**எவனோ ஒருவன் எழுதுகிறான்**

இன்றோடு நிறைவடைகிறது என்வாழ்வில்
இருபத்தியோரு ஆண்டுகள் பூமியிலே.
இந்தியாவிலிருந்து சமாதானம் பேசவென
இலங்கைக்கு வெள்ளைக்கொடியுடன் வந்த
இராணுவத்தினர் எம்மை கொன்றொழித்த
இடர்மிகுந்த கோரமான காலகட்டமது,
இயன்றவரை சமாளித்துப் படித்த்தேன்,
இனியும் சகிக்கமுடியாது போகவே நானும்
இயலாமையால் எடுத்த முடிவுதான்
இந்த பிறநாட்டில் குடியேறும் படலம்.
இருப்பில் கிடந்த காசு நகைகளோடு
இருந்த வீட்டை ஈடுவைத்த பணத்தோடும்
இங்கிலாந்து போக ஒழுங்குகள் நடந்தது.
இன்று எனது சாவிப்பிறந்த நாளதிலே
இருகண்களைப் போல எனைக்காத்த
இருவரையும் நான் பிரியப் போகிறேன் .
இன்றுவரை பிரிந்ததில்லை என்னை
இந்த உலகுக்குத்தந்த நல்லுள்ளங்களை.
இனியெப்போது காண்பேனென்பதும் ,
இதுவே நாட்டிலென் கடைநாளென்பதும்
இன்னுயிர்க் காதலியின் ஈரவிழிகள் வேறு
இடைக்கிடை வந்து அடிநெஞ்சைக்கிள்ளவும்
இன்னுமொருபுறம் எனது சுற்றம் சூழலை
இழக்கப் போகிறேன் என்னும் ஏக்கமும்
இயன்றவரை என்மனதை கட்டுப்படுத்தியும்
இயலாமல் கண்கள் நீரை சொரிந்தன.
இளமைக்கனவுகளை கசக்கியெறிந்தபடி
இன்னுமோர் புதிய உலகமாகிய ஐக்கிய
இராற்சியத்தை நோக்கிப் பறக்கலானேன் .
புல நேசன்