என் எழுத்துப் பயணத்தில்… யாமறிந்த புலவரிலே…. -இந்துமகேஷ்

காலையில் கண்விழித்துக்கொள்ளும்போது நேற்றையப் பொழுது கனவாய்க் கலைந்துவிட்டிருப்பது தெரிகிறது.
நாள் வாரம் மாதம் வருடம் என்று காலக்கணக்கில் கரைந்து போய்விடுகிறது வாழ்க்கை.
நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் நிலையாமை காட்டும் உலகில் நின்றுநிலைப்பவை நாம் விட்டுச்
செல்லும் நம்மைப்பற்றிய நினைவுகள்தான்.
அவற்றை அடையாளப்படுத்தும் இலக்கியங்கள்தாம்.

வாசிப்பு என்பது ஒரு இனிமையான அனுபவம்.
கற்பனையோ யதார்த்தமோ எதுவாயினும் எழுத்தாளன் காட்டுகிற புதிய உலகத்துக்குள் நுழைந்து
அதற்குள் ஐக்கியப்பட்டுப் போகிற அற்புத அனுபவம். கண்ணெதிரே விரிந்து கிடக்கிற உலகத்துக்கு
அப்பால் புதியதொரு உலகத்தினுள் பிரவேசித்து இன்னொருவர் அந்தரங்கத்தில் தானும் ஒரு
விருந்தாளியாய் தன்னை மறக்கிற சுகானுபவம்.

வாசித்து முடித்தபின்னும் மிக நீண்ட காலத்துக்கு நமது மனங்களுக்குள் நிழலாடிக் கொண்டிருக்கிற
படைப்புக்கள் – அவை எத்தகையனவாக இருந்தாலும்- இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுவிடுகின்றன.

„எதிர்காலத்தில் நீ எதுவாகப் போகிறாய்?“
– பள்ளிப்பருவத்தில் எப்போதாவது எல்லோரிடத்திலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரும்பாலும்
பதில்கள் எதிர்காலத்தில் வருவாயோடு சம்பந்தப்பட்ட அரச பணி குறித்ததாகவே இருக்கும்.
டொக்டராக, எஞ்சினியராக, ரீச்சராக என்று வரும் பதில்கள்.

„எழுத்தாளனாக!“ என்ற பதில் என்னிடமிருந்து வந்தபோது சகமாணவர்கள் என்னை வியப்போடு பார்த்தார்கள்.
„எழுத்தாளன் என்றால்..?“
„இந்தக் கதை கட்டுரை கவிதை என்று எதையாவது கிறுக்குவது!“
„ஆனால் இது உத்தியோகம் இல்லையே?!“
„ஏன் இல்லை..? நமக்குத் தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் என்றானே பாரதி!“
„ஆர்..?“
„பாரதியார்!“
„பாவம்… வாழ்க்கையிலை அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார்!“

ஆனால் இன்னும் வாழ்கிறான் பாரதி.
அவனது கனவுகள் வாழ்கின்றன.

சின்னவயதில் நான் படித்த பாரதியின் முதல்பாடல்-
„ஓடி விளையாடு பாப்பா!“

பாரதியார் என்பவர் சின்னப் பிள்ளைகளுக்குப் பாட்டு எழுதும் ஒரு புலவர் என்பதாகமட்டுமே அப்போது
எனக்குத் தெரிந்தது. பின்நாட்களில் இலக்கியப் பாடத்தில் இடம்பெற்றிருந்த பாரதியின் பாடல்கள்மூலம் அவர் என்னுள் தன்னை இணைத்துக்கொண்டார்.

அவர்மேல் நான் கொண்டிருக்கும் பிரியம் இன்னும் தொடர்கிறது.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை…
-என்பானே பாரதி.

அந்தவரிசையில் தானும் ஒருவனாய் சங்கமித்துவிட்ட பெரும் புலவன் அவன்.

இன்றைய தலைமுறையின் குரல்வழியாக அவன்குரல் கேட்கிறது. பாரதியின் வடிவில் எங்கள் இளந்தளிர்களை பூவரசு மேடைகளுக்குக் கூட்டிவருவதில் எனக்கு ஆனந்தம் அதிகம்.