ஊர் நோக்கிய பயணம்!

உத்தர தேவியில் எத்தனை கனவுகளோடு
ஊர் நோக்கிய பயணமிது
மதவாச்சி தாண்டிவிட மனசு மெல்ல கனக்கிறது
வவுனியா வயல்களதோ வறண்டு கிடக்கிறது
ஓமந்தையைக் கடப்பதாய் பெயர்ப்பலகை சொல்லுகிறது
ஓயாத அலைகளின் இரைச்சல் இன்னும் காதுகளை துளையிடுகிறது
கனகராயன்குளம், மாங்குளம் கடந்தாயிற்று
பதினெட்டாம் போர் ஏற்றத்தை காண முடியவில்லையே
காப்பெற் வீதிகளோடு அதுவும் காணமல் போயிற்றோ
முறிகண்டி பிள்ளையாரை மனதில் முணுமுணுத்தபடி கடக்கின்றேன்
கிளிநொச்சி தாண்டி காற்றை கிளித்தபடி விரைகிறது
உப்பளக் காற்று மெல்ல உரசுகிறது
எட்டிய தூரம்வரை உப்பது பூத்து கிடக்கிறது
போரின் பூபாளம் பாடிய தேசம் ஆனையிறவு எதிரே தெரிகிறது
ஏதோ கைகள் தாங்கிய சின்னமொன்று எழுந்து நிற்கிறது
பளையது தாண்டியதும் நிலையது கொஞ்சம் குலைந்த போனேன்
முகமாலை வரவேற்கிறது
சரசம் போட காவோலைகளின்றி
காற்றிலாடி கையசைத்திட முடியாத முண்டங்களாய் முகமாலை கற்பகத்தருக்களங்கே!!
✍?பவளம்