெற்றுவிடும்!“ என்று கருதும் பெரும்பாலான மனிதர்கள்தாம் இந்த உலகத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தத்தம் குறுகிய கால வாழ்வுக் காலத்துக்குள் தாம் விரும்பிய எல்லாவற்றையும் அனுபவித்துத் தீர்த்துவிடவேண்டுமென்று வெறிகொண்டு அலைகிறார்கள். தன்னலமே குறியாய் அலைவதால்
சகமனிதர்கள் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை.
தம்முயிர் காக்க பிறவுயிர் பறிப்பதிலும் அதையே
தமது வெற்றியாகக் கணிப்பதிலும் அவர்கள் சளைப்பதில்லை. தம்மைப் போல் ஆணவம் கொண்டலைந்தவர்களின் முடிவுகள் பற்றி அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் தமது வழியை மாற்றிக் கொள்வதில்லை.
மாற்றங்கள் தமக்கும் உரியன என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
ஆனால்-
„மரணத்தோடு வாழ்வு முற்றுப் பெறுவதில்லை!“ என்பதை உணர்ந்தவர்களோ மாமனிதர்களாக இன்னும் இந்த உலகில் உலவிக்கொண்டிருக்கிறார்கள். உடல் மறைந்தாலும் உருவம் மறையாமல் அவர்கள் ஒளிரும் தீபங்களாய் மாற்றம் பெற்றிருக்கிறார்கள்.
பிறவுயிர் காக்கத் தம்முயிர் தரத் தயங்காத அந்தத் தியாக தீபங்கள் – உடலால் மறைந்தாலும் அவர்கள் இன்னும் நம்மோடு உயிராய்க் கலந்திருக்கிறார்கள். உயிரின் பெறுமானம் உணர்ந்தவர்களாய் நாம் வாழ்ந்திருக்கும்வரை என்றும் அவர்களை நாம் பிரிவதில்லை.
(வெற்றிமணி -கார்த்திகை 2012 இல் வெளியான-
எனது „இன்னும் இனியும்“ கட்டுரைத் தொடரிலிருந்து!)