ஒரே ஒரு கதை! -இந்துமகேஷ்

எப்படி ஆரம்பிப்பது?“ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா!““வேண்டாம்… சரித்திரக் கதைகள் இப்போது சலிப்பைத் தரும்!““ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு சிங்கம்!““சிங்கமா..? அதுவும் ராஜா… மிருகங்களின் ராஜா!““விடுவோம். வேறு கதை?““ஒரேயொரு ஊரிலே ஒரேயொரு மந்திரவாதி!““மாயா ஜாலம்? ம்… ம்..!““மந்திரவாதி அங்குள்ள அரசகுமாரிமீது மையல்கொண்டான். அவளைக் கவர்ந்து வருவதற்காக ஒரு முனிவனைப்போல் வேடமிட்டு…““பிறகு? பிறகு?““பிறகு என்ன… அங்கு வேட்டைக்கு வந்த ஒரு அழகிய இராஜகுமாரன் வழியில் எதிர்ப்பட்டு அவளைக் காப்பாற்றிக்கொண்டு போக… சுபம்!““போரடிக்குது..!““என்ன?““கதை! உந்தக் கதை!““முந்தி எழுதினவங்கள் ஒருத்தனும் ஒண்டைக்கூட மிச்சம்விட்டு வைக்கேல்லை! எழுதிப்போட்டாங்கள்… எல்லாத்தையும் எழுதிப்போட்டாங்கள்!““எல்லாத்தையும்..?““ம்… எல்லாத்தையும்…““அப்ப விடு எழுதவேண்டாம்…!““சரி!““எனக்கு ஒரு சந்தேகம்!““என்ன?““நாங்க இப்ப வாழ்கிறம்““ஓம் வாழ்கிறம்.““எங்களுக்கு முந்தியும் சனங்கள் வாழ்ந்துது!““ஓம்!““இப்ப அவையள் இல்லை!““ஓம்… இல்லை!““ஆனால் நாங்கள் இருக்கிறம்!““இருக்கிறம்!““முந்தி இருந்தவையைப் போலத்தான் பிறந்து வளர்ந்து படிச்சு உழைச்சு கலியாணம் முடிச்சு பிள்ளையளைப் பெத்து…!““இது இயற்கைதானை?!““அப்ப நாங்கள் இருந்தமோ இல்லையோ… உலகம் இருக்கும். உயிர்கள் இருக்கும். வாழ்க்கை இருக்கும்..!““அதுக்கென்ன?““ஆரும் ஒரு முழுமையான வாழ்க்கை வாழமுடியாது… முழுக் கடமையை முடிச்சிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடவும் முடியாது! இருக்கும்… எச்சங்கள் இருக்கும்… எப்பவோ ஆரும் அறியாத ஒரு மனிசன்ரை எச்சங்களாய் இண்டைக்கு எத்தனை கோடி மனிசர்… இனியும் பல கோடியாய் பல்கிப்பெருகி…!““இப்ப என்ன சொல்லவாறை?““எழுது… எத்தினையோ கதைகள்… ஒவ்வொருத்தரைச் சுற்றியும் எத்தனையோ கதைகள்… எல்லாத்தையும் எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்கள் என்கிறதிலை உண்மையில்லை… எழுதலாம் எழுது!“பேனையைக் கையில் எடுத்தாயிற்று…“என்னை எழுதப்போகிறாயா? „என்று எத்தனை முகங்கள்…உண்மைக் கதை எழுதக்கூடாது… ஆனால் படிக்கிறபோது உண்மைமாதிரி இருக்கவேணும்…இலங்கை வானொலியில் முந்தியொருக்கால் கேட்ட பகிடி நினைவுக்கு வருகிறது…அப்புக்குட்டியும் உபாலியும்…வீட்டிலை அப்புக்குட்டியின் மனைவி இல்லாத நேரம்…உபாலியும் அப்புக்குட்டியும் கொஞ்சநேரம் தண்ணி அடிச்சு கோழிக்கறி சாப்பிட பிளான் போடுகிற சமயம்…அப்புக்குட்டியின் மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வாத்தியார் கேட்ட கேள்வியுடன் வீட்டுக்கு வருகிறான்.