எனது புரட்டப்படாத பக்கங்கள் மனங்களால் புரட்டப்பட்டது „மட்டுநகர் கமல்தாஸ்“

அனைவருக்கும் தமிழ் வணக்கம்

புத்தக வெளியீடு இடம்பெறுவதற்கு முன்னர் மனக்கவலையோடு இருந்தேன்.ஆனால் என்னுடைய மனம் மிக்க மகிழ்ச்சியடைகின்ற வகையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது்
எனது புரட்டப்படாத பக்கங்கள் மனங்களால் புரட்டப்பட்டது
உதடுகளால் உச்சரிக்கப்பட்டது
வாழ்த்து மழையில் நனைந்தேன்
நன்றியால் நிவர்த்தி செய்துவிட
முடியாமல்
இருகரம் கூப்பி வணங்குகின்றேன்.இத்துடன் என்னுடைய நிகழ்வு பற்றிய சில விடயங்களை பகிர்கின்றேன்.

நாவிலே நன்னூரும் தமிழே
கவியாலே நான் கூறும் மொழியே
செவியேறும் கேட்க சுவையும், இனிமையும்
மூத்தோருக்கு மூத்த என் தாய்த்தமிழே
முத்தமிழ் கமழ வணங்குகின்றேன் உனையே

முத்தூரில் முதல்வனாய்
பாலையடி அப்பனாய் தலம் கொண்ட வினாயகரே போற்றி
பிறை சூடி எம் பெருமான்
குறை களையும் எம் ஊரில்
நிறை செல்வம் நீட்டுகின்ற இன்பம்
நட்புடன் நின்புகழை
நா மணக்க நவில்கின்றேன்
சித்தத்துள் தேனாய்
அமர்ந்த சிவபெருமானே
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன் .

பெரும் கவி படைத்து
பெரும் புகழ் பூர்த்த
பெருமை மிகு அறிஞர்களையும் கவிஞர்களையும்
இன் தமிழாலே
பெருமையோடு வணங்குகின்றேன் .

