****கடல் மாதாவின் கருணை ****

மாணிக்கக் கல்போல
மிளிரும் கடலிலே,
மண்டான் போட்டுமே
இன்று , என் மாமனும்
கரைவலை விரித்து
மாபெரும் சுறா ஒன்றை
மடக்கிப் பிடித்து விட்டானே ,
மடி நிறைய மீன்களை அந்த கடல்,
மாதா இன்று எங்களுக்கு ஈர்ந்தாளே ,
மாநகரச் சந்தையிலே நானும் இதை
மாட்டு விலையில் விற்றுமே ,
மஞ்சள் காணியை அடகு மீட்பேன் ,
மற்றைய மீன்களையெல்லாம் விற்று
மல்லிகை மொட்டுச்சங்கிலியும் ,
மாமனுக்கு நல்ல சாந்துப்பட்டிலே ,
மாத்து வேட்டி சட்டையும் கால் செருப்பும்
. மாரியம்மன் திருவிழாவுக்கு உடுக்க ,
மஞ்சள் சருகை சேலையொன்று வாங்குவேன் ,
மணல்க் கடற்கரையிலே நானும் ,
மகாராணி போல கைகோர்த்து- என்
மாமனோடு சோடியாய் நடப்பேன்.என
மலர்ந்த நினைவுகளோடு தானுமிந்த
மங்கையவள் தன் எண்ணத்தில்
மணக்கோலக் கனவுகளும் கண்டாள் .
கற்பனை நேசன்