கேள்வி…’கோழிக்கு ஏன் கோழியெண்டு பேர் வந்துது?’அப்புக்குட்டி முளிசுகிறார்.“உபாலி சொல்லனடா!“உபாலி மாட்டிக்கொள்கிறார்…“அதிங் வந்திங்… இந்தக் கோளிக்கு ஏன் கோளிண்டு பேர் வந்துது.. அதானே? அதிங் இந்த மொத மனிசன் கோளியைப் பாக்கேக்குள்ளை அதிங் கோழிமாதிரி இருந்துதிங்… அதான் கோளிண்டு பேர் வந்துது…!“கோழிமாதிரி இருந்தால் அது கோழி…கதைமாதிரி இருந்தால் அது கதை…யாரையும்பற்றி எழுதக்கூடாது…சரியில்லை… அது மனிதாபிமானமும் இல்லை…ஆனால் எழுதித் தொலைத்த பிறகு இது யாரையோ சொன்னதுபோல் இருக்கிறதே என்றால்… பாவம் கதை…!ஆகவே யாவும் கற்பனை என்று அடிக்குறிப்புப் போட்டுவிட்டால் பாதுகாப்பு… இந்த அடிக்குறிப்புகளுடன்தான் பலர் உண்மைக் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்…’என்னை எழுது‘ என்று சொன்ன எல்லா முகங்களையும் பின்னால் தள்ளிவிட்டு… ஒரு முகம்…ஒருமுகம் என்றுதானே சொன்னேன்…அது பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று எப்படி ஊகித்துக் கொண்டீர்கள்?பெண் என்றாலே கவர்ச்சி என்று மற்றொரு பொருள் உண்டு…ஆணென்பதால் இப்படிச் சொல்கிறேனா?இல்லை. பெண்ணுக்கும் பெண்தான் கவர்ச்சி!நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போய்ப்பாருங்கள்…பெண்ணை ஆண்மட்டும் கவனிப்பதில்லை…பெண்ணைப் பெண்ணும்தான் கவனிக்கிறாள்… ஒரு பெண்ணின் நடை என்ன உடை என்ன பாவனை என்ன என்பதையெல்லாம் ஒரு ஆணைவிட இன்னொரு பெண்ணே அதிகமாய் அவதானிக்கிறாள்…ஆக பெண்களைக் கவர்வதற்கும் பெண்ணால்தான் முடிகிறது…ஆகவே பெண்ணுக்கு மறுபெயர் கவர்ச்சி…உங்களுக்கு ஒருவேளை இந்தக் கதையின் நாயகி கவர்ச்சியில்லாதவளாக அழகில்லாதவளாகத் தோன்றலாம்… அதற்காக எனக்கும் அப்படித் தோற்ற வேண்டுமா என்ன?என்ன கறுப்பி என்பீர்கள்…நிறங்களில் கறுப்பும் ஒரு நிறம்தான்…உங்கள் தலைமுடி, கண்விழி எல்லாம் கறுப்புத்தான். பிடுங்கியா எறிந்துவிட்டீர்கள்? உங்கள் கண்ணுக்கு முன்னாலேயே அப்பிள் நிறத்து ஐரோப்பியப் பெட்டை கானாக்காரனின் கையைப் பிடித்துக்கொண்டு போகும்போது அந்தக் கறுப்பன்மேல் உங்களுக்கு ஒரு பொறாமை தோன்றவில்லை?கறுப்பு என்னய்யா கறுப்பு…என்ன கொஞ்சம் கட்டை என்பீர்கள்…ஜப்பான்காரன் கட்டைதான். அவன் சாதித்ததில் பாதியாவது உங்களால் சாதிக்க முடிந்ததா?