உலக கண்ணொளி தினம்


அகிலத்தோர் கவனம் கொள்ள
விழிப்புணர்வில் விழி திறக்க
உலக கண்ணொளி தினம்
அக்டோபர் மாத பதின்மூன்றாம் திகதி

சர்க்கரையின் விளைவென
கண் நீர் அழுத்த நோய்
கண்ணிமையின் உட்புறம் குறை
கண்களிலே புரை..

அனுதினம் புதிய நோய்கள்
அதற்கென்று பல பெயர்கள்
தீராதோ கண்ணின் குறையென்ற
நோய் தீர்க்கவே இவ்விழிப்புணர்வு தினம்

விழியின் குறைக்கு வழி வகுக்கும்
இயற்கை உணவில் செயற்கை விஷம்
புரிந்துணர்வீர் மானிடரே என்று
பறை சாற்றும் கண்ணொளி தினம்

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்
காவியம் சொல்லும் காதல் படலம்
கையடக்க நோக்கியாவை அடிக்கடி நோக்கினால்
பாதிக்கப் படுமே கண்ணின் படலம்

இறைவனின் அருட்கொடை விழியெனும் பரிசு
இதனை விடவா இணைத்தளம் பெரிசு
கண்ணொளி தந்தான் படைத்த இரட்சகன்
முகநூல் தளமோ கண்ணொளி பறிக்கும் இராட்சசன்

இருந்தால் தெரிவதில்லை கண்ணின் மகிமை
இழந்தபின் அழுவது விதியின் கொடுமை
மருந்தே உணவென்று நாமிருந்திடாமல்
உணவே மருந்தென்று வாழ்வது நலமே

அத்தனையும் தாண்டி கண்ணொளி இழந்தால்
சிகிச்சைகள் இன்று நிச்சயம் உண்டு
கவலை தவிர்த்து விழிப்புணர்வு கொள்ள
தகவல் தருகின்றது கண்ணொளி தினம்

துரித உணவுகள் தினமும் தவிர்த்து
பால், கீரை, பப்பாளி என்றே
இயற்கை உணவுடன் ஒன்றி வாழ்ந்தால்
விழியில் குறைகள் எம்மை அணுகாது!
கண்ணினை காப்போம்! வளமுடன் வாழ்வோம்!