ஊதுபத்தி வாசக்காரி! கவிதைநெடுந்தீவு தனு

கச்சைதீவு ஓரத்துல
கரையொதுங்கி எழுந்துவர
கடற்கரை படகோடு
கண்ணு ரெண்ட நான் கண்டேன்…

மணலோடு மனம் போக
மனசோரம் உன் விம்பம்
மௌனமான உன் நடையில்
மழுங்கித்தான் போனேனே…

சொருபத்தின் பூவாக
செம்பருத்தி உன் பார்வை
சனத்திரளை தாண்டி வந்து
சாவடிச்சு போவுதடி…

அற்புதரின் அடியினிலே
ஆவரங்காய் நீ கொய்ய
இராத்திரியின் மின்னொளியில்
எழுந்திருந்து கனவு கண்டேன்…

கச்சான் கடை பார்க்கவென
களவாக எழுந்து வர
கைகோர்த்த உன் பின்னே
கடையெல்லாம் சுத்தி வந்தன்…

மெழுகுவர்த்தி சுடராக
எழுந்தருளி நீ அமர
ஊதுபத்தி வாசணையாய்
உன்னருகில் நானமர்வேன்…

சாப்பாட்டு சண்டையில
புழுதிக்குள் நான் குளிக்க
தவமிருந்த உன் பசி
புளிச்சாதம் ஆனதடி…

கைதட்டல் வெடியோசை
காதுநிறைய கேட்டாலும்
காதுக்குள் நீ சொன்ன
„போய்வாறன்“ ஒலிக்குதடி…

ஆக்கம் நெடுந்தீவு தனு