எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…

முகவரி இழந்தவன் வாழ்வில் ;
முழுநிலவாய் வந்த தேவதையே !
முழுமை அடைந்தவன் ஆனேன் ;
முழுவதுமாக நீ எனை ஆட்கொண்டதனாலே !

முற் பிறப்பின் பந்தம் நீயோ ?
மறு பிறப்பிலும் தொடரும் உன் அன்போ ?
ஏழேழு பிறவியும் இணையும்
இணை இல்லா சொந்தம் நீயோ ?

வரமாக வந்த வாழ்வின் உறவே !
கரம் சேர்ந்த காதல் பூமகளே !
காலங்கள் உருண்டோடினாலும் ;
கண்ணாளன் துணை உண்டு கண்ணே !

என் கவி வரியின் கருவானவளே !
இரு கரு விழியால் கவி செய்தவளே !
கனவுகளில் தினம் கதை சொல்பவளே !
நினைவுகளில் நீங்காத பெண்ணிலவே !

உயிருக்குள் உயிரான என்னுயிரே !
உணர்வுக்குள் வேர்விட்ட காதல் செடியே !
உள்ளத்தில் உறங்காத நினைவு நீயே !
நெஞ்சத்தில் நீங்காத தென்றல் நீயே !

– வேலணையூர் ரஜிந்தன்.