பிறகென்ன கட்டையும் குட்டையும்…இப்படி ஒண்டொண்டும் குறைசொல்லிக் கொண்டிருந்தால்… விடுங்கோ…!இவள் அவ்வளவு வடிவில்லை.ஆனால் இவளோடை பழகத் தொடங்கினவைக்கு சாகும்வரைக்கும் இவளோடையே கூட இருக்கவேணும்போலத் தோன்றும்.அப்படி ஒரு எளிமை. இளகின சுபாவம்.வெளிநாட்டில ஒரு நல்ல மாப்பிளையாப் பார்த்துப் பேசி இவளைப் பெத்ததுகள் இங்கை அனுப்பிவைக்க இங்கை அவன் கொஞ்சக்காலம் இவளோடை ஒண்டாய்க் குடும்பம் நடத்திப்போட்டு வேறை ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கனடாவுக்கு மாறிட்டான். அங்கை போய்த் தம்பி நிறையப் பிரச்சினையளிலை சிக்குப்பட்டுக் கடன்காரனாகி திரும்பியும் இவளிட்டையே வந்திட்டேர்… என்ன செய்யிறது… எவ்வளவுதான் துரோகம் செய்தாலும் தமிழ்ப்பெட்டை தன்ரை பண்பை மறப்பாளே? புருசனை மன்னிச்சு ஏற்றுக்கொண்டாள்… ஆனால் கனகாலம் ஒண்டாய் இருக்க முடியேல்லை… பொலிஸ்வந்து ஆளைக்கொண்டுபோய் உள்ளுக்கை வைச்சிருக்குது…’ஏனாம்?’”இவனிலை ஒரு பிழையுமில்லை… ஒருநாள் இவன் தனிய றோட்டிலை நிக்கேக்குள்ளை ஆரோ ஒருத்தன் ஒரு சூட்கேசைக் கொண்டுவந்து இவன்ரை கையிலை குடுத்திருக்கிறான்… ஆர் எவர் எண்டு விசாரியாமல் இவனும் அதை வாங்கிட்டான்… பொலிஸ்வந்து ஆளைப் பிடிச்சுப் பார்த்தால்- மருந்து. இப்ப மாப்பிள்ளை உள்ளுக்கை.”அப்ப பெட்டை?””என்ரை புருஷன் நல்லவர் ஒரு பாவமும் அறியாதவர் எப்பிடியும் அவரை நான் வெளியிலை கொண்டு வந்திருவன் இல்லாட்டில் இந்த நகரமே எரிஞ்சு சாம்பலாப் போகும் எண்டு ஆவேசப்பட்டுக்கொண்டு திரியிறாள்…!”“அண்ணை!““ஓம்…““நீங்கள் எவ்விடம்..?““நானோ ஏன்..?““சும்மா கேட்டன்… எவ்விடம்?““புங்குடுதீவு!““புங்குடுதீவிலை எந்தப்பக்கம்?““கிழக்கூர்!““கிழக்கூரிலை?““கண்ணகியம்மன் கோயிலுக்கு முன்னாலை…!““அதுதானை பார்த்தன்… இதுமாதிரிக் கதையெல்லாம் நீங்கள்தான் எழுதுவியள்… அண்ணை. சும்மா கண்ணகி கதையை மாத்திமாத்தி எழுதாமல் புதுசாய் ஏதும் எழுதுங்கோ!““கண்ணகி கதையா?““பின்னை…? உங்கடை கதாநாயகி கண்ணகி… புருஷன் கோவலன்… கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போனபெட்டை மாதவி…!““அப்ப நான் கொப்பியடிக்கிறனெண்டு சொல்லுறீர்?““இல்லை மாத்தி எழுதுறீங்கள் எண்டு சொல்கிறன்!““சரி விடும்… இனி நான் ஒண்டும் எழுதேல்லை…““இது நல்லது… கையைக் காலைச் சும்மா வைச்சுக் கொண்டு வாயை மூடிக் கொண்டிருக்கிறதுதான் புத்திசாலியளுக்கு அழகு…“நான் பேனாவை மூடி ஒருபுறம் வைத்தேன்…’என்னை எழுது… என்னை எழுது‘ என்று அனுபவங்கள் அரிக்கின்றன.ஏன் சோலி?சும்மாயிருத்தலே சுகமாம்! – சொல்கிறார்கள்.ஓம்!