அழைப்பைக்கண்டு ஆனந்தமாய்
வந்தமர்ந்த அவையோருக்கு என் வணக்கம்
முளைக்கும் கவி கேட்க
சளைக்காமால் வந்த
சபையோருக்கு வணக்கம்
எனது புரட்டப்படாத பக்கங்கள் என்ற தலைப்பில் எனது கவிதைத்தொகுப்பு இலக்கிய வானில் பறக்க எத்தனிக்கின்றது என்பதில் மிக்க மகிழ்ச்சி
நான் எழுதுவது கவிதைகளா? என எனக்குள்ளே கேள்வி எழுவதுண்டு உங்களிடமும் அதை வினாவுகின்றேன் பலர் என் கவிதைகளை பார்த்தவுடன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறி ஊக்கமளித்திருக்கின்றார்கள்
பல கவிஞர்களின் வாழ்த்துக்களும் ,பாராட்டுக்களும் இருக்கின்ற வரை மலை இடுக்குகளில் விழுந்தாலும் இந்த விதை விருட்சமாக வளரும் என்பதில் ஐயம் எனக்கில்லை
பல பத்திரிகைகளில் எனது வினாவுக்கான விடை கிடைத்திருக்கின்றது வானொலிகளில் எனது கவிதைக்கு களம் கிடைத்திருக்கின்றது அவ் ஊக்கமே பல கவிதைகள் எழுத வழிமைத்துக்கொடுத்துள்ளது என்பது உண்மை
இன் நேரத்தில் என்னை கவி எழுத ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள் உங்களுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் எனது எழுத்துப்பயணத்தில் இருக்க வேண்டும் என்பது எனது பெரும் அவா எனது கவிதைகள் நூலாக வெளியிட வேண்டுமென்று ஆர்வம் காட்டியதோடு அருமையாக முன்னுரையையும் எழுதிகொடுத்த ஆசிரியர் , கவிஞர் அரசையூர் மேராஅவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
எனது கவிதைக்கான அணிந்துரையினை எனக்கு மிகவும் பிடித்த ஒரு கவிஞர் அவரின் குரலில் கவிதை கேட்டால் தானாக பேனா எழுந்து நிற்கும் அப்படியான கவிதைக்கான குரல் வளம் அமைந்த கவிஞர் வன்னியூர் செந்தூரன் அவர்களுக்கு எனது நிறைவான நன்றி,
வாழ்த்துரையை கேட்டதும் எந்த விதமான சங்கடங்களின்றி எழுதி கொடுத்த எனது மனம்கவர்ந்த கவிஞர் கல்லாறு சதிஸ் அண்ணா அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி,
என்னைப்பற்றிய அறிமுக குறிப்பினைத் தந்த கவிதாயினி வேதிகா பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி
அட்டை வடிவமைப்பினை செய்து தந்த தம்பி ச.துசான் அவர்களுக்கும் ,எனது சகோதரர் தேவா,என் குடும்பத்தினர், என் இனிய உறவுகள் எனது நண்பர்கள் ,நண்பிகள் அனைவருக்கும் எனது நன்றியைக் கூறிக்கொள்வதில் மனமகிழ்ச்சி அடைகின்றேன்
இன் நிகழ்வு சிறப்பாக இடம்பெறுவதற்கு ஆசியுரை வழங்கிய முதலைக்குடா ஸ்ரீ பாலையடி விநாயகர் ஆலய முன்னாள் பிரதம குரு திரு சோ. சிவசூரியம் குருஅவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துகொண்டு
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஞா .ஸ்ரீ நேசன் அவர்களுக்கும் மற்றும் நூல் நயவுரையை சிறப்பாக நிகழ்த்திய விரிவுரையாளர் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகம் திரு .த . மோகனதாசன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன் நிகழ்வினை தலைமை ஏற்று நடத்தி முடித்த தலைவர் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றிய கவிஞர் மேரா அவர்களுக்கும்
முதற் பிரதி பெற்றுசென்ற செந்தூரன் ஸ்ரோர் உரிமையாளர் ப.திருச்செந்தூரன் அவர்களுக்கும்
இன் நிகழ்வினை சிறப்பாக தொகுத்து வழங்கிய நண்பன் திரு இ .குகநாதன் அவர்களுக்கும்
எனது கவிதை நூலினை வெளியீடு செய்த பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தினருக்கும் இவ்வேளையில் நன்றிகயைத் தெரிவித்துகொள்கின்றேன்
நூல் வெளியீடு விழா பற்றி பிரசுரம் செய்த அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பிரசுர அன்பளிப்பு செய்த திருமதி பெ. நர்மதா அவர்களுக்கும்
இன் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த நண்பர்கள் நலன் விரும்பிகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்வதோடு
எனது புரட்டப்படாத பக்கங்ளும் எங்கோ ஓர் மூலையில் புரட்டப்படாமல் கிடக்கலாம் ஆனால் எங்கோ ஒரு மூலையில் யாரேனும் ஒருவரால் என்றோ ஒரு நாள் புரட்டப்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றது
திறமைகள் இருக்கின்ற போதிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போவதால் எங்களுடைய திறமைகள் காணாமல் போகின்றது
எங்கள் மொழி ,எங்கள் பண்பாடு, எங்கள் வரலாறும் காணாமல் போகாமல் இன்னும் மிளிருகின்றது என்றால் கலைஞர்கள் தான் காரணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
இந்த நாள் நான் முதற்படி எடுத்து வைக்கும் அற்புத நாள். எந்த சூழ்நிலையிலும் எந்தக்காரணத்தினாலும் எங்களுக்கு ஏற்படுகின்ற அவலங்கள் ஏமாற்றங்கள் எங்கள் வீரதீரங்களை வார்த்தைகளாக கொட்டித்தீர்க்க தயங்க மாட்டேன் என இன் அரங்கத்தில் கூறிக்கொள்கின்றேன்.
எங்கள் மக்களின் வாழ்வில் படும் இன்பதுன்பங்களை நன்கறிந்தும் தெரியாதவர் போல் வாழ்ந்துவிட எம்மால் முடியாது.
இப்போது நாங்கள் ஏந்தியிருக்கும் பெரும் ஆயுதம் பேனா இதனால் மூடிமறைக்கும் எங்கள் அத்தாட்சிகளை திரையிட்டுக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை எமக்குள் இருக்கின்றது. அந்த வைராக்கியத்துடன் எனது பயணம் தொடரும் என்று கூறிக்கொண்டு
‘’ இன் சொல் தேடி
இவன் இன்பக்கவி கோடி
தேன் வார்த்தைகள் நீட்டி
வான் முழுதும் கொடிகட்டி
என் தமிழ் வாழும் பல உள்ளங்கள் கோடி ‘’
இத்துடன் இனிதாய் நிறைவு செய்கின்றேன்

நன்றி வணக்